வியாழன், 21 மார்ச், 2019

வசந்தவிழா தமிழர்களின் காதல் விழா

Karthikeyan Fastura : அனைவருக்கும் வசந்தவிழா வாழ்த்துக்கள். இன்று தமிழருக்கு முற்றிலும் அந்நியமாகிவிட்ட இந்த விழா சங்ககாலத்தில் மிக சிறப்புற கொண்டாடப்பட்டிருக்கிறது. பனிக்காலத்திற்கும்
வேனிற்காலத்திற்கும் இடைப்பட்ட இந்த காலத்தை இளவேனிற்காலம் அல்லது வசந்தகாலம் என்று அழைத்தார்கள்.
இந்த காலத்தில் இலையுதிர்ந்து போன மரங்கள் துளிர்க்க ஆரம்பிக்கும். எங்கெங்கும் மலர்கள் பூத்துக்குலுங்கும். தேனிக்கள் பெருகி கூட்டம் கூட்டமாக பறந்து செல்லும். இது இயற்கையின் காதல் காலம். இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த அன்றைய தமிழ் சமூகமும் இதை புரிந்துகொண்ட இதை காமன் விழா என்றும், வசந்த விழா என்றும் கொண்டாடினர். இதை இலக்கியங்கள் பதிந்திருக்கின்றன. காமவேள் விழவு, உள்ளி விழவு என்றும் குறிப்பிடுகிறது
ஆண், பெண் சமத்துவம் பேணப்பட்ட அந்த காலத்தில் விழாவானது தனது துணையை தேடிக்கொள்ளும் விழாவாக ஒரு Mating Festival ஆக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்காக இளைஞர்கள், இளம் பெண்கள் காத்திருந்தனர்.

கொங்கு நாட்டில் ஒலி எழுப்புகின்ற மணிகளைக் கோத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நடுத்தெருக்களில் ஆடிப்பாடிக்கொண்டு இவ்விழாவைக் கொண்டாடினர் என்பதை அகநானூற்றில் “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” (பா 368) என்றும், கலித்தொகையில் ”மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர், வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ” (35:13-14) என்றும் குறிப்பிடப்படுகின்ற வில்லவன் விழவு என்ற காமன் பண்டிகையே சங்ககாலக் காதலர் தினமாக கொண்டாடப்பட்டது.
கலித்தொகையில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலில் (27:24-26)
”வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்?’
என ஆங்கு,
நோய் மலி நெஞ்சமோடு இனையல், தோழி!
நாம் இல்லாப் புலம்பாயின், நடுக்கம் செய் பொழுதாயின்,
காமவேள் விழவாயின், ‘கலங்குவள் பெரிது’ என,”
என்று வைகை ஆற்றங்கரையில் நிகழ்ந்த இந்த வசந்தவிழாவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் இந்த உள்ளி விழாவானது இளைஞர்களும் இளம்பெண்களும் ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக்கொண்டும், சாயப் பொடிகளை தூவிக்கொண்டும், மதுபானம் அருந்தி ஊளையிட்டுக்கொண்டும் குதித்துக்கொண்டும் சில வேளைகளில் இருபொருள்படும் கொச்சையான பாடல்களைப் பாடிக்கொண்டும் கொண்டாடுவார்களாம். இந்த உள்ளி விழா வடக்கே செல்லும்போது ஹூலி என்றும் ஹோலி என்றும் மருவி இருக்கும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சைவ வைணவ வேதிய மதங்கள் உள்ளே நுழைந்து மக்கள் இயல்பாக கொண்டாடிக்கொண்டிருந்த விழாக்களை மதத்துடன் தொடர்பு படுத்தி, மதத்துடன் பொருந்தாத விழாக்களை முற்றிலுமாக அழித்து அல்லது கைவிட்டு மறைந்து போனது. இதிலிருந்து தப்பி பிழைத்து மதங்களோடு இணையாத ஒரே விழா என்றால் அது பொங்கல் விழா தான்.
ஏன் ஹோலி கொண்டாடப்படுவதில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆண் பெண் சமத்துவம் மறுக்கப்பட்டு, கற்பு நெறி என்று பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, சாதிய ஏற்ற தாழ்வுகள் கொண்டு அதை பெண்களின் மீது கட்டமைக்கப்பட்ட தென்னிந்திய சமூகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாத பண்டிகையாக மாறிவிட்டது. வடக்கில் கூட அந்தந்த குழுவிற்குள், குடும்பத்திற்குள் நடக்கின்ற விழாவாக அல்லது ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாக என்று தான் பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது. கல்லூரிகளும், பல்கலைகழகங்களும் தான் இது போன்ற தடைகளை உடைத்து சகஜமாக கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகை தமிழகத்தில் பரவலாக கொண்டாடப்பட வேண்டும். திராவிட கட்சிகள் ஆட்சி செய்யும் நம் மாநிலம் பலவற்றில் முற்போக்காக திகழ்கிறது. பாலின வேறுபாடு குறைந்துள்ளது. ஆனால் இன்னமும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் தான். திராவிட, அம்பேத்காரிய, கம்யூனிச முற்போக்கு கூட்டணி சித்தாந்தங்கள் பரவலாக்க இந்த பண்டிகையை அவசியம் கொண்டாட வேண்டும். இதைவிட சிறந்த முற்போக்கான ஆண் பெண் சமத்துவம் போற்றும், காதல் போற்றும் ஒரு பண்டிகை இருக்க முடியாது.
அனைவருக்கும் வசந்தவிழா வாழ்த்துக்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக