சனி, 2 மார்ச், 2019

சிசிடிவி: தனது சேமிப்புப் பணத்தைக் கொடுத்த சிறுமி!

சிசிடிவி: தனது சேமிப்புப் பணத்தைக் கொடுத்த சிறுமி!மின்னம்பலம் : சென்னையில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்குத் தனது சேமிப்புப் பணத்தைக் கொடுத்த சிறுமிக்குக் காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மேற்கொண்டு வருகிறார். இதன்மூலம் பல்வேறு குற்றச் செயல்கள் குறைந்திருப்பதாகத் தெரிவித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, சிசிடிவி கேமரா பொருத்துவதற்குப் பலரும் உதவி வருகின்றனர். இத்திட்டத்திற்கு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை காட்டுப்பாக்கம் ஜாஸ்மின் கோர்ட் என்ற பகுதியில் வசித்து வருபவர் சத்யநாராயணன். இவரது மகள் ஸ்ரீஹிதா (9) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி சில வாரங்களுக்கு முன் ராயப்பேட்டையிலுள்ள தனது தந்தை சத்யநாராயணாவின் அலுவலகத்திற்குச் சென்றபோது, அங்கு காவல் துறையினர் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்துக் கலந்தாய்வு நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது, ஸ்ரீஹிதா சிசிடிவி கேமரா பொருத்துவதற்குத் தனது சேமிப்பு பணத்தைத் தருவதாகக் கூறினார். இதற்கு காவல் துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். சில நாட்கள் கழித்து, ஸ்ரீஹிதா தனது தந்தையுடன் சென்று காவல் அதிகாரிகளைச் சந்தித்து தனது சேமிப்பு பணமான 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்தார்.
இது குறித்து அச்சிறுமி கூறுகையில், “சிசிடிவி கேமராவால் காவல் துறையில் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக எனது தந்தை கூறியுள்ளார். அதனால்தான், காவல் துறைக்கு என்னால் முடிந்த சேமிப்பு பணத்தைக் கொடுத்தேன்” என்று தெரிவித்தார்.
இதனை அறிந்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இன்று (மார்ச் 2) சிறுமி ஸ்ரீஹிதாவை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக