செவ்வாய், 5 மார்ச், 2019

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி!

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி!
மின்னம்பலம் : அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிகளை இறுதி செய்யும் பணிகளில் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை இணைந்துள்ள நிலையில், தேமுதிக இன்று கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் நாளை தமிழகம் வரவுள்ளதையடுத்து, இன்று மாலைக்குள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் அதிமுக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 4) இரவு புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அங்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்குவது எனவும், இரட்டை இலை சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் பன்னீர்செல்வம், பழனிசாமி, ஏ.சி.சண்முகம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் ஒப்பந்தத்தை வாசித்த பன்னீர்செல்வம், “வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் புதிய நீதிக் கட்சியும் இணைந்து தேர்தலைச் சந்திப்பது என இன்று முடிவெடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அதிமுக சின்னமான இரட்டை இலையில் புதிய நீதிக் கட்சி போட்டியிடும். காலியாகவுள்ள 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுகவுக்குப் புதிய நீதிக் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக