புதன், 13 மார்ச், 2019

பொள்ளாச்சி திருநாவுக்கரசுகள் ஏன் உருவாகிறார்கள், ஆபாச வீடியோக்கள் எப்படிப் பரவுகின்றன?- ஓர் உளவியல் அலசல்

tamil.thehindu.com - க.சே.ரமணி பிரபா தேவி : பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தகுமார் ஆகியோர் நண்பன் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி, அழைத்து வந்து ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டிய சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், பொள்ளாச்சியில் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒருவரின் மனைவி, தனியார் கல்லூரிப் பேராசிரியை, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் இளம் பெண்கள், சில குடும்பப் பெண்கள் என 60-க்கும் மேற்பட்டோர் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பான வீடியோக்கள் சில வெளியான நிலையில், பாலியல் வக்கிரங்களை நிகழ்த்தும் திருநாவுக்கரசு போன்றவர்கள் ஏன் உருவாகிறார்கள், ஆபாச வீடியோக்கள் எப்படிப் பரவுகின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் குறித்து மனநல மருத்துவர் அசோகனிடம் விரிவாகப் பேசினோம்.

பொதுவாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் அவற்றில், தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வது ஏன்?
இதற்கு நார்சிஸம் என்னும் உளவியல் பகுப்பாய்வுக் கோட்பாட்டை உதாரணமாக வைக்கிறேன். நம்மை அடுத்தவர்கள் ரசிக்க வேண்டும், பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று எல்லோருமே எதிர்பார்க்கிறோம். அந்த மனநிலை அளவோடு இருக்கும் பட்சத்தில் அது உத்வேகத்தை அளிக்கும். ஆனால் அதிகமாகும்போது பிரச்சினை ஆரம்பிக்கிறது. பொதுவாகவே பெரும்பாலான மனிதர்களுக்கு நிஜ ஆளுமையில் பிரச்சினை இருக்கிறது. அதற்கு ஊடகங்களே பாதுகாப்பான முகமூடிகளாக அமைகின்றன. அவற்றின் மூலம் தங்களுக்குப் பிடித்த வகையில் தற்காலிகமாக தன்னை உருமாற்றிக் கொள்கின்றனர்.
புரொஃபைல் போட்டோக்கள், குடும்ப புகைப்படங்கள், சுற்றுலா படங்கள் சரி.. அந்தரங்க, நிர்வாணப் படங்களைப் பொதுவெளியில் நண்பர்களுக்கு அனுப்புவது என்ன மாதிரியான மனநிலை?
புனிதமாகவும், தூய்மையாகவும் இருவருக்கு மட்டுமே இடையில் இருந்த அந்தரங்கம் இன்று ரசனையாக மாறிவிட்டது. அந்தரங்கத்தை ரசனையாக்கி அடுத்தவர்களுக்கு அனுப்பும் வக்கிர உணர்வு மெல்ல ஏற்பட்டு வருகிறது. எதிர் தரப்பினரின் தொடர்ச்சியான மூளைச்சலவையும் இதற்குக் காரணம்.
பெண்களிடம் பேச்சின் மூலமாகவே ரகசியமாகத் தூண்டுவது முதல் படி. 'நாம்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறோமே, பின் என்ன தயக்கம்?' என்று நெருக்கத்துடன் பேசுவது,' நான் முதலில் என்னுடைய நிர்வாணப் படத்தை அனுப்புகிறேன், அடுத்து நீ அனுப்பு!' என்று கூறி தயக்கத்தை உடைப்பது ஆகியவை இதற்கான உதாரணங்கள். பெண்களின் அசட்டு தைரியமும் அதீத நம்பிக்கையும் இதற்கு அடுத்த காரணம்.
அப்படியென்றால் சமூக வலைதளங்களில் யாரையுமே நம்பக் கூடாது என்றுசொல்கிறீர்களா?
யாரையும் நம்ப வேண்டாம் என்றில்லை. எடுத்தவுடனே நம்பாதீர்கள் என்கிறேன். பார்த்தவுடன் இவர் இப்படித்தான் என்று அபிப்ராயத்தை வளர்க்க வேண்டாம். யாரையும் நேரில் பார்க்காமல் நம்பிக்கை வைக்காதீர்கள். ஆதார் அட்டை, நெட் பேங்கிங் தகவல்கள் ஆகியவற்றைப் பகிரும் முன் யோசிப்பீர்கள் அல்லவா, அதை அந்தரங்கத்தைப் பகிரும் போதும் செய்யுங்கள்.
உதாரணத்துக்கு நண்பரின் பார்ட்டிக்கு அழைப்பு வருகிறதா? முதலில் போக வேண்டுமா என்று யோசியுங்கள், திரும்பி வரும்போது போக்குவரத்து வசதி இருக்குமா, இல்லையென்றால் நண்பர்தான் கொண்டுவந்து விடுவாரா? அங்கேயே தங்கவேண்டி வருமா என்று முன்கூட்டியே யோசித்து முடிவெடுங்கள். பாலியல் உணர்வுகளைக் காதலாக நினைக்காதீர்கள்.
சித்தரிப்புப் படம்
 ஏன் தொடர்ந்து பெண்கள் குறித்த ஆபாசங்களே (புகைப்படங்கள், வீடியோக்கள்) அதிகம் பரப்பப்படுகின்றன?
பயாலஜிக்கலாக ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக வலிமை கொண்டவர்கள். இதனால் அவர்களை ஆண்கள் அடக்கி ஆள நினைப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் கருவிதான் ஆபாசங்களைப் பரப்புவது.
இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். இன்று குடும்பங்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசுவதே இல்லை. எல்லோருக்கும் தனித்தனியாக செல்போன்கள், தனித்தனி டிவிகள். உணர்ச்சிகள் நீர்த்து விட்டன. வக்கிர உணர்வு சாதாரணமாகிவிட்டது. அந்தக் காலத்தில் கெட்டவனாக இருக்கக் கஷ்டப்பட்டார்கள். குடும்பம், உறவினர்களுக்குத் தெரியாமல் சிகரெட் பிடிக்க, ஆபாசப் பத்திரிகைகளைப் படிக்க அவ்வளவு சிரமப்பட்டனர். ஆனால் இப்போது நல்லவனாக இருக்கத்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.
குழந்தைக்குக் கூட, விரல் நுனியில் கிடைத்துவிடும் இணையம் ஆபாசத்துக்கும் கடைவிரித்து விடுகிறது. இதனால் ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் எளிதில் பார்க்கப்படுகின்றன, அதிகம் பரப்பப்படுகின்றன.
பொதுவாக ஆண்கள் எல்லை மீறிப் பேசும்போது பெண்களின் உள்ளுணர்வே அதைக் காட்டிக் கொடுத்துவிடும் என்று கூறப்படுகிறதே? அவர்கள் ஏன் நோ சொல்ல யோசிக்கிறார்கள்?
இது எல்லோருக்கும் பொருந்தாது. அனுபவங்களும் அறிவுமே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எப்போதும் முன்னெச்சரிக்கையுடனே சில பெண்கள் இருக்கலாம். ஆனால் அனைத்துப் பெண்களுமே அப்படியில்லை. சம்பவங்கள் தொடர்ந்து வரிசையாக நடக்கும்போது அவர்களுக்கு யோசிக்க நேரம் இருக்காது. யோசிக்கவும் தோன்றாது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தகுமார், திருநாவுக்கரசு.
 இந்தப் பழக்கம் அடுத்தகட்டத்துக்குப் போகும் என்று தெரிந்தே, சில பெண்கள் தவறு செய்கிறார்களே?
தெரிந்தே செய்யும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்படி ரிஸ்க் எடுப்பவர்கள் அதற்கான விளைவுகளையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும். அழுவதோ, புலம்புவதோ கூடாது என்றார் அசோகன்.
சேலத்தைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அபிராமி இதை வேறொரு கோணத்தில் அணுகுகிறார். அவரிடமும் பேசினோம்.
பெண்கள் குறித்த புரிதல் ஏன் ஆண்களிடத்தில் இல்லை?
''பெண்கள் குறித்த சரியான புரிதல் முதலில் பெண்களிடமே இல்லை. பொள்ளாச்சி சம்பவத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். சில பெண்களே, பாதிக்கப்பட்ட பெண்களின் மீதுதான் குற்றம் சுமத்துகின்றனர். இங்கு பெரும்பாலானவர்களுக்கு தனி மனித ஒழுக்கம் இல்லை. அடுத்தவர் மீது பழிபோடுவதையேக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம்.
பெண்களை இழிவாக நடத்தும் ஆண்கள் அதை எங்கிருந்து கற்கிறார்கள்? சிறு வயதிலிருந்தே பெண்களைப் புரிந்து கொள்வது குறித்து சரியான முறையில் கற்றுக் கொடுக்க என்ன செய்யலாம்?
எல்லோரும் எல்லாவற்றையும் முதலில் குடும்பத்தில் இருந்தே கற்கிறோம். அப்பா, அம்மாவை எப்படி நடத்துகிறார், அண்ணன், தங்கையை எப்படி அழைக்கிறான் என்பது தொடங்கி பள்ளி, கல்லூரி, அலுவலகம் வரை இது நீள்கிறது. குடும்பத்தில் பாலின சமத்துவம் குறித்து நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். பெண்ணியம் மட்டுமே பாலியம் சமத்துவம் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பெண் என்பவள் பொருள் அல்ல; அவளும் சக மனுஷிதான் என்ற புரிதலை அவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். அடுத்ததாக பள்ளியில் பாலியல் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' சொல்லிக்கொடுப்பது போல, வளர்ந்தவர்களுக்கு பாலின ஈர்ப்பு, காதல், காமம் குறித்தும் விளக்க வேண்டும்.
பாலியல் உணர்வுகள் எங்கே வன்கொடுமையாக மாறுகின்றன?
பெண்ணின் விருப்பமில்லாமல் அவள் மீது மேற்கொள்ளும் எந்த செயலும் வன்கொடுமையாக மாறுகிறது. பாலியல் தொழிலாளியாக இருந்தாலும்கூட விருப்பமில்லாமல் தொடுவது தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார் அபிராமி.
தொடர்ந்து மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம்.
பொள்ளாச்சி சம்பவம் மாதிரியான கொடூரமான பாலியல் வக்கிரங்களை நிகழ்த்துபவர்கள் எப்படி உருவாகிறார்கள்? இவர்கள் என்ன மனநிலையைக் கொண்டவர்கள்?
குடும்பத்தினரிடம் இருந்து உண்மையான அரவணைப்பு, உளவியல் கருத்துப் பரிமாற்றம், பாலியல் குறித்த தொடர்ச்சியான உரையாடல் இல்லாதவர்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். உடனிருக்கும் நண்பர்கள் அளிக்கும் தைரியம் மற்றொரு காரணம். பெண்களை மிரட்டுவதன் மூலம் கிடைக்கும் பணம் அடுத்தடுத்த குற்றங்களுக்கு அடிகோலுகிறது.

மருத்துவர் அசோகன்.
முதல் முறையாகத் தவறு செய்யும்போது அவன் தயக்கத்தோடும் குற்ற உணர்ச்சியோடும் அதை எதிர்கொள்கிறான். அடுத்தடுத்த முறைகளில் அதுவே பழகிவிடுகிறது. தனியாகச் செய்தால் தான் மட்டும் மாட்டிக்கொள்வோமே என்ற எண்ணம், நண்பர்களுடன் குற்றத்தை பங்குபோடச் சொல்கிறது.
அப்பாவிப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களை என்ன செய்யலாம்?
குற்றம் சாட்டப்பட்ட ஆண்களை வெட்டவேண்டும், குத்தவேண்டும் என்று கொதிக்காமல், சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். ஏன் இவர்கள் உருவாகிறார்கள், எப்படி இவர்களை மீட்கலாம் என்று ஆராய்வது சரியாக இருக்கும்.
பாதிக்கப்பட்ட பெண்களிடம் மற்றவர்கள் (பெற்றோர், உறவினர், சமுதாயம்) எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
சாதாரணமாக இருந்தாலே போதும். நடந்த சம்பவம் குறித்துக் கேட்டு, அவர்களைக் குத்திக் காயப்படுத்தாமல், இயல்பாக நடந்துகொண்டாலே போதும். அடுத்தவர் மீது கல்லெறியும் முன்னால், நம் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படிச் செய்வோமா என்று ஒரு நொடி யோசியுங்கள், போதும் என்றார் அசோகன்.
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக