வெள்ளி, 15 மார்ச், 2019

பட்டாசு உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி!

பட்டாசு உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி!மின்னம்பலம் : பசுமை பட்டாசு உற்பத்தியை மார்ச் 21ஆம் தேதி முதல் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் வணிகக் கூட்டமைப்பு தலைவர் ராஜா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாகக் கூறி 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடையில்லை. ஆனால் சில நிபந்தனைகளின்படி பட்டாசு தயாரிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இன்று(மார்ச் 15) டெல்லியில் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்களுடன் மத்திய தொழில்துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குறைந்தளவு பேரியம் உபயோகித்து பசுமை பட்டாசு உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர், பட்டாசு உற்பத்தியாளர் வணிகக் கூட்டமைப்பு தலைவர் ராஜா சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குறைந்தளவு பேரியம் பயன்படுத்தி, மார்ச் 21ஆம் தேதி முதல் பசுமை பட்டாசு உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், பட்டாசு உற்பத்தி மற்றும் பயன்பாட்டினால் ஏற்படும் மாசுபாடு முன்பு இருந்ததைவிட குறையும். மார்ச் 30ஆம் தேதியிலிருந்து முழுமையாக அனைத்து பகுதிகளிலும் பட்டாசு உற்பத்தி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது” எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக