சனி, 30 மார்ச், 2019

கமலின் பிரசார பயணம் நிறுத்தம் .. போதிய கூட்டம் இல்லையாம்

maalaisudar.com : சென்னை, மார்ச் 29:
 மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் பிரச்சார பயணம் திடீரென ரத்தாகி உள்ளது. தென்சென்னை தொகுதி வேட்பாளர் ரங்கராஜனை ஆதரித்து நேற்று மாலை பிரச்சாரத்தை துவக்கிய போது கூட்டம் இல்லாததால் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ள நிலையில், தென்சென்னை தொகுதி மநீம வேட்பாளர் ரங்கராஜனை ஆதரித்து நேற்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தை துவக்கினார். சைதாப்பேட்டை, சின்னமலை, அடையாறு, செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்து டார்ச்லைட் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். இருப்பினும் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் போது எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை.

இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். மேலும் பிரச்சார வாகனத்தில் பொருத்தப்பட்டு இருந்த ஸ்பீக்கரும் சரியாக வேலை செய்யவில்லை. இந்த காரணங்களால் தனது பிரச்சார பயணத்தை கமல் ரத்து செய்துள்ளார்.
இதனிடையே கோவையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் பெற்றொரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கமல்ஹாசன் கோவை புறப்பட்டு சென்றார்.
இன்று மாலை 3 மணி அளவில் பன்னிமடை, கஸ்தூரி நாயகன் பாளையத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்று பெற்றொருக்கு ஆறுதல் கூற உள்ளார்.
நாளை மீண்டும் அவர் பிரச்சாரத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக