திங்கள், 11 மார்ச், 2019

வருங்கால உசேன் போல்ட்?' 7 வயது சிறுவன் பிளேஸின் மின்னல் வேக ஓட்டம்! #RudolphBlaze

'வருங்கால உசேன் போல்ட்?' 7 வயது சிறுவன் பிளேஸின் மின்னல் வேக ஓட்டம்! #RudolphBlaze
vikatan.com/ குணநிலா தி :
உசேன் போல்ட்உசேன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 நொடிகளில் கடந்து சாதனை படைத்தவர் உசேன் போல்ட். உலகம் முழுவதும் அவருக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவரின் சாதனையை இனி ஒருவர் விஞ்ச முடியாது என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், வருங்கால உசேன் போல்ட் என ஒருவரைப் பலரும் குறிப்பிடத் தொடங்கியுள்ளனர் என்றால் ஆச்சர்யம்தானே. அதுவும் அந்த ஒருவர் 7 வயதுச் சிறுவன் என்றால் நம்ப முடிகிறதா, நம்பித்தான் ஆக வேண்டும். கால்களில் றெக்கை கட்டிப் பறக்கும் அந்தச் சிறுவன் அமெரிக்காவின், ப்ளோரிடா பகுதியில் உள்ள டம்பா நகரில் வாழும் `ருடால்ப் பிளேஸ் இன்கிரேம்'. சுருக்கமாக பிளேஸ் என்று அழைக்கப்படுகிறான்.

பிளேஸ். தனது 4 வயது முதலே ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று, வெற்றித் தடம் பதித்துவருகிறான். அவனை உலகமே திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக, அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில், 100 மீட்டர் தூரத்தை 13.48 விநாடிகளில் கடந்துதான். இன்னும் சொல்லப்போனால், பயிற்சியின்போது இந்தத் தூரத்தை 14.56 விநாடிகளில்தான் கடந்திருந்தான். ஆனால், போட்டி என்று வந்தவுடன் மின்னல் வேகத்தில் ஓடி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறான். `உசேன் போல்ட் சாதனையை முறியடிப்பதே தனது முதல் லட்சியம்' என்று சொன்னபோது, இவனின் திறமையைக் கண்டவர்கள் அது சாத்தியப்படலாம் என்று வாழ்த்து சொல்லியுள்ளனர். 

விளையாட்டில் மட்டுமல்ல, சமூக ஊடகத்திலும் பரபரப்பான நபராக பிளேஸ் இருக்கிறான். பிளேஸின் அப்பாவால் இவனின் இன்ஸ்டாகிராம் கணக்கு நிர்வகிப்படுகிறது. அதில், இதுவரை 3 லட்சம் பேர் பின்தொடர்ந்து சினிமா நட்சத்திரங்களுக்கே சவால் விடுகிறான் பிளேஸ். இவனின் உடற்பயிற்சி வீடியோக்கள் வைரலாகப் பரவும். `பிட்னஸ் மாடல்' என்ற பட்டத்தையும் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறான். தடகளப் போட்டிகளில் மட்டுமல்ல, கால்பந்து விளையாட்டிலும் பிளேஸுக்கு ஆர்வம் உள்ளது. கால்பந்து விளையாட்டில், பிளேஸ் மேற்கொள்ளும் உத்திகள் பார்வையாளர்களை மட்டுமல்ல, பிற வீரர்களை வியப்புக்குள்ளாக்கி வருகிறது. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் புகழ்பெற்ற விருதான `ஹோய்ஸ் மேன் டிராபி' யைப் பெற்று பலரின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறான் பிளேஸ். எதிர்காலத்தில், தேசிய கால்பந்து லீக்கில் ( National Football. League(NFL)) விளையாட வேண்டும் என்பது பிளேஸின் லட்சியங்களில் ஒன்று.
விளையாட்டுகளில் ஆர்வத்துடன் இருக்கும் குழந்தைகள், படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள் அல்லது பின் தங்கி இருப்பார்கள் என்றுதானே எல்லோரும் சொல்வார்கள். ஆனால், பிளேஸ் இதிலும் விதிவிலக்கு. விளையாட்டு, படிப்பு இரண்டும் சம முக்கியத்துவம் தருகிறான். இதனை, அவனின் அப்பா இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்திருக்கும் பள்ளித் தரச் சான்றிதழைப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். கணிப்பொறி இயல், அறிவியல், மொழியியல், கணிதம் என அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் ஏ கிரேடு வாங்கியிருக்கிறான். பிளேஸ் பற்றி, அவனின் தந்தை சொல்லும்போது, ``பிளேஸ் எல்லாவற்றையும் விரைவில் கற்றுக்கொள்கிறான். இவனின் திறமையை இந்த உலகம் கண்டுகொள்ள வேண்டும். இவனைப் போற்ற வேண்டும் என்பதுதான் எங்களுக்கு ஆசை. அடுத்த உசேன் போல்ட்டாக எங்கள் மகன் வருவதே எங்களின் கனவு. 4 வயதாக இருக்கும்போது, தொலைக்காட்சியில் ஒலிம்பிக் போட்டியைப் பார்த்துவிட்டு, நானும் அதில் விளையாடுவேன் என்று சொன்னான், எல்லாச் சிறுவர்களையும்போல விளையாட்டாகக் கூறுகிறான் என்றுதான் நினைத்தோம். ஆனால், அதற்கான பயிற்சியைத் தொடங்கியதைப் பார்த்துத்தான், நாங்கள் அவனின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு உதவி செய்தோம். கலந்துகொள்ளும் விளையாட்டுகளில் முதலிடம் பெற வேண்டும் என்பதுதான் அவனின் குறிக்கோள் என்று சொல்வான். சொல்வதோடு செய்தும் காட்டுவான்." என்கிறார் பெருமையும் மகிழ்ச்சியும் பொங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக