திங்கள், 18 மார்ச், 2019

ஜெயவர்தன் எம்.பி (தென் சென்னை) என்ன செய்தார் ? -26 வாயதில் எம்பியானவர்

LR Jagadheesan : மந்திரி ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் 2014 தேர்தலிலேயே தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானவர். 26 வயதில் இந்தியாவின் இளவயது நாடாளுமன்ற உறுப்பினர் என்று பாராட்டப்பட்ட இவர் ஒரு மருத்துவரும் கூட. கடந்த ஐந்து ஆண்டுகளில் தென் சென்னை தொகுதிக்காக இவர் ஆற்றிய சேவைகள், இந்தியநாடாளுமன்றத்தில் இவர் அளித்த ஜனநாயக பங்களிப்பு குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. இத்தனைக்கும் இவர் சார்ந்த மருத்துவத்துறையில் தமிழ்நாட்டு மாணவமாணவிகள் படிக்க NEET வலிந்து திணிக்கப்பட்டபோது பத்தோடு பதினொன்றாக ஒப்புக்கு ஒருநிமிடம் அதை எதிர்த்து பேசியதை தாண்டி இவர் எந்த பெரும்போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. எந்த ஒரு பொறுப்புள்ள இளவயது அரசியல்வாதியும் இப்படியொரு வாய்ப்பை பயன்படுத்தி தன்னையும் தன் அரசியலையும் வலுப்படுத்திக்கொள்ள முயன்றிருப்பார். 
ஜோ. ஸ்டாலின் விகடன் : கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடி அலையில் இந்தியா மூழ்கியிருந்தது; தமிழகத்தில் மட்டும் ‘மோடியா... லேடியா...’ என்ற போட்டியே பிரதானமாக இருந்தது. அ.தி.மு.க-வின் வேட்பாளர் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மருத்துவப் படிப்பை முழுமையாக முடிக்காத மாணவராக ஜெயலலிதாவைச் சந்தித்தார் ஜெயவர்தன். அமைச்சர் ஜெயக்குமாரின் மகன். அ.தி.மு.க மருத்துவர் அணியில் இருந்த ஜெயவர்தனுக்கு அப்போது வயது 27 மட்டுமே. “தேர்தலில் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என ஜெயலலிதாவிடம் கேட்டார்.
‘‘படிப்பைக்கூட இன்னும் முடிக்கவில்லையே... இப்போதே அரசியலுக்கு வரவேண்டுமா?” என்று கேட்டார் ஜெயலலிதா. “டாக்டர் படிப்பை முடித்துவிட்டு மக்களுக்குத்தான் சேவைதான் செய்யப்போகிறேன்; அரசியலுக்கு வந்தாலும் அதைத்தான் செய்யப்போகிறேன். படிப்பு பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறேன்” என நம்பிக்கையாகச் சொன்னார். சில நாட்கள் கழித்து வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டபோது, தென் சென்னை தொகுதிக்கு நேரே ஜெயவர்தன் பெயர் இடம்பெற்றிருந்தது. அவர், ஜெயிக்கவும் செய்தார். அண்ணா, முரசொலி மாறன், டி.ஆர்.பாலு என தி.மு.க-வின் ஜாம்பவான்கள் கோலோச்சிய தொகுதியில் எம்.பி ஆகி நாலரை ஆண்டுகளைக் கடந்துவிட்டார் ஜெயவர்தன். தென் சென்னை மக்களுக்கு அவர் என்ன செய்திருக்கிறார்? களம் புகுந்தது ஜூ.வி.

தி.நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கும் தென் சென்னையின் தேவைகளும் கட்டமைப்பும் மக்களின் வாழ்க்கைத் தரமும் முற்றிலும் வேறுபட்டவை. தலைநகரில் இருப்பதால், மாநில அரசின் நேரடிக் கண்காணிப்பும் உண்டு. “ஜெயவர்தன் எதுவும் செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்ல முடியாது.  எம்.பி தொகுதி நிதியைச் செலவு செய்துள்ளார். ஆனால், புதிய திட்டங்கள், கட்டமைப்பு வசதிகளைப் பெரிய அளவில் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. குடிசைப்பகுதி மக்களை அப்புறப்படுத்தும் பிரச்னை இங்கு பிரதானமாக உள்ளது. புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களை, நகருக்கு வெளியே கொண்டுபோய் குடியமர்த்துவது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவுதான். அதைத் தடுத்து, ஆண்டாண்டு காலமாக இங்கு வாழும் மக்களை இங்கேயே குடியமர்த்துவதற்கு எம்.பி என்ற முறையில் ஜெயவர்தன் எதுவும் செய்யவில்லை. ஆற்றோரங்களை ஒட்டி 34 ஆயிரம் வீடுகள் தொகுதிக்குள் உள்ளன. இவர்களுக்கு மாற்று வீடு அமைத்துத் தர அருகிலேயே இடம் உள்ளது. அதைச் சுட்டிக்காட்டியும் பலனில்லை.
நகருக்கு வெளியே அனுப்பப்படும் மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்தையும் பெறுவதில் கடும் சிரமங்கள் உள்ளன. இப்படி அப்புறப்படுத்தப்படும் மக்கள் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில்தான் குடியமர்த்தப்படுகின்றனர். தென் சென்னைக்குள் இருக்கும் சோழிங்கநல்லூரில் மட்டும் 6.15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வேளச்சேரியிலும் இதே நிலைதான். இந்தப் பகுதிகளில் அரசு மருத்துவமனை கிடையாது. முக்கியமான சிகிச்சைகள் என்றால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கோ, ராயப்பேட்டை மருத்துவமனைக்கோதான் செல்ல வேண்டும்.

பள்ளிக்கரணையில் உள்ள மிகப்பெரிய நன்னீர் சதுப்பு நிலம் தென் சென்னையின் கொடை. இந்த சதுப்பு நிலம் ஏறத்தாழ ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கு இதுவும் முக்கியக் காரணம். இதைப் பாதுகாப்பதற்கு மாநில அரசின் விதிமுறைகளும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களும் உள்ளன. ஆனால், ஜெயவர்தனுக்கு அதுபற்றிய விழிப்பு உணர்வே இல்லை. பெருங்குடியில் உள்ள குப்பை வளாகத்தை மாற்றுவதற்குப் பல திட்டங்கள் போடப்பட்டன. மாற்றுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. மாநில அரசு செய்ய வேண்டிய வேலை என்றாலும், அதை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கலாம். ஜெயவர்தன் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதனால், அந்தப் பகுதி நோய்களின் பிறப்பிடமாக உள்ளது’’ என்கிறார் தென் சென்னை சி.பி.எம் மாவட்டச் செயலாளர் பாக்கியம்.

தி.மு.க-வைச் சேர்ந்த சைதாப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ-வும் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ‘‘சென்னை எம்.பி-க்கள் பளிச்சென அடையாளம் தெரிவார்கள். ஆனால், ஜெயவர்தன் அடையாளம் தெரியாமல் இருக்கிறார். இரண்டே முக்கால் லட்சம் வாக்காளர்களைக் கொண்ட சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எந்த வேலையும் நடக்கவில்லை. அ.தி.மு.க-வுக்குள் நிறைய கோஷ்டிகள் உருவாகிவிட்டதால், அவர்களும் இவரை அழைத்துவந்து ஆய்வு செய்வதோ, வேலைகளை முடித்துக் கொடுப்பதோ இல்லை. எங்கள் கட்சி எம்.பி-க்களிடம் சொல்லித்தான் தொகுதிக்கான வேலைகளை முடித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள கண்ணகி நகரைச் சேர்ந்த சலீம், ‘‘மாநகரிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்களை இங்கு குடியமர்த்தியுள்ளனர். அவர்களுக்கான வீடுகள், மத்திய அரசின் நிதியில்தான் கட்டப்படுகின்றன. அவை விதிமுறைகளைப் பின்பற்றிக் கட்டப்பட வில்லை. பெரும்பாக்கத்திலும், செம்மஞ்சேரியிலும் இதே நிலைதான். இந்தப் பகுதிகளில் கிடைக்கும் நீர், குடிப்பதற்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது’’ என்றார்.

மயிலாப்பூர் பகுதி மக்களிடம் பேசியபோது, “பறக்கும் ரயில் நிலையங்களில் பெரும்பாலானவை தென் சென்னை தொகுதிக்குள்தான் வருகின்றன. பறக்கும் ரயிலை வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை நீட்டிக்கும் நடவடிக்கையும் பல ஆண்டுகளாக மந்தகதியில்தான் உள்ளது. பறக்கும் ரயில் நிலையங்கள் அனைத்தும் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளன. ஸ்வாதி படுகொலைக்குப் பிறகும்கூட, பெரிதாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. பகலிலேயே இங்கு போக முடியாத நிலை. இன்னும் பல ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இது தொடர்பான ஆலோசனைக்கூட்டங்கள் அனைத்திலும் எம்.பி பங்கேற்கிறார். ஆனால், உருப்படியாக நடவடிக்கைகள்தான் இல்லை’’  என்றனர்.

ரயில்வே ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோதண்டராமன், ‘‘தி.நகர் முதல் தாம்பரம் வரையில் ரயில் நிலையங்களுக்குப் பாதுகாப்புச் சுவர் கிடையாது. அதனால், தொடர்ந்து விபத்துகள், சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. போதிய அளவில் டிக்கெட் கவுன்டர்களும் இல்லை. சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் இறந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தால், அவர்கள் இப்போது உயிருடன் இருந்திருப்பார்கள்’’ என்றார். கிண்டி பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த சுரேஷ், ‘‘தென் சென்னை தொகுதியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அதிகம். கிண்டி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், வேளச்சேரி போன்ற பகுதிகள் இப்படியான தொழில்களால் தான் வளர்ந்தன. தற்போது அந்தத் தொழில்கள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி இந்தத் தொழில்களைக் காப்பாற்றி, வேலைவாய்ப்பையும் உருவாக்கலாம். அதற்கான முயற்சிகளை எம்.பி எடுக்கவில்லை’’ என்றார்.

எம்.பி தத்தெடுத்த கிராமங்களின் நிலை எப்படி உள்ளது? ஒட்டியம்பாக்கம், வேங்கைவாசல், நன்மங்கலம் என மூன்று கிராமங்களைத் தத்தெடுத்துள்ளார் ஜெயவர்தன். இங்கே எம்.பி நிதியில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சாக்கடை மற்றும் குடிநீர்ப் பிரச்னை தீரவில்லை. சில இடங்களில் குடிநீர் வசதி செய்து தரப்பட்டபோதிலும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. மத்திய சென்னை தொகுதிக்குள் கிராமங்கள் இல்லை. மத்திய சென்னை எம்.பி-யான எஸ்.ஆர்.விஜயகுமார், வேறு தொகுதியில் உள்ள கிராமங்களைத் தத்தெடுக்கலாம். அதனால், இங்கிருக்கும் கோவிலாம்பாக்கம் கிராமத்தைத் தத்தெடுக்கச் செய்திருக்கிறார் ஜெயவர்தன். இங்கு சாலை வசதிகளும் தெரு விளக்குகளும் கிடைத்துள்ளன. மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயவர்தன் என்ன சொல்கிறார்? ‘‘நாடாளுமன்றத்தில் அதிகம் பேசியது நான்தான். மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளான காவிரிப் பிரச்னை, மீனவர் பிரச்னை, தொழில் கொள்கைகளால் மாநிலத்துக்கு ஏற்படும் பாதிப்பு, ஜி.எஸ்.டி என அனைத்து விவாதங்களிலும் பேசியுள்ளேன். சென்னை புறநகர் ரயில் நிலையங்களுக்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கப்படும் பிரச்னையைப் பேசினேன். தமிழகத்துக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது அதுபற்றிப் பேசினேன்.

நான் கேட்ட துணைக் கேள்வியால்தான் மெட்ராஸ் ஃபெர்ட்டிலைசர்ஸ் நிறுவனம் மூடப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. சென்னையில் இருக்கும் மத்திய பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிறுவனத்தை டெல்லிக்கு மாற்ற மத்திய அரசு முடிவெடுத்ததை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசினேன். அதனால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் அதிகக் கேள்விகள் கேட்டதில், மாநில அளவில் நான்தான் முதல் இடத்தில் இருக்கிறேன். இந்திய அளவில் 6-வது இடத்தில் இருக்கிறேன். (இவை எழுத்துப்பூர்வமாகப் பதில் தரப்படும் கேள்விகள்.) தொகுதிக்குள் ஒரு கவுன்சிலரைப்போல் பணியாற்றுகிறேன். தொகுதிப் பிரச்னை என்று யார் போன் செய்தாலும் பதில் சொல்வதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, அந்தப் பிரச்னையை முடித்துக்கொடுத்துவிடுகிறேன்.

நீலாங்கரை பகுதிநேரத் தபால் அலுவலகத்தை மூடப்போகிறார்கள் என மக்கள் வந்து சொன்னதும், அதைத் தடுத்து நிறுத்தி, முழு நேரம் செயல்படும் தபால் அலுவலகமாக மாற்றினேன். எம்.ஜி.ஆர் நகர் பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி, புதிய வகுப்பறைகள் கட்டித்தந்துள்ளேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் விடுதிக் கட்டடம், இரண்டு ஸ்மார்ட் கிளாஸ், நூலகக் கட்டடம், புத்தகங்கள் ஆகியவற்றுக்குத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.3 கோடி  அளித்துள்ளேன். செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் சித்தலப்பாக்கம் ஊராட்சிப் பள்ளியின் 181 பெண் குழந்தைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் செலுத்தினேன். மண்டலங்களாகப் பிரித்து அதிகாரிகளை அழைத்து மீட்டிங் போட்டு, மக்கள் பிரச்னைகளை முடித்துக் கொடுக்கிறேன். வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திச் சுமார் மூவாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தோம். ஈஞ்சம்பாக்கத்தில் 100 படுக்கை வசதி உள்ள மருத்துவமனையை ஏற்படுத்தினேன். பள்ளிக்கரணை குப்பை கொட்டும் இடத்தில் பெரிய மருத்துவமனை கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது’’ என்றார்.
உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- ஜோ.ஸ்டாலின்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக