திங்கள், 18 மார்ச், 2019

வைகோவிடம் ஆசி பெற்ற கனிமொழி .. மார்ச் 22ஆம் தேதி தூத்துக்குடியிலிருந்து பிரசாரம் ஆரம்பம்

வைகோ இல்லத்தில் கனிமொழி: கனிமொழிக்கு வைகோ பிரச்சாரம்!மின்னம்பலம் : தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி வைகோவை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் நேற்று (மார்ச் 17) அறிவிக்கப்பட்டது. திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளார். திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து கனிமொழி இன்று வாழ்த்து பெற்றார். அண்ணா நகரில் உள்ள வைகோ இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தபின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். தூத்துக்குடியின் அடிப்படைப் பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்வோம் என்று கனிமொழியும், கனிமொழி 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று வைகோவும் தெரிவித்தனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்ற வைகோ, “கனிமொழி அவர்கள் சிறந்த கவிஞர். மாநிலங்களவையில் தமிழகத்தின் உரிமைகளுக்காக, இந்தியா முழுமையும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெருமை சேர்த்து இருப்பவர். அவர் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார். நிச்சயமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்திலே வெற்றி பெறுவார். நான் என்னுடைய பிரச்சாரத்தை மார்ச் 22ஆம் தேதி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்துதான் தொடங்குகிறேன். முதல் நாள் தூத்துக்குடி பகுதிகளிலும், இரண்டாவது நாள் கோவில்பட்டி பகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறேன். திராவிட இயக்கத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் கனிமொழியின் குரல் ஒலிக்கும்” என்றார்.
மேலும், 20ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் வைகோ தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து பேசிய கனிமொழியிடம் எதனடிப்படையில் பிரச்சாரம் இருக்கும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஸ்டெர்லைட் பிரச்சனையில் போராடிக்கொண்டிருந்த மக்கள் மீது அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட மிகப்பெரிய வன்முறையை தூத்துக்குடியில் நாம் கண்கூடாகக் கண்டோம். காவல்துறையை ஏவி 13 பேரை சுட்டுக்கொன்றது அரசாங்கம். ஜிஎஸ்டி பணமதிப்பழிப்பை திணித்து தமிழகமெங்கும் இருக்கக்கூடிய மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டது. அதில் தூத்துக்குடி இன்னும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் தூத்துக்குடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்புகள் இல்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம்” என்றார்.
திமுகவில் வாரிசுகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா என கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தொடர்ந்து இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறவர்களுக்குதான் வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக யாருக்கும் வழங்கப்படவில்லை. வாரிசுகள் என்பதாலேயே வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது" என்றார். தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து அழகிரி மகன் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது என்று கேட்டதற்கு, “இது உங்களின் கற்பனையாகவும் ஆசையாகவும் இருக்கலாம்” என்று கனிமொழி பதிலளித்தார்.
ஜனநாயக அரசா அல்லது பாசிச அரசா என்ற கேள்வி 2019 தேர்தலில் எழுந்திருக்கிறது என்று கூறிய வைகோ, “ முல்லைப்பெரியாறு, மேகதாட்டுவில் அணை கட்ட அனுமதியளித்தது மத்திய அரசு. கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கிற மனப்பான்மை கூட இல்லாத, தமிழகத்தை எள்ளி நகையாடி கிள்ளுக்கீரையாக எண்ணுகிற மனோபாவத்தை தலைமை அமைச்சர் மோடி கொண்டிருக்கிறார். இந்தி சமஸ்கிருதத்தை திணித்து திராவிட இயக்கத்தினுடைய குறிக்கோளுக்கு நேர் எதிராகச் செயல்படுகிற நரேந்திர மோடியின் அரசு அகற்றப்பட வேண்டும். இந்துத்துவா அமைப்புகளின் பிரதிநிதியாக இருக்கிற பாரதிய ஜனதா கட்சி அணி வெற்றி பெறாது; பெறக்கூடாது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக