சனி, 23 மார்ச், 2019

2.1 கோடி பெண் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டிருப்பது திட்டமிட்ட சதி?

      தினமலர் :பு துடில்லி : வாக்காளர் பட்டியலில் இருந்து நாடு முழுவதும் 2.1 கோடி பெண் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசும், தேர்தல் கமிஷனும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து 2.1 கோடி பெண்களின் பெயர்கள் விடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக வரும் லோக்சபா தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகம் பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள் என வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பதால், மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் என்பதை பெண்கள் தான் தீர்மானிக்க போகிறார்கள். இருப்பினும் வாக்காளர் பட்டியலில் இருந்து 2.1 கோடி பெண்களின் பெயர்கள் விடுபட்டிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இவற்றில் 4 லட்சம் பேர் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையில் பணிபுரிபவர்களின் பெயர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியாகும். 2018 ம் ஆண்டு வாக்காளர் பட்டியலிலும் இவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2019 ல் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் எண்ணிக்கை 45.1 கோடி. ஆனால் தற்போது வாக்காளர் பட்டியலில் 43 கோடி பெண்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள 2.1 கோடி பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இது ஏறக்குறைய இலங்கை மக்கள்தொகைக்கு சமமான எண்ணிக்கை ஆகும். அதாவது ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் சராசரியாக 30,000 பெண்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இதில் நாட்டில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலமான உ.பி.,யில் அதிகபட்சமாக ஒரு தொகுதிக்கு 85,000 க்கும் அதிகமான பெண் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது.



வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நிலவும் சமூக மற்றும் கலாச்சார ஒடுக்குமுறைகளே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. வடஇந்தியாவுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியாவில் படிப்பறிவும், தனிமனித வளர்ச்சியும் அதிகம் என்பதால் தென்மாநிலங்களில் இந்த பிரச்னை இல்லை என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக