வெள்ளி, 1 மார்ச், 2019

வேல்முருகன் :தமிழக அரசுப் பணிகள் 100% தமிழருக்கே: த.வா.க. பேரணி!

தமிழக அரசுப் பணிகள் 100%  தமிழருக்கே: த.வா.க. பேரணி!மின்னம்பலம் : தமிழக அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு 100 சதவிகித வேலைவாய்ப்பு வழங்க சட்டம் இயற்றக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி (த.வா.க) சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது.
தமிழக அரசுப் பணிகளில் மண்ணின் மைந்தர்களுக்கு 100 சதவிகித வேலைவாய்ப்பும், மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணிகளில் 90 சதவிகித வேலைவாய்ப்பும் கிடைக்க வேண்டுமெனவும் அதற்காக தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றக் கோரியும் த.வா.க. சார்பில் சென்னையில் நேற்று (பிப்ரவரி 28) பேரணி நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் மாலை 5 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி வாரிய கட்டடம் அருகிலிருந்து தொடங்கிய பேரணியானது, தலைமைச் செயலகம் அருகில் முடிந்தது.

முன்னதாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தவாகவினர் மத்தியில் பேசிய வேல்முருகன், “தமிழகத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம், யார் வேண்டுமானாலும் ஆளலாம், யார் வேண்டுமானாலும் வாழலாம் என்ற அவல நிலை இருக்கிறது. இதற்கு முடிவு கட்டவே இந்தப் பேரணியை முன்னெடுத்திருக்கிறோம். எந்த மாற்று மாநில மக்களுக்கும், எந்த மொழி சிறுபான்மையினருக்கும், எந்த இன மக்களுக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் என்ன சட்டம் இருக்கிறதோ அதேபோல் தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
“சென்னையிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருக்கும் 1,500 காலியிடங்களுக்கும் ராஜஸ்தான், பிகாரிலுள்ளவர்களையும் நியமித்துள்ளனர். ஆனால் தமிழர்கள் அனைத்தையும் அடகு வைத்துவிட்டு துபாய்க்கும், சிங்கப்பூருக்கும் வேலைக்குச் செல்கின்றனர்” என்று சுட்டிக்காட்டிய வேல்முருகன், தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் தமிழகம் முழுவதும் மக்களைத் திரட்டி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக