திங்கள், 25 மார்ச், 2019

100 கிலோ ஹெரோயினை கடத்தி வந்த 9 ஈரானியர் கைது.. இலங்கை கடற்படை அதிரடி

தினகரன் :பெறுமதி ரூ. 100 கோடிக்கும் அதிகம். தெற்கு கடலோர
கடற்பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படை (STF) மற்றும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு (PNB) ஆகியன மேற்கொண்ட கூட்டு சுற்றி வளைப்பு நடவடிக்கையில் 9 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 9 ஈரான் நாட்டவர்கள் இன்று (24) காலை இலங்கையின் தென் கடற் பிரதேசத்தில் வைத்து, 100 கிலோ கிராமுக்கும் அதிகமான (107.022kg) போதைப் பொருட்களுடன் இவ்வாறு
கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார்.

குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது கப்பலிலிருந்து 50 கிலோகிராமுக்கும் அதிகமாக  போதைப் பொருள் கடலுக்குள் கொட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன், இந்தப் போதைப் பொருள் ஆப்கானிஸ்தானிலிருந்தே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதென்றும், சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார்.
இதன் பெறுமதி ரூபா 100 கோடிக்கும் அதிகம் (ரூபா 1.1 பில்லியன்/ ரூ. 1,100 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக