ஞாயிறு, 31 மார்ச், 2019

10 தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு குக்கர் ஒதுக்கீடு.. 4 தொகுதிகளில் ஒரே பெயரை கொண்டவர்களுக்கு பரிசுப்பெட்டகம், குக்கர் சின்னம்

தினகரன் : சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள 18 தொகுதிகளில் 4ல் அமமுக வேட்பாளர்களின் பெயரை கொண்ட சுயேச்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அமமுகவுக்கு  செக் வைக்கப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற ேதர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. 18 தொகுதிகளில் குறைந்தது 8 தொகுதிகளில் வெற்றி  பெற்றால்தான் ஆட்சியை தக்க வைக்க முடியும் என்பதால் அதிமுக இடைத்தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இந்த தொகுதிகளில் கோடிகளை வாரி இரைத்து வருகிறது. ஆனால், 18 தொகுதிகளில் அதிமுகவின் ஓட்டுகளை அமமுகவினர் பிரித்தால் அது அதிமுகவின் வெற்றியை பாதிக்கும். எனவே, அமமுக வேட்பாளர்களுக்கு எதிராக அதிமுகவினர் முழுவீச்சில் இறங்கி  வேலை செய்து வருகிறன்றனர்.  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் பொது மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துவிட்டதால் அதை  அமமுகவிற்கு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று அதிமுகவினர் முட்டுக்கட்டை போட்டனர்.


இதில் வெற்றியும் பெற்றனர். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமமுக வேட்பாளர்களுக்கு பொது சின்னமாக பரிசு பெட்டகம் ஒதுக்கப்பட்டது. இதை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் அமமுகவினர் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த திட்டமாக அமமுக வேட்பாளர்களின் பெயரை கொண்டவர்களை கண்டுபிடித்து சுயேச்சை வேட்பாளர்களாக ஆளும் கட்சியினர் நிறுத்தினர். மேலும் அவர்கள் அனைவரும் குக்கர் சின்னத்தை கேட்டு பெற  வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.  அதன்படி 18 தொகுதிகளில் பூந்தமல்லி, ஆம்பூர், ஓசூர், விளாத்திகுளம் உள்ளிட்ட 4 தொகுதிகளை தவிர்த்து மற்ற 14 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

இதிலும் குறிப்பாக 4  தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களின் பெயரைக் கொண்ட சுயேச்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  பாப்பி ரெட்டி பட்டி தொகுதி அமமுக வேட்பாளரான ராஜேந்திரனுக்கு பரிசு  பெட்டமும், இதே பெயரைக் கொண்ட சுயேச்சை வேட்பாளருக்கு குக்கரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று அரூர் தொகுதியில் அமமுக வேட்பாளரான முருகனுக்கு பரிசு பெட்டகமும், இதே பெயரைக் கொண்ட சுயேச்சை வேட்பாளருக்கு குக்கரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாத்தூர் தொகுதியில் அமமுக வேட்பாளரான எதிர்கோட்டை சுப்பிரமணியனுக்கு பரிசு பெட்டகமும், இதே பெயரைக் கொண்ட சுயேச்சை வேட்பாளரான சுப்பிரமணியனுக்கு குக்கரும்  ஒதுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதியில்  அமமுக வேட்பாளரான காமராஜூக்கு பரிசு பெட்டகம்  சின்னமும், சுயேச்சை வேட்பாளரான காமராஜூக்கு குக்கரும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக