வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

ரோஹன விஜே வீர.. “THE FROZEN FIRE வெறும் அரசியல் படம் அல்ல.... மக்களை நேசித்தவனின் கதை


S Pradeep Pradeep : 'ரோஹன விஜே வீர' என்ற பெயரைக் கேட்டதும் நமது கண்
முன்னே எப்படியான ஒரு விம்பம் படிகிறது? '
'ஆட்சியைப் பிடிக்க சாத்தியமில்லாத இரண்டு கிளர்ச்சிகளை நடத்தி உருப்படாமல் போன ஒரு மனிதர், தீவிரவாதி, சும்மா பொண்டாட்டி பிள்ளைகள் என்று சாதாரண சிரிபாலவினதோ அமரசேனவினதோ வாழ்க்கையை வாழாமல் தேவையில்லாத வேலை பார்த்தவர்' .இப்படித்தான் அநேகமானோரின் பதில்கள் இருக்கும்..ஊடகங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் இத்தகைய கற்பிதங்களைத் தாண்டி நாம் ரோஹன விஜேவீரவைப் புரிந்து கொள்வது எப்படி?..அதற்கான பதிலைச் சொல்கிறது அநுருத்த ஜயசிங்கவின் “THE FROZEN FIRE “எனப்படும் “கின்னென் உபன் சீதல” என்ற சிங்களத் திரைப்படம்....

1977 ஆம் ஆண்டு சிறையில் இருந்து ரோஹன விஜேவீர விடுதலையாகும் காட்சியுடன் ஆரம்பமாகிறது படம்..அதன் பின்னர் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களைச் சந்திக்கிறார் விஜேவீர....பிரம்மாண்ட பேரணிகள் நடக்கின்றன..ஜே..ஆர். அரசு ஆடிப் போகிறது..ரோஹன விஜேவீர கண்காணிப்பு வலையத்திற்குள் வருகிறார்...சீ.ஐ.டி பின் தொடர்கிறது..இந்தக் களேபரங்களுக்கிடையில் பார்த்தவுடன் பிடித்துப் போன பெண்ணைத் திருமணமும் செய்து கொள்கிறார்..
திகிலும் பீதியும் திட்டுத் திட்டாகப் பரவி இருக்கும் வாழ்க்கையில் சமயோசிதமாக அதைக் கடந்துவரும் யுக்திகளும் ஆட்சியாளர்களின் கபடத்தனங்களை எதிர் கொள்ளும் நெஞ்சுரமிக்க அதிரடிகளும் என்று விஜேவீரவுடன் சேர்ந்து சிம்பலாய் அடித்து ஆடுகிறார்கள் அந்நாளைய தோழர்கள்.
1982 ஆம் ஆண்டு நடந்த முறைகேடுகள் மலிந்து போன ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதாகட்டும்..பிரச்சார மேடைகளில் அனல் தெறிக்க அதிகார அடுக்கின் இடுப்பு வேஷ்டி அவிழக் கேள்வி கேட்பதாகட்டும்,பிரிவினைகளையும் காட்டிக் கொடுப்புக்களையும் துரோகங்களையும் தாங்குவதாகட்டும்,அன்புள்ள அப்பாவாக/கணவனாகப் பார்ட் டைம் குடும்ப வாழ்க்கையைக் கவனிப்பதாகட்டும்.. பிரமாதம் பிரமாதம்...அப்படி ஒரு நடிப்பை தனக்குள்ளே கொண்டு வந்து ரோஹன விஜேவீரவாகவே வாழ்ந்திருக்கிறார் கமல் அத்தர ஆராச்சி என்னும் நடிப்பு ராட்சகன்.
ரோஹன விஜேவீர சமாதியில் இருந்து எழுந்து வந்து மாதிரியே இருக்கிறது..கமல் அத்தர ஆராச்சியைக் காணவே இல்லை...கமல் அத்தர ஆராச்சி என்ற பெயரையே எழுத முடியாதபடி ரோஹன விஜேவீர ஆட்கொண்டுவிட்டார்..ரோஹன விஜேவீர ஒரு சர்வாதிகார வன்முறையாளர் என்று இன்னமும் அடித்துச் சொல்லும் கூட்டத்திற்கும் இங்கே பதில் இருக்கிறது..அத்தனை தீர்மானங்களையும் மத்திய செயற்குழுவே எடுக்கிறது.சில தீர்மானங்கள் ரோஹன விஜேவீரவின் விருப்பங்களையும் மீறி எடுக்கப்படுகின்றன....கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு ஆனனாப்பட்ட ரோஹன விஜேவீரவும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்..அப்படி ஒரு உட்கட்சி ஜனநாயகம்..
1980 ஆம் ஆண்டுகால ஆடைகள், ஹேர் ஸ்டைல்கள், இலங்கை வானொலி, ரூபாவாஹினி செய்திகள், ஜே.ஆரின் மேடைப் பேச்சுக்கள்,போஸ்டர்கள் என்று படம் முழுக்க கால இயந்திரத்தில் சென்று போய் பார்த்து வந்த மாதிரி செம்ம விபரிப்பு.....பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார் இயக்குநர் அநுருத்த ஜயசிங்க....1983 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டர்களால் பொலிஸ் ஆசீர்வாதங்களுடன் நடந்தேறிய இனக்கலவரத்தை ஜே.விபி மேல் சுமத்தி தடை செய்யப்படுகிறது.....அதன் பின்னர் ரோஹன விஜேவீர மீது தொடரும் வேட்டைகளும் தலைமறைவு வாழ்க்கையை எதிர்கொண்ட விதமும் தான் மிச்சக் கதை...அல்ல கவிதை....
ஒரு முழு நேர அரசியல்வாதியின் வாழ்க்கையை எப்படிக் காட்டுவது? ரசிகர்களுக்கு சலிப்பு வராதா? இப்போதைய தலைமுறை இதை எல்லாம் எப்படி ரசிக்கும்? என்ற கேள்விகளே வேஸ்டாய்ப் போய்விடுகின்றன....இது வெறும் அரசியல் படம் மட்டும் அல்ல...'இந்த நாட்டை நேசித்த ஒரு நல்ல மனிதனின் கதை 'என்ற ஒரு ஆழமான விம்பத்தை எமக்கு ஆணித்தரமாய்ப் பதிய வைக்கிறது படம்...
நாம் தொலைக்காட்சிகளில் பார்க்கவே முடியாத ஜே.வி.பி தலைவரின் குடும்ப வாழ்க்கை இங்கே விரிகிறது...ரோஹன விஜேவீரவுக்கு மனைவியான சித்ராங்கனியின் பாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கும் சுலோச்சனா வீரசிங்கவின் நடிப்பில் அத்தனை கனம்...
மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எப்படி மக்களை ஏமாற்றுகின்றன? அரசாங்கங்கள் ஏன் இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தி எப்போதும் குளிர்காய்கின்றன? அரசாங்கங்கள் ஏன் இனவாதத்தைப் போசிக்கும் அரக்கர்களுக்கு சலாம் போடுகின்றன ? இந்த இழிவுகளுக்குப் பின்னால் ஆட்சி செய்யும் பிரபுக்களின் தந்திரங்களே தோரணம் கட்டி நிற்கின்றன என்று அன்று ரோஹன விஜேவீர சொன்னதெல்லாம் இன்று எத்தனை பெரும் நிஜங்கள்? ஜே.வி.பி இன்று ரோஹன விஜேவீரவைப் பின்பற்றுகிறதா என்பதே மிகப் பெரும் சர்ச்சையான விவாதங்களின் ஒன்றாகிவிட்டது..
தமிழ்ப் படங்களைத் தழுவி எடுக்கப்படும் படு மொக்கையான கேலிக் கூத்துக்களுக்கு மத்தியிலும் சர்வதேச விருதுகள் பெற்ற சிங்களத் திரைப்படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன..ப்ரசன்ன விதானகே போன்ற மிகச் சிறந்த இயக்குநர்கள் இருக்கிறார்கள்.'கின்னென் உபன் சீதல' படத்தை எடுத்து இருக்கும் அநுருத்த ஜயசிங்கவும் அத்தகைய ஒருவராய் மிளிர்வார் போலிருக்கிறது..
ரோஹன விஜேவீர பற்றிய மீள் வாசிப்பை இந்தப் படம் உணர்த்தி நிற்கிறது..உண்மைக்கு மிக மிக அருகில் சொல்லப்பட்டுள்ளதாலோ என்னவோ அந்நாளில் விஜேவீரவுடன் பழகியவர்கள் எல்லாம் கொண்டாடித் தீர்க்கிறார்கள்..." எங்களைக் கொன்று போடலாம்..ஆனால் நாம் எழுப்பிய குரலை ஒரு போதும் கொல்ல முடியாது " என்று விஜேவீர அடிக்கடி உச்சரித்த பிரசித்தி பெற்ற வாசகத்துடன் படம் முடிகிறது..நீங்கள் ரோஹன விஜேவீர பற்றி எந்த மனநிலையுடன் படம் பார்க்கச் சென்றாலும் கடைசியில் உங்களை அப்படியே வசீகரித்துவிடுகிறார் ரோஹன விஜேவீர என்னும் தோழர்...//

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக