வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

தமிழகத்தில் பாஜக காலூன்ற மிகப்பெரிய கலவரங்களை இனி தூண்டும் ...

அதிமுக - பாஜக கூட்டு*
நாம் மிகவும் அச்சப்படவேண்டிய விஷயத்தை எப்படி இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம் என்று தெரியவில்லை.
அதிமுக-பாஜக கூட்டு உறுதியாவது வெறும் தேர்தல் அரசியல் விவகாரம் மட்டுமல்ல. பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு மிகப்பெரிய அளவுக்கு உதவும்.
அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் போட்டியிடாத தொகுதிகள் என எல்லா இடங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்த்துவரும் தங்கள் கட்சியை ஆழமாக காலூன்றச் செய்துவிடுவார்கள்.
பல மாநிலங்களில் பாஜக மாநிலக்கட்சிகளோடு கூட்டணி வைத்திருக்கிறது. வைக்கிறது. ஆனால் அந்தக் கட்சிகள் சமரசக் கட்சிகளாக இருக்கின்றனவே ஒழிய பாஜகவின் அடிமைகளாக இல்லை. இங்கே கூட்டணி சேர்வற்கு முன்பே அதிமுக பாஜக அடிமையாக ஆகிவிட்டது. பாஜகவோடு தேர்தலுக்கு முன்பே கூட்டணி வைப்பதா அல்லது தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைப்பதா என்பது மட்டும்தான் அதிமுகவின் யோசனை.
இன்று அதிமுகவுக்கு பலம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து பல கருத்துகள் நிலவுகின்றன. இந்தக் கூட்டணி வெற்றிபெறாமலும் போகலாம். ஆனால் பாஜக மிக வலுவாக தமிழ்நாட்டில் காலூன்றும்.
கடந்தகாலத்தில் தமிழ்நாட்டில் முதலில் பாஜகவுக்கு இடமளித்தது அதிமுக, அதற்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைக்க உதவியது திமுகவுடனான கூட்டணி. அதனால் தமிழ்நாட்டில், அதன் முன்னாள் தலைவரான இல கணேசன் சொன்னது போல பாஜக நெகட்டிவிலிருந்து ஜீரோவுக்கு வந்தது. இப்போது ஜீரோவிலிருந்து பாசிட்டிவ் நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது.
குறைந்தபட்சம் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக ஆகவேண்டும் என்பது பாஜகவின் எண்ணமாக இப்போது இருக்கலாம்.

தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் உள்ளிட்ட முற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் மட்டுமல்ல, இன்று கிட்டத்தட்ட எல்லா எஸ் சி , எம் பி ஸி, பி ஸி சாதியினர்களிடத்திலும் பாஜக ஊடுயிருக்கிறது. இது குறித்து மூன்று வருடங்களாக நானும் கத்திக்கொண்டிருந்தேன் - அரசியல் அரங்கில்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லாத இந்துத்துவ கும்பல், இந்தியா முழுக்க எல்லா இடங்களிலும் தேர்தல் அரசியல் ஆட்டங்களை மிகத்தீவிரமாக ஆடிக்கொண்டிருக்கிறது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்குமா காங்கிரஸ் அணி ஆட்சியைப் பிடிக்குமா என்பதெல்லாம் நமக்கு இரண்டாம் பட்சம்தான் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற அது எடுத்துவரும் முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றிபெறுகின்றன என்பதைதுான் அடுத்து குறைந்தபட்சம் 50 ஆண்டுகால தமிழ்நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கபோகிறது. இதுதான் நமக்கு மிக முக்கியம்.
அதிமுக மன்னிக்கமுடியாத வரலாற்றுத் துரோகத்தை செய்துவருகிறது.
பாஜகவோடு கூட்டுசேரும் அத்தனை பேரும் தமிழ்நாட்டை குழிதோண்டி புதைக்கிறார்கள், அரசியல் ரீதியில் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
ஒருவேளை இந்த பாஜக-அதிமுக கும்பல் வெற்றிபெற்றால் மூன்று முக்கிய நிகழ்வுகள் விரைவில் அரங்கேறும்.
1. அனைத்து சமூக நீதித் திட்டங்களும் முடக்கப்படும் அல்லது ஒழிக்கப்படும்.
2. மிகப்பெரிய அளவுக்கு சிறுபான்மையர்கள் மீதான தாக்குதல் நடக்கும்
3. எல்லாவற்றையும்விட, தற்போது கட்டுக்கடங்காமல் நடந்துவரும் வடநாட்டார் குடியேற்றம் இன்னும் பல மடங்கு அதிகரித்து தமிழர்களின் தாயகமே அழிவுக்கு உள்ளாகும்.
மகாராஷ்ட்டிரா போல நமது நிலை ஆகும். நமது அனைத்து பொதுவாழ்விலும் காலனியாதிக்கத்தின் நிழலை இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இதன் விளைவுகள் மிகமோசமாக இருக்கப்போகிறது. ஆனால் நமது தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கு கொஞ்சம்கூட இது குறித்து அச்சம் இல்லை, கோபம் இல்லை. புரிதலும் இல்லை.
இயக்கங்களாகவும் சிறு கட்சிகளாகவும் இருப்பவர்கள் மாயமான் வேட்டைகளில் இறங்கியிருக்கிறார்கள். அதீத கனவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் விஷயமறிந்த மக்களோ வட இந்தியர்களை பானிபூரிக்காரங்க என்று கிண்டலடித்துக்கொண்டிருக்கிறார்கள், அல்லது பாஜக நோட்டாவைத் தாண்ட முடியாது என்று மீம்ஸ் போட்டு கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அறிவுக்கொழுந்துகளே, எங்கள் கிராமங்களில் பாஜக ஆதரவு சக்திகள் காலூன்றி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. எங்கள் சகோதர சகோகரிகளிடம் தற்கொலைக்கான ஆயுதங்களை அவர்கள் ஏற்கெனவே தந்துவிட்டார்கள். தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசமாக ஆக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இந்தச் சூழலுக்கு சரியான எதிர்வினையை திமுகவோ பிற பெரிய/சிறிய எதிர்க்கட்சிகளோ செய்வதாகத் தெரியவில்லை. இதைச் சொன்னால் நிறைய பேருக்கு கோபம் வரும். வந்தால் வரட்டும். உண்மையைச் சொல்கிறேன்: பாஜக விரித்த வியூக வலையில் எல்லோரும் மாட்டிக்கொண்டிருக்கிறோம். பாஜக எதிர்ப்பாளர்கள் வரை.
நமக்கு முன்பு மிகப்பெரிய சவாலிருக்கிறது.
ஆனால் இன்னும் கூட காலம் கடந்துவிடவில்லை. நாம் ஒன்றிணைந்தால் குறைந்தபட்சம் அவர்கள் எண்ணத்தில் மண்ணள்ளி போட முடியும்.!!
#நன்றி*ஆழி.செந்தில்நாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக