செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

தொகுதிப் பங்கீடு: திமுக ஆலோசனை.. உறுதியான கூட்டணி .... தொடரும் தோழமை கட்சிகள்

தொகுதிப் பங்கீடு: திமுக ஆலோசனை!மின்னம்பலம் : திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்துப் பேசினர்.
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் இணைவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஆனாலும் கூட்டணி இன்னும் அதிகாரபூர்வமான அறிவிக்கப்படவில்லை. கூட்டணி இறுதி செய்யப்பட்ட பிறகுதான் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று (பிப்ரவரி 11) நேரில் சந்தித்துப் பேசினார். அதே நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் காதர் மொய்தீனும் ஸ்டாலினைச் சந்தித்தார். இதுதொடர்பாக திமுகவின் ட்விட்டர் பக்கத்தில், “கழகத் தலைவர் ஸ்டாலினை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளோம் என்று நேற்று காலை நடைபெற்ற திருமண விழாவில் ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், இந்தச் சந்திப்பின்போது கூட்டணி தொடர்பாகவும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இரண்டாம்கட்டமாக இன்றோ அல்லது நாளையோ விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்களை ஸ்டாலின் அழைத்துப் பேசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக