செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

கொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு- (அதிர்ச்சியில் எடப்பாடி)*

விகடன் : *கொள்ளைப் பின்னணியை யூகித்தாரா சசிகலா?
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்துவரும் சசிகலாவை, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் சந்தித்திருக்கிறார். இதன் மூலம் கொள்ளை நடந்ததன் பின்னணியை சசிகலா யூகித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த சந்திப்பு ஆளும் தரப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறைத் தண்டனைபெற்ற சசிகலா, 2019 பிப்ரவரி 14-ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகளை, பரப்பன அக்ரஹாரா சிறையில் கழித்துள்ளார். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதையறிந்து சசிகலா பெரும் அதிர்ச்சியில் இருந்தார். எனவே, அப்போதிலிருந்தே மேலாளர் நடராஜனை, தன்னை வந்து சந்திக்கும்படிச் சொல்லியிருந்தார்.
இதுதொடர்பாக சசிகலாவுக்கு நெருக்கமான சிலர் நம்மிடம், “ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்திலேயே கொடநாடு பங்களாவில் நடராஜனைப் பணிக்குச் சேர்த்துவிட்டது சசிகலா தரப்புதான். இந்த விசுவாசத்தினால் இப்போது வரை சசிகலா தரப்புக்கு நெருக்கமானவராகவே நடராஜன் இருந்துவருகிறார். 2011-ம் ஆண்டு சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றியபோது, நடராஜனை அழைத்த ஜெயலலிதா ‘எனக்கு விசுவாசமாகக் கடைசிவரை இருப்பாயா?’ என்று கேட்டுள்ளார். உடனே பதறிய நடராஜன், ஜெயலலிதாவின் காலில் விழுந்து, ‘சாகும் வரை விசுவாசமாக இருப்பேன்’ என்று சொல்லியுள்ளார். அதன் பிறகு சசிகலா உறவுகள் பெயரில் இருந்த சில ஆவணங்கள் நடராஜன் பெயருக்கு மாற்றப் பட்டுள்ளன. மேலும், கொடநாடு உட்பட பல சொத்து ஆவணங்களின் விவரங்கள் நடராஜனுக்கு முழுமையாகத் தெரியும்.

அதனால்தான் கொடநாடு மேனேஜர் நடராஜன், சசிகலாவை அடிக்கடி சந்தித்துச் செல்கிறார். இந்தச் சந்திப்பின்போது, கொள்ளையர்களால் கொடநாடு பங்களாவில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சசிகலாவிடம் காட்டியுள்ளார் நடராஜன். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு மட்டுமே தெரிந்த, பயன்படுத்தக் கூடிய, பகுதிகள் எப்படி இருக்கின்றன என்கிற சந்தேகம், அந்தப் புகைப்படங்களைப் பார்த்தபிறகே தீர்ந்துள்ளது. சில படங்களில் ஜெயலலிதாவின் அறையில் இருந்த பொருள்கள் காணாமல் போயிருப்பதை சசிகலா உறுதிசெய்துள்ளார். அதை வைத்து இந்தக் கொள்ளையின் பின்னணிக் காரணத்தை ஓரளவு சசிகலா யூகம் செய்துவிட்டார். நடராஜனிடம் சில ஆலோசனைகளையும் சசிகலா வழங்கியுள்ளார். தவிர, சசிகலாவுக்கு கொடநாடு கொள்ளையில் தன் உறவினர்களின் ரோல் ஏதும் இருக்குமோ என்கிற சந்தேகம் உள்ளது. அது பற்றியும் நடராஜனிடம் விசாரித்துள்ளார்.
தவிர, கொடநாடு மேனேஜர் நடராஜன் தனக்கு விசுவாசமாகவே இருக்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு காட்டவும் இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளார் சசிகலா. கொடநாடு விவகாரத்தில் எந்தவிதப் பின்னணி தகவலும் நடராஜன் மூலம் கசிந்துவிடக்கூடாது என்பதிலும் அவர் தெளிவாக இருக்கிறார். மேலும், சசிகலாவிடம் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணம் ஒன்றிலும் நடராஜன் கையெழுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அது எதற்கான ஆவணங்கள் என்பது குறித்தத் தகவல்கள் வெளியாகவில்லை. சசிகலா தரப்பிலிருந்து வழக்கறிஞர்கள் குழுவும், காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் என்ன சொல்ல வேண்டும் என்று நடராஜனுக்கு வகுப்பெடுத்துள்ளனர்” என்றார்கள்.
கொடநாடு மேனேஜர் நடராஜன் இதற்கு முன்பு சசிகலாவைப் பல முறை சந்தித்திருந்தாலும், பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் விவகாரத்துக்குப் பிறகு நடந்த இந்தச் சந்திப்பு, அடுத்தடுத்து புயலைக் கிளப்பும் என்கிறார்கள்.
செய்தி ஜூ விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக