செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

திமுக பட்டியல் ஓரளவு பூர்த்தி .. புதிய கட்சிகளுடன் விரைவில் அறிவிப்பு

THE HINDU TAMIL : திமுக கூட்டணி பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என திமுக வட்டார தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில் கூட்டணியை இறுதிப்படுத்தும் முனைப்பில் திமுக, அதிமுக இரண்டுக்கட்சிகளும் முனைப்புக்காட்டி வருகின்றன. திமுக கூட்டணி கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது. திமுக கூட்டணியில் தோழமைக் கட்சிகளாக இருக்கும் மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருக்க பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி உட்பட புதிதாக சில கட்சிகளும் கூட்டணியில் இணைகின்றன.
கூட்டணியில் மதிமுக 3 தொகுதிகள் வரை கேட்க, இடதுசாரி கட்சிகள், விசிகே தலா 2 தொகுதிகள் கேட்டதாக தகவல் வெளியானது. கூட்டணி பேச்சு வார்த்தையில் தொகுதி பற்றிய பேச்சு வார்த்தைக்கு முன் யார் யாருக்கு எத்தனை தொகுதி என முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ஏற்கெனவே காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் போக மீதமுள்ள 30 தொகுதிகளில் மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிகே, முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது. மதிமுகவுக்கு வேறு ஒரு சிறப்பு ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளதாக தெரிகிறது.
ஏற்கெனவே இருக்கும் கூட்டணிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என்கிற அடிப்படையில் 5 தொகுதிகள், காங்கிரஸ் 10 தொகுதிகள் போக புதிதாக இணையும் சில கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கொங்கு ஈஸ்வரன் கட்சிக்கு ஒரு தொகுதியும், மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக அணியில் உள்ள பாரிவேந்தர் திமுக அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது.
தேமுதிக திமுக அணிக்கு வந்தால் 2 தொகுதிகளை கொடுப்பது என 10 தொகுதிகள் போக 20 தொகுதிகளில் நிற்பது, தேமுதிக வராவிட்டால் 22 தொகுதிகளில் நிற்பது என திமுக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் கட்டத்தலைவர்கள் பேசி முடிவெடுத்துள்ள நிலையில் தனது வெளியூர் பணிகளை முடித்து ஸ்டாலின் இன்று சென்னை வந்தவுடன் எண்ணிக்கை அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என தெரிகிறது.
தமாகா வாசன் திமுக அணியில் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. மதிமுக திருச்சி தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் அதில் வைகோ நிற்கிறார் எனவும் திமுக வட்டாரத் தகவல் வெளியாகி உள்ளது. தொகுதிகள் குறித்து இறுதி முடிவு ஸ்டாலின் கையில் உள்ளது என திமுக வட்டாரம் தெரிவிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக