வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

அதிமுக குழுவுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

கூட்டணி: அதிமுக குழுவுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!மின்னம்பலம் : சென்னை வந்துள்ள தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், நேற்றிரவு தங்கமணி உள்ளிட்ட அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு எந்நேரமும் வெளியிடப்படலாம் என்ற நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவும், தொகுதி பங்கீட்டில் மட்டுமே இழுபறி நீடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கூட்டணி குறித்துப் பேச பாஜகவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்றிரவு (பிப்ரவரி 14) டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் வரவேற்றனர். அவர்களுடன் சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், “தமிழகத்துடன் உறுதியான உறவில் இருக்கிறோம். பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். தமிழக மக்களின் குரல் டெல்லியில் ஒலிக்க வேண்டும் எனவும், தமிழக உறுப்பினர்கள் அதிகளவு அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமெனப் பிரதமர் விரும்புகிறார். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இங்கு வந்திருக்கிறேன். கூட்டணியால் கிடைக்கும் வெற்றி பிரதமர் மோடிக்கு வலு சேர்ப்பதாக இருக்கும்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள பொள்ளாச்சி மகாலிங்கம் இல்லத்துக்கு பியூஷ் கோயல் சென்றார். அங்கு அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜேசிடி பிரபாகர் ஆகியோருடன் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழிசை சவுந்தரராஜனும் உடனிருந்தார். சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனை நள்ளிரவு 1 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக