வியாழன், 28 பிப்ரவரி, 2019

பழங்குடிகளை வெளியேற்றும் உத்தரவுக்கு இடைக்கால தடை!

பழங்குடிகளை வெளியேற்றும் உத்தரவு: நிறுத்தம்!
மின்னம்பலம்: இந்தியாவிலுள்ள அனைத்து வனப் பகுதியில் இருந்தும் பழங்குடியின மக்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்று அந்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காடுகள் அழிவதைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. கடந்த 13ஆம் தேதியன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, இந்திய வனப் பகுதிகளில் பட்டா இல்லாமல் 11.8 லட்சம் பழங்குடியினர் இருப்பதாகவும் அவர்கள் அனைவரையும் உடனடியாக வனங்களில் இருந்து வெளியேற்ற வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவுக்குப் பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. மாநில அரசுகளும் இதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தன.
இதன் தொடர்ச்சியாக, இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது மத்திய அரசு.

இன்று (பிப்ரவரி 28) இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் மனுவை ஏற்றுக்கொள்வதாகவும், வனப்பகுதிகளில் இருந்து பழங்குடியினரை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தது உச்ச நீதிமன்றம். மேலும், வனப் பகுதியில் உள்ள பழங்குடியினர் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக