சனி, 2 பிப்ரவரி, 2019

மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும் .. திரளும் எதிர்க்கட்சிகள்!

மீண்டும் வேண்டும் வாக்குச் சீட்டு: திரளும் எதிர்க்கட்சிகள்!மின்னம்பலம் : வாக்குப் பதிவு எந்திரங்களின் நம்பிக்கையின்மை தொடர்பாக வரும் 4ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை பயன்படுத்துவதால் முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. வாக்குப் பதிவு எந்திரங்கள் வேண்டாம் என்றும் மீண்டும் வாக்குச் சீட்டு முறையையே கொண்டுவர வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் மனுவும் அளித்திருந்தன. ஆனால் அண்மையில் இதுதொடர்பாக பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறை அமல்படுத்தப்படாது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இந்தியாவில் தேர்தல்களின்போது பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து ஒருவர் காணொலி மூலம் செய்தியாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து இந்த விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. நேற்று (பிப்ரவரி 1) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியிலுள்ள அரசியலமைப்பு கிளப்பில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, திமுக எம்.பி கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரைன், சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா, சிபிஎம் எம்.பி டி.கே.ரங்கராஜன், உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதில் வாக்குப் பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “வாக்குப்பதிவு இயந்திரங்களில் நம்பகத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் கருதுவதால் மாற்று ஏற்பாடு தேவை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தலில் பயன்படுத்த கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்த தலைமை தேர்தல் ஆணையரை வரும் திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக