சனி, 2 பிப்ரவரி, 2019

பானுப்ரியா வழக்கில் பணிப்பெண்ணும் தாயும் கைது!

பானுப்ரியா வழக்கில் போலீஸ் அதிரடி!மின்னம்பலம் : நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்த சிறுமியும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிறுமிக்கு பானுப்ரியாவின் சகோதரர் பாலியல் தொல்லைகள் அளித்ததாக சிறுமியின் தாயார் காவல்துறையில் புகாரளித்திருந்தார். தனது மகளை தன்னுடன் அனுப்ப பானுப்ரியா மறுப்பதாகவும், மகளை மீட்டுத்தர வேண்டும் எனவும் சிறுமியின் தாயார் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக பானுப்ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றச்சாட்டை மறுத்த பானுப்ரியா, சிறுமியின் தாயார் பொய் சொல்வதாகவும், அச்சிறுமி தனது வீட்டில் சில பொருட்களை திருடிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
பானுப்ரியா வீட்டில் நகை மற்றும் பணம் காணாமல் போனது குறித்து பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் கடந்த மாதமே காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று (பிப்ரவரி 1) போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, தனது மகள் பணத்தை திருடி தன்னிடம் கொடுத்ததாக சிறுமியின் தாயார் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் சென்னை பாண்டி பஜார் காவல்துறையினர் சிறுமியையும், அவரது தாயாரையும் கைது செய்தனர். தற்போது சிறுமியின் தாயார் புழல் சிறையிலும், சிறுமி சென்னை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக