வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

அமைச்சர் வீரமணி வீட்டில் ரெய்டு- பின்னணியில் எடப்பாடி!

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் வீரமணி  வீட்டில் ரெய்டு- பின்னணியில் எடப்பாடி!மின்னம்பலம் : “வணிக வரித்துறை, பத்திரப் பதிவுத் துறை என வளமானத் துறைகளை கவனித்துவரும் அமைச்சர் வீரமணி வீடு, அலுவலகங்களிலும், அவரது உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு இன்று நடந்திருக்கிறது.
அதிமுக-பாஜக கூட்டணி அமையவில்லை என்றால் மத்திய உளவுத்துறையான ஐ.பி மூலமாகத் தமிழக எம்.எல்.ஏ. எம்.பி, அமைச்சர்கள்,முக்கிய எம்.எல்.ஏ,களின் சொத்து விபரங்களைச் சேகரித்து ரெய்டு நடத்துவோம் என்று பாஜக தலைமை மிரட்டல் விட்டதாக மின்னம்பலத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். ஆனால் பாஜக சொன்னபடி அதிமுகவும் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு, ஒப்பந்தமும் கையெழுத்தான நிலையில் அமைச்சரைக் குறிவைத்து ரெய்டுகள் நடப்பது அதிர்ச்சியாகத்தான் பார்க்கப்படுகிறது அதிமுக வட்டாரத்தில்.

 இதற்கான காரணத்தை விசாரித்தபோது அது மேலும் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது.
அமைச்சர் வீரமணியை டார்கெட் வைத்து நடக்கும் இந்த ரெய்டுகளுக்குப் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் வீரமணிக்கு நெருக்கமானவர்கள். அமைச்சர் வீட்டில் ரெய்டு நடக்க முதல்வரே காரணமாக இருப்பாரா என்று விசாரித்தபோது மேலும் இதுபற்றிய தகவல்கள் கிடைத்தன.
இடையாம்பட்டியில் உள்ள அமைச்சர் வீரமணி வீடு, ஜோலார்பேட்டையில் பொலிட்டிகல் பி.ஏ, சீனிவாசன் வீடு, பரமநந்த நாயுடு திருமலா பால்பண்ணை, வீரமணி சகோதரர் மற்றும் மகள் வீடுகளிலும், திருமண மண்டபம் உட்பட வேலூர் மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் ரெய்டு நடைபெற்றுவருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான தேர்தல் செலவுகளை வீரமணியிடம் செய்யச் சொல்லியுள்ளார் முதல்வர். அதற்கு அமைச்சர் வீரமணி தன்னிடம் ஒருபைசா இல்லை என்றும் தனது சகோதரர் கே.சி அழகிரிக்கு சீட் கொடுத்தால் அவர் போட்டியிடும் தொகுதிக்கு மட்டும் செலவு செய்கிறேன் என்று மோதல் போக்கில் பேசியுள்ளார்.
இதுதவிர இன்னொரு காரணமும் உண்டு. அதிமுக-பாஜக கூட்டணியை தம்பிதுரை போன்றவர்கள் வெளிப்படையாக எதிர்ப்பது மாதிரி பேசிவந்தார்கள். ஆனால் அமைச்சர்கள் வீரமணியும், சி.வி.சண்முகமும்தான் பாஜக கூட்டணியை இப்போது வரை எதிர்த்து வருகிறார்களாம். கூட்டணி இருந்தால் நாம் மிக மோசமான தோல்வியை சந்திப்போம். அதனால் பாஜக கூட்டணி வேண்டாம் என தொடர்ந்து கட்சிக்குள் சொல்லிவருகிறார்கள். ஒருபடி மேலே போய் வீரமணி, ‘போன முறை பிஜேபி ஆதரவில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை தோற்கடிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எல்லோரும் மறந்துட்டீங்களா? இப்போ அந்தக் கூட்டணியில் போய் எல்லோருடனும் கைகோர்த்து நிற்க சொல்றீங்களா?’ என எடப்பாடியிடமே கேட்டிருக்கிறார். எடப்பாடி எவ்வளவோ சமாதானம் செய்தும் வீரமணி சமாதானம் ஆகவில்லையாம்.
வீரமணி மீது எடப்பாடியின் கோபத்துக்கு மூன்றாவது காரணமும் இருக்கிறது. அதிமுகவில் இருந்து தினகரன் அணிக்குப் போன எம்.எல்.ஏ.க்களில் மூன்று எம்.எல்.ஏக்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன், சோளிங்கர் என்.ஜி.பார்த்திபன் , ஆம்பூர் பாலசுப்ரமணி என அந்த மூன்று பேரும் போக காரணமே வீரமணிதான் என நினைக்கிறாராம் எடப்பாடி. வீரமணி அவ்வளவு வீக்காக இருப்பதால்தான் அந்த மூன்று பேரும் தினகரன் அணிக்கு தாவினார்கள் என்பது எடப்பாடி கணக்கு. கே.சி. வீரமணிக்கு பதிலாக கே.பி.முனுசாமியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்பது எடப்பாடியின் திட்டம். வீரமணியும் வன்னியர். முனுசாமியும் வன்னியர் என்பதால் எந்த சிக்கலும் இருக்காது என நினைக்கிறாராம் எடப்பாடி. கே.பி.முனுசாமியை உள்ளே கொண்டு வந்தால், அதன் பிறகு கூட அவரை 6 மாதத்துக்குள் தேர்தலில் போட்டியிட வைத்து ஜெயிக்க வைத்துவிடலாம் என சொல்லி வருகிறாராம். இப்படி முதல்வர் எடப்பாடிக்கும், அமைச்சர் வீரமணிக்கும் இடையே இருக்கும் பிரச்சினைகளால்தான் தேர்தல் நேரம் என்றும் பார்க்காமல் வீரமணியை வீக் ஆக்குவதற்காக ரெய்டு நடக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக