திங்கள், 4 பிப்ரவரி, 2019

மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு!

tamil.news18.com :  ஜனநாயகத்தை காக்கும் போரில் மம்தா பானர்ஜி உடன் துணை நிற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.< தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி<>சிபிஐ அமைப்புக்கு எதிராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்திய தர்ணா போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கொல்த்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.


மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, பாசிச பாஜகவின் செயலை முறியடிக்க மம்தா பானர்ஜிக்கு துணை நிற்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.



இதேபோல், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாசிச பாஜக ஆட்சியில் தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார். கூட்டாட்சி அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்கும் போரில் மம்தா பானர்ஜி உடன் துணை நிற்கிறேன் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.



கொல்கத்தாவில் நடைபெறும் விவகாரங்கள் மிகவும் கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அரசியலமைப்பை பாதுகாக்க மம்தா பானர்ஜியின் பக்கம் துணை நிற்போம் என்றார்.

சிபிஐ அமைப்பை தனது கைப்பாவையாக பயன்படுத்தும் பாஜக-வின் செயல் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கூறிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் மத்திய அரசு இதுபோன்று அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பிற்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கைகள் வினோதமாகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடினார்.

மத்திய அரசு தனது அரசியல் லாபத்திற்காக சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி வருவதாக உமர் அப்துல்லாவும், மத்திய நிறுவனங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இதயமின்றி செயல்படுவதாக மெகபூபா முப்தியும் குற்றம்சாட்டினர்.

அதேநேரம், ஊழலுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்ற உத்தரவை கடைப்பிடிப்பதில்லை என்று பாஜக மூத்த தலைவர் நரசிம்ம ராவ் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே, சிபிஐ விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதே போல், சிபிஐ அதிகாரிகளை சிறைப்பிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக