புதன், 27 பிப்ரவரி, 2019

தே.மு.தி.க.,ஒரே நேரத்தில் நான்கு கட்சிகளோடு பேச்சு வார்த்தை .... ஏரியாக்கள் பிரித்து திரைப்படங்கள் விற்ற அனுபவம்

 குழப்புது தே.மு.தி.க.,dmdkதினமலர் :நான்கு கட்சிகளுடன், தே.மு.தி.க., பேச்சு நடத்துவதால், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி முடிவாவதில், காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தலில், கட்டாய வெற்றியை எதிர்நோக்கி, காய் நகர்த்த வேண்டிய நெருக்கடியில், தே.மு.தி.க., தலைமை உள்ளது.இத்தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைவதற்கு, தே.மு.தி.க., விரும்பியது. நேரடியாக, அ.தி.மு.க., தலைமையை, அக்கட்சி அணுகவில்லை. பா.ஜ., வாயிலாக, அ.தி.மு.க., கூட்டணியில் சேர்வதற்கு பேச்சு நடத்தி வந்தது. அதேநேரத்தில், பா.ம.க., - பா.ஜ.,வுடன் மட்டும், கூட்டணியை முடிவு செய்து, தொகுதி ஒப்பந்தம் செய்துள்ளது, அ.தி.மு.க., தலைமை. எனவே, பா.ம.க.,வை விட, கூடுதல் தொகுதிகளை, தே.மு.தி.க., கேட்டு வருகிறது.
இதற்காக, பா.ஜ., தலைவர்கள் வாயிலாக மட்டுமின்றி, அ.தி.மு.க., அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணியுடனும், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், நேரடி பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார்.இது, ஒருபுறம் இருக்க, விஜயகாந்த் உடல்நலம் விசாரிக்க வந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், கூட்டணிக்கு துாது விட்டு சென்றுள்ளார்.

 ஏற்கனவே, பல கட்சிகள் உள்ளதால், தி.மு.க., கூட்டணியில், குறைந்த தொகுதிகளே, தே.மு.தி.க.,விற்கு கிடைக்கும் என, கூறப்படுகிறது. எனவே, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து, இரண்டை திரும்ப பெற்று தருமாறு, தே.மு.தி.க., தலைமை எதிர்பார்க்கிறது.
இதற்காக,காங்., தலைவர்களிடம், சுதீஷ் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார்.இவ்வாறு, இரண்டு கூட்டணிகளில், ஏதாவது ஒன்றில் சேர்வதற்காக, நான்கு கட்சிகளிடமும், தே.மு.தி.க., பேச்சை தொடர்ந்து வருகிறது. இதனால், தே.மு.தி.க., எந்த அணியில் சேரும் என்ற, அரசியல் எதிர்பார்ப்பு தொடர்கிறது.
அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளில், இழுபறி நீடிப்பதற்கு, தே.மு.தி.க.,வே காரணமாக இருந்து வருகிறது. கடந்த 2014 லோக்சபா, 2016 சட்டசபை தேர்தல்களின் போதும், இதேபோன்று, விஜயகாந்த், கூட்டணியை தாமதப்படுத்தியதால், அவர் அரசியல் பேரம் நடத்துவதாக புகார் எழுந்தது.

இது, மக்கள் மத்தியில், தே.மு.தி.க.,வினருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.தற்போதும், கூட்டணியை முடிவு செய்யாமல், காலம் தாழ்த்துவது, கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கவலைஅடைந்துள்ளனர்.

விருப்ப மனு, 'டல்'

தே.மு.தி.க.,வில், விருப்ப மனு வினியோகம், 'டல்' அடிக்க துவங்கியுள்ளது.தமிழகம், புதுவையில் உள்ள, 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், விருப்ப மனு பெறும் அறிவிப்பை, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் வெளியிட்டார். சென்னை, கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், 24ல், விருப்ப மனு வினியோகத்தை, அக்கட்சியின் பொருளாளர், பிரேமலதா துவக்கி வைத்தார்.

பொது தொகுதி விண்ணப்பம், 20 ஆயிரம் ரூபாய்க்கும், தனித் தொகுதி விண்ணப்பம், 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மார்ச், 6ல், விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து, ஒப்படைக்க வேண்டும் என, கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.

முதல் நாளில் மட்டும், 300க்கும் மேற்பட்டோர், விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தனர். அதன்பின், கட்சியினரிடம் ஆர்வம் குறைந்தது.தினமும், ஐந்து மனுக்கள் விற்பனை செய்யப்படுவதே, அதிசயமாக உள்ளது. விருப்ப மனு வினியோகம், 'டல்' அடிக்க துவங்கியுள்ளதால், அக்கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. உடல்நலக் குறைவால் , விஜயகாந்த் அவதிப்படுவதால், கட்சியினர் ஆர்வமின்றி இருப்பதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக