ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

விலைபோன ஊடகங்கள் : என் வாக்கு விற்பனைக்கு அல்ல!

LR Jagadheesan : ஒரு வாக்காளனைப்பார்த்து உன் வாக்கை விற்காதே என்று
சொல்ல தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊடகத்துக்கும் ஒரு ஊடகருக்கும் அடிப்படை யோக்கியதை இல்லை. காரணம் இவர்கள் தங்களைத்தாங்களே விற்றுக்கொண்டவர்கள்.
இந்த ஊடகங்கள்/ஊடகர்களுக்கு அதை அவர்களின் முகத்துக்கு நேரே சொல்லும் தைரியம் தமிழ்நாட்டின் அறிவுஜீவிகளுக்கும் இல்லை. ஏனெனில் ஊடகர்கள் உருவாக்கித்தரும் ஐந்துநிமிட வெளிச்சத்தை நம்பித்தான் இங்கே பலர் அறிவுஜீவிகளாகவே உருவாக முடிகிறது. உலா வரவும் இயல்கிறது.
இந்த லட்சணத்தில் என் வாக்கு விற்பனைக்கல்ல என்கிற ஒட்டுமொத்த கோஷமுமே ஆபாசமானது. அறுவெறுப்பானது. அசிங்கமானது.
பாஞ்சாலி சபதத்தில் கௌரவர் சபையில் நின்றபடி துரோபதை கேட்பாள் “சூதில் தன்னை பணயம் வைத்து தோற்றபின் தருமன் எப்படி என்னை பணயம் வைக்கமுடியும்? தன்னையே இழந்தவன் என்னை எப்படி உரிமை கோரமுடியும்?”. ஒட்டுமொத்த சபையும் பதிலின்றி தலைகுனியும்.
அதே கதைதான் தமிழ்நாட்டின் ஊடகங்கள்; ஊடகர்களுக்கும். அரசாங்க விளம்பரம் அல்லது 100% கருப்புப்பணத்துக்கு தம்மை விற்றுக்கொண்ட ஊடகங்களும் ஊடகர்களும், அத்தகைய வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் நிலையில் இருக்கும் ஒரு துறையினர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வாக்காளர்களுக்கு கிடைக்கும் அற்பக்காசை வாங்காதே என்று எந்த அடிப்படையில் கூற முடியும்?

தம்மை விற்றுக்கொண்டதன் மூலம் தமிழ்நாட்டு ஊடகங்களும் ஊடகத்தினரும் அடைந்த சம்பாத்தியத்தை வாக்காளர்கள் வாங்குவதாக சொல்லப்படும் பணத்தோடு ஒப்பிட்டால் பல மடங்கு அதிக வருவாய் பார்ப்பது ஊடகங்களும் ஊடகத்தினரும் தானே?
ஒரு எளிமையான கணக்கு பார்ப்போம். ஒரு வாக்காளர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தன் வாக்கை பத்தாயிரத்துக்கு விற்பதாக வைத்துக்கொள்வோம். இன்றைய நிலையில் ஒரு கத்துக்குட்டி நிருபரின் மாத சம்பளமே அதைவிட அதிகம் தானே? ஊடகங்களுக்கு அந்த காசு எங்கிருந்து வருகிறது என்கிற கேள்விக்கு எந்த ஊடகமாவது அது நேர்மையான வழியில் சமரசம் இன்றி வருகிறது என்று தலைநிமிர்ந்து சொல்ல முடியுமா? அந்த நிலையிலா நாம் இருக்கிறோம்?
நம் சௌகரியங்களுக்கு நம்மை நல்ல விலைக்கு கூவிக்கூவி விற்றுக்கொள்ள நமக்கும் நம் துறைக்கும் இருக்கும் உரிமை வாக்காளர்களுக்கு இல்லை என்று சொல்ல முடியுமா? அதுவும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை?
வாக்காளர்களுக்கு ஜனநாயக விழுமியங்களை போதிப்பதற்குமுன் ஊடகங்களும் ஊடகர்களும் தங்களின் அடிப்படை ஜனநாயக கடமையை ஆற்ற முயலவேண்டும். ஏனென்றால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம். ஆனால் அது இன்று ஆட்சியாளர்களின் ஐந்தாம்படையாக மாறிநிற்கிறது. எனவே அந்த அசிங்கத்தில் இருந்து நாம் முதலில் வெளியில் வருவோம். வந்தபின் நாம் எல்லோரும் கூடி வாக்காளர்களுக்கு வகுப்பெடுக்கலாம். எப்படி வாக்களிப்பதென.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக