செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

தங்க தமிழ்ச்செல்வன் : ஜெயிலுக்கு போகணும் என்பதால் இந்த கூட்டணி...

thanga tamilselvan
நக்கீரன் : அதிமுக - பாஜக - பாமக கூட்டணி தொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார் அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்.
 ''நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் மிகப்பெரிய பாடத்தை மக்கள் கொடுப்பார்கள் என்பது உறுதி. நாற்பதும் நமதே என்கிறார்கள். ஆனால் நாற்பதிலும் தோல்வியை சந்திப்பார்கள். ஜெயலலிதா இருந்தபோது மோடியா? லேடியா? என்று பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றது அதிமுக. எக்காரணத்தையும் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவை தெய்வமாக வணங்குகிறோம் என்ற சொன்ன எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் எப்படி இந்த கூட்டணியை ஒத்துக்கொண்டார்கள்.
இந்தக் கூட்டணி நிர்பந்தத்தால் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. மடியில் கனம் இருக்கிறது. கூட்டணி வைக்காவிட்டால் அங்கு இருப்பவர்கள் ஜெயிலுக்கு போகணும் என்பதால்தான் இந்த கூட்டணியை வைத்துள்ளார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக தோற்கும் என்று தெரிந்துதான் வைத்துள்ளார்கள். ஏனென்றால் தங்கள் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்கத்தான் கூட்டணி வைத்துள்ளார்கள்.

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் எப்படியெல்லாம் தாக்கி பேசினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். லாயிக்கு இல்லாத முதல் அமைச்சர், இந்த அரசு ஊழல் மட்டுமே செய்து கொண்டிருக்கிறது, திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று சொன்னவர்கள் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்.
மக்களை என்ன முட்டாள்கள் என நினைக்கிறார்களா? பாமகவுக்கும் இந்த தேர்தலில் பாடம் கிடைக்கும். அதிமுகவுடன் இன்னும் எத்தனைக் கட்சிகள் சேர்ந்தாலும் இந்த தேர்தலில் இவர்கள் நோட்டாவை விட கீழே வாக்குகள் வாங்குவார்கள்''. இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக