ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

BBC பேட்டி : அதிமுக - பாமக கூட்டணியும், நம்பிக்கையிழந்த எட்டு வழிச்சாலை விவசாயிகளும்.. வீடியோ


ஸ்வீட்டி ஜாஸ்மின் - பிபிசி : தமிழுக்காக நாடாளுமன்ற தேர்தலுக்கு
வெளியாகியுள்ள அதிமுக - பாமக கூட்டணி அறிவிப்பு தங்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாக சேலம் எட்டு வழிச்சாலை திட்டப்பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த தமிழக முதல்வர் விவசாய நிலங்களை அழிக்க முயற்சிப்பதும், இத்திட்டம் தவறானது என கூறி நீரையும் மண்ணையும், விவசாய நிலங்களை பாதுகாப்போம் என உறுதி அளித்த பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி வைக்கப்போவதாக அறிவித்த நாள் முதல் தங்கள் சொல்ல இயலாத வேதனையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
சேலம் - சென்னை விரைவுச் சாலை திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கிட்டதட்ட ஒன்பது மாதங்களாக இந்த எட்டு வழிச்சாலை செல்வதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஒருங்கிணைந்து பல்வேறு எதிர்ப்பு கூட்டங்களை, போரட்டங்களை நடத்தி தங்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து எட்டு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்ததோடு மட்டுமல்லாது, இது தொடர்பான புதிய திட்ட அறிக்கையையும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


;விரைவுச் சாலை திட்டம் உடனடியாக செயல்படுத்த அரசு தரப்பில் முயன்றதாகவும், தங்களின் அனுமதி இன்றியும், முறையான அரசு அறிவிப்பு இன்றியும் தங்கள் விளைநிலங்களில் சர்வே கற்கள் அத்துமீறி அரசு நடமுயன்றதை எதிர்த்தும், பொதுமக்களுக்கு பயன்படாத இச்சாலை திட்டத்தை எதிர்த்தும் போராடிய விவசாய பெருமக்களுக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமுக ஆர்வலர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்ததாக கூறுகிறார் விவசாயி மோகன்.
இந்த விரைவுச்சாலை திட்டத்தினை எதிர்த்தும், இயற்கையை பாதுகாக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தீர்ப்பை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்வதற்காக போரட்டம் நடத்த விவசாயிகள் முனைகிறபோது அரசும், காவல்துறையும் அனுமதி மறுத்து வருவதாகவும், இதன் காரணமாகவே அந்நேரங்களில் எல்லாம் தங்களின் சொந்த நிலங்களில் போரட்டங்களை விவசாயிகள் நடத்தியதாகவும் குறிப்பிடுகார் மோகன்.


மேலும் அவர் கூறுகையில், "நீதிமன்றத்தில் இடைகால தடை விதிக்கப்பட்ட காலக்கட்டத்தில், தடையைமீறி ஜருகுமலையில் மண் ஆய்வு, மகுடஞ்சாவடி கணவாய் உட்பட பல பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட மரங்கள் எண்ணிக்கையைவிட அதிக மரங்களை வெட்டியது என பல நடவடிக்கைகள் இந்த சாலை திட்டத்திற்கான பகுதிகளில் நடைபெற்றன.

இதற்காகவும் தனியாக போராட்டங்கள் நடத்தினோம் என்கிற மோகன், தற்போது அரசு கட்சிகளின் நிலைமையை பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது என்கிறார்.
இந்த பிரச்சனை தொடர்பாக தங்களை வழிநடத்துவதாக கூறிய சில கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒன்று. சாலை அமைத்தே தீருவோம் என அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்ட நடப்பு ஆளுங்கட்சியான அதிமுக உடன், பாமக கைகோர்த்து வெளியிட்ட கூட்டணி அறிவிப்பு விவசாயிகளை " யாரையும் " நம்ப இயலாத நிலைக்கு தள்ளிவிட்டதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.  

தங்களின் வாழ்வாதரம் சீர்குலைவதோடு, விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றும் இத்திட்டதினை கைவிட வலியுறுத்தி முன்னெடுத்து செல்பவர் யார் என எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர் இந்த விரைவுச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள்.
இதே பகுதியை சேர்ந்த கலா என்கிற விவசாய பெண்மணி மோகனின் கூற்றை ஆமோதித்து, தங்களுக்கு ஆதரவு தருபவர் யார் என எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், விரைவுச்சாலை திட்டம் நிறைவேற்றபட்டால் பெண் குழந்தைகளை அழைத்து கொண்டு உறவினர்களின் இல்லங்களில் தஞ்சம் போக முடியுமா? என அவர் கேள்வி எழுப்புகிறார்.
 


இப்போராட்டம் உணவுத் தேவையை பாதுகாப்பதற்காகத்தானே என்று கேள்வி எழுப்பிய அவர், அனைத்து மக்களின் உணவு தேவைக்காக போராட்டம் நடத்தும் எங்களுக்கு ஆதரவு தந்து இத்திட்டத்தினை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். நிலங்களுக்கு அதிக பணம் கொடுத்து மக்களை கெடுப்பதை தவிர்த்து, தங்களின் விவசாய நிலங்களை அரசு விட்டு கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார் கலா.
80 வயதான மூதாட்டி செல்லம்மாள் பிபிசி தமிழிடம் கூறும்போது, தலைமுறை தலைமுறைகளாக விவசாயிகளாக வாழும் தங்களை சாவை தவிர வேறு எதுவும் சொந்த மண்ணில் இருந்து பிரிக்க இயலாது என்கின்றர். 


"இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் கிட்டத்தட்ட 25 ஆயிரம் விவசாய குடும்பங்கள் அனாதையாக போகும் சூழல் நிலவும் நிலையில், லாப கணக்கை சொல்லும் தமிழக முதல்வர், இதனால் ஏற்படும் நஷ்ட கணக்கை சொல்ல மறுப்பது ஏன்," எனக் கேள்வி எழுப்புகிறார் முத்துச்சாமி எனும் விவசாயி..
100 சதவீத மக்கள் ஒத்துழைப்பதாக சொல்லும் முதல்வர், உளவுத்துறை வைத்து உண்மையான கணக்கை எடுத்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்காமல் பொய்யான கணக்கை ஏன் கூறுகிறார் என்றும், ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட சென்னை வரை செல்லும் நான்கு வழி சாலை உளுந்தூர்பேட்டை வரையுள்ள கிட்டதட்ட 32 கிமீ தூரத்தை இருவழியாக செல்கின்றது என்றும் இதுவரை அந்த சாலைகளை நான்கு வழியாக மாற்ற முயற்சிக்காமல், விவசாய நிலங்களை அழித்து மேலும் ஒரு நான்கு வழி சாலை அமைத்து யாருக்கு பலன் அளிக்க அதிமுக அரசு முயல்கிறது என கேள்வி அவர் எழுப்பினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக