ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

‘இளையராஜா - 75 கலக்கல் .... அதற்கே இளையராஜா வாங்கிய சம்பளம் சுமார் 3.5 கோடி..

சிறப்புப் பார்வை: ‘இளையராஜா 75’ல் ரிலீஸாகாத பின்னணி!மின்னம்பலம் : -இராமானுஜம்
தமிழ் திரையுலகம் சாதனையாளர்களை கௌரவிக்க, தங்கள் துறைக்கு நன்மை செய்தவர்களை பாராட்ட, விழாக்கள் பலவற்றை நடத்தியிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பாராட்டு விழாக்களை பலமுறை நடத்தியிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இவர்கள் இருவரும் சம்பளமாக பணம் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இளையராஜாவின் பாராட்டு விழா அப்படிப்பட்டதாக இருக்கவில்லை.
1976 மே 14 அன்று வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் மறைந்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, இந்திய சினிமாவில் 42 ஆண்டு காலம் பல மொழிகளில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்தவர். இளையராஜா தனது இசை பயணத்தில் மூன்றாம் தலைமுறையோடு பயணித்துக் கொண்டிருக்கிறார். இளையராஜாவிடம் 500 படங்களுக்கு மேல் கீபோர்டு பிளேயராக பணியாற்றிய A.R.ரஹ்மான் 1992ல் ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் வரை தமிழ் சினிமாவில் பறந்து வந்த ராஜாவின் கொடி இறங்கியது.

இளையராஜாவுக்கு 75 வயது நிறைவடைவதையொட்டி, அவரை கௌரவிக்கும் வகையில் ‘இளையராஜா - 75’ எனும் பெயரில் சென்னையில் இரண்டு நாள் விழா நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்தது. ஏற்கெனவே நடந்த விழாக்களை தமிழ் திரையுலகம் ஒன்றுபட்டு ஒற்றுமை உணர்வுடன் நடத்தினார்கள். அவ்விழாக்கள் தமிழ் சினிமாவில் வரலாறாக மாறியது. இளையராஜாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்த அவர் வாங்கியுள்ள சம்பளம் சுமார் 3.5 கோடி என்கிற தகவல் தமிழ் திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்மோனிய பெட்டியுடன் சென்னை வந்த ராசய்யா என்ற இளைஞனை இளையராஜாவாக மாற்றி உச்சி முகர்ந்து உயரத்தில் அமர்த்தி அழகு பார்த்தது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தான். தனது இசைத் திறமையால் வளர்ந்திருந்தாலும் அதற்கு அடித்தளமிட்டு, வாய்ப்புகளை வழங்கியது தயாரிப்பாளர்களே. அவர்களது சங்கம் நடத்தும் பாராட்டு விழாவை எந்த விதமான சன்மானமும் வாங்காமல் கலந்து கொள்கிறேன் என கூறுகிற பக்குவம், பெருந்தன்மை இளையராஜாவிடம் இல்லை. அதன் ஆதங்கம், எதிரொலியை பிப்ரவரி 2 அன்று சென்னையில் நடந்த முதல் நாள் நிகழ்ச்சியில் காண முடிந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். இளையராஜாவின் இசை வளர காரணமாக இருந்த இயக்குனர்களும், பாடலாசிரியர்களும், தயாரிப்பாளர்களும் முதல் நாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக இளையராஜாவின் இசையை தன் பாடல் வரிகள் மூலம் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்த கவிஞர் வைரமுத்து; அப்பாடல் வரிகள், இசையை காட்சிகள் மூலம் திரையரங்குகளுக்கு கொண்டு சென்ற இயக்குனர் பாரதிராஜா இருவருமே விழாவுக்கு வரவில்லை. அவர்கள் இந்த விழாவில் இடம்பெறுவதே இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
இளையராஜாவை பெருமைப்படுத்தும் விழாவில் அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள் ராஜாவுடனான அனுபவங்களை, அவரது இசை ஆளுமையை பற்றி பேசியிருப்பதற்கான ஏற்பாடுகளை விழா ஏற்பாட்டாளர்கள் செய்யத் தவறிவிட்டு, கிடைத்தவர்களை வைத்து சோபையான நிகழ்ச்சிகளை அரங்கேற்றியது கண்டு விழாவுக்கு வந்தவர்களின் முகம் இருண்டுபோனதைக் காண முடிந்தது. இந்த விழாவுக்கு A.R.ரஹ்மானை கலந்து கொள்ள சம்மதிக்க வைத்த இயக்குனர் பார்த்திபன் தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததற்கான காரணமும் புரிந்தது. இது போன்ற விழாக்களில் நிகழ்ச்சிகளை வடிவமைப்பதிலும், ஒருங்கிணைப்பதிலும் கைதேர்ந்த பார்த்திபன் கூறிய ஆலோசனைகளை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் நிராகரித்ததால் நடக்கப் போகிற சொதப்பல் நிகழ்ச்சிகளுக்கு தானும் காரணமாகிவிடக் கூடாது என்ற சுய மரியாதையே அவரை ராஜினாமா கடிதம் கொடுக்க வைத்தது என்கின்றனர்.

A.R.ரஹ்மான் விழா அரங்கிற்குள் நுழைந்த போது அரங்கம் அதிர கைத்தட்டல் ஒலித்தது. இளையராஜாவை கௌரவிக்க மேடையேறிய போது அவர் மூலம் தன் பெருமை பேசவைக்க பலமுறை முயற்சித்தார் இளையராஜா. அதனை ஒற்றை வரி பதிலில் முடிவுக்கு கொண்டு வந்தார் ரஹ்மான். “என்னிடம் 500 படங்களுக்கு வேலை செய்ததை நீ கூறவில்லையே?” என இளையராஜா கூறிய போது, ‘அவரைப் பாராட்ட வந்த மேடையில் இதெல்லாம் தேவையா?’ என்ற குரல்களை ரசிகர்கள் மத்தியிலிருந்து கேட்கமுடிந்தது. "உங்களிடம் ஒரு படம் வேலை செய்தாலே எல்லா அனுபவமும் கிடைக்கும்” என்ற ஒற்றை வரி பதிலில் தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தினார் ரஹ்மான்.
வரலாறு அறியாதவர்கள் தலைமை பொறுப்பில் இருந்து நடத்துகிற விழாக்கள் அமெச்சூர் தனமாக இருக்கும் என்பதை முதல் நாள் விழா நிகழ்ச்சிகள் பறைசாற்றியது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு அறிவும், அனுபவமும், ஆளுமையும் மிக முக்கியமானது. நடிகையாக இருந்தால் மட்டும் போதுமானதல்ல என்பதை சுஹாசினி, அவரது தங்கை, சர்ச்சைக்குரிய நடிகை கஸ்தூரி ஆகிய ரிட்டயர்டு நடிகைகளை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஏற்பாடு செய்ததில் வெளிப்பட்டது நிகழ்ச்சி வடிவமைப்பாளர்களின் அமெச்சூர் தனம்.
பொதுவான ஒரு விழாவில் தங்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை அரங்கேற்றும் விதமாக நிகழ்ச்சிகளை அரங்கேற்ற அனுமதித்த விஷாலின் முடிவு எதிர்வரும் நாட்களில் பிரச்சினைகளையும், விவாதத்தையும் திரையுலகில் ஏற்படுத்தும். அவருக்கு எதிராக இயக்குனர்கள் சங்கம் கண்டனங்களை வெளிப்படுத்தவும் கூடும். ஏனென்றால், தமிழ் சினிமாவில் இளையராஜா பங்களிப்பு இல்லாமல் வெற்றிப் படங்களை இயக்கியவர்கள் T.ராஜேந்தர், ஷங்கர், S.J.சூர்யா, ஹரி, சுந்தர்.சி ஆகியோர். இவர்கள் இளையராஜாவிடம் இசையமைக்க கேட்டு வருவது போன்று டிராமா ஒன்றை நடத்தியதில் தெரிந்தது இளையராஜாவின் ஆதங்கமும், நடிகர் விஷாலின் வெறுப்பும்.
இளையராஜா தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் அஷ்டாவதனியாக தனி ராஜாங்கம் நடத்தி தனது படங்களை வெற்றி பெற வைத்ததுடன், அப்படத்தின் பாடல்களை தனது இசையால் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கச் செய்தவர் T.ராஜேந்தர். சிம்புவை சீண்ட விரும்பியவர்கள் ராஜேந்தரை காமெடியானாக சித்தரித்து கலாய்க்கும் வகையில் நிகழ்ச்சியை வடிவமைத்து அரங்கேற்றியது அறுவை ரகம் மட்டுமல்ல, சாதனையாளரை அவமானப்படுத்தியதற்கு ஈடானது. மற்ற நால்வரையும் அவமானப்படுத்தியது எப்படி? நாளை காலை 7 மணி பதிப்பில் தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக