செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

பா.ம.க.,வுக்கு அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் ஒதுக்கீடு

தினமலர்: சென்னை: அதிமுக கூட்டணியில்
பா.ம.க.,வுக்கு 7 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்க உள்ளது. லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணியை, அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினார். இதன் பின்னர், சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு, ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வந்தனர். அவர்களை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பேச்சுவார்த்தை
தொடர்ந்து, இரு தரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், அதிமுக தரப்பில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி ஆகியோரும், பா.ம.க., சார்பில், ராமதாஸ், அன்புமணி, ஜி.கே. மணி ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து அதிமுக, பாமக இடையே கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.


இதன் பின்னர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.





பா.ம.க., ஆதரவு

அப்போது, அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், லோக்சபா தேர்தலில் அதிமுகவும் பாமகவும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. பாமகவுக்கு 7 லோக்சபா சீட்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்படுகிறது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாம.க., ஆதரவு அளிக்கும் என்றார்.


வெற்றி கூட்டணி
பின்னர் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், அதிமுக - பாமக கூட்டணி., மக்கள் நலகூட்டணி, மெகா கூட்டணி. எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே கூட்டணி வைத்துள்ளோம். அந்த கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் வழங்கியுள்ளோம். 40 தொகுதிகளிலும் அதிமுக பாமக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக