வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

அதிமுக-பாஜக கூட்டணி இழுபறி ஏன்? விஜயகாந்துக்கு ஒரு தொகுதிதான் அதிமுக கண்டிப்பு .. 4 தொகுதி கேட்டு கெஞ்சல் ...

புறப்பட்ட பியூஷ் கோயல் நள்ளிரவு பேச்சுவார்த்தை tamil.oneindia.com veerakumaran.: விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தியும் இழுபறி ஏன்?- வீடியோ சென்னை: அதிமுகவுடன் பாஜக நடத்திய 3 மணி நேரத்திற்கும் மேலான கூட்டணியில் முடிவு எட்டப்படவில்லை. இதற்கான பின்னணி காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது.
பாமகவிற்கு 4 தொகுதிகள் தேமுதிகதான் காரணம் சென்னையில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் வைத்து நேற்று இரவு, தமிழக, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். அதிமுக தேர்தல் பணிக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் இந்த அமைச்சர்கள்.
இரவு 10 மணிக்கு மேல் ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு தாண்டியும் சென்றது.


நள்ளிரவு பேச்சுவார்த்தை

இரவு 1 மணியளவில்தான் இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்தது. இதனால் இரவு முழுக்க கூட்டணி தொடர்பாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது. நள்ளிரவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகுமோ என்ற எதிர்பார்ப்பில் பாஜக, அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி பத்திரிகையாளர்களும் காத்திருந்தனர். ஆனால், 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகும், கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


புறப்பட்ட பியூஷ் கோயல்

இதையடுத்து பியூஷ் கோயல், டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த பேச்சுவார்த்தையில், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். அவர்களிடம் நிருபர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கேள்விகளை சரமாரியாக எழுப்பினர்.


திருப்தி

பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. இது கூட்டணி பேச்சுவார்த்தையின் தொடக்கமே என்பதால், பேச்சுவார்த்தை தொடரும். ஹோட்டல்களில் சந்திப்பதற்கு பதிலாக இல்லத்தில் சந்தித்தோம். எது நல்லதென்று நீங்களே சொல்லுங்கள். வெகு விரைவில் நல்ல செய்தி வரும் என்றார்.


பின்னணி என்ன

தமிழிசை கூறுகையில், திமுக, காங் அல்லாத பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. அதிக இடங்களில் வெல்வதே இலக்கு என்றார். ஆக மொத்தம் இருவருமே, கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்டது என கூறவில்லை. எதற்காக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை என்பது குறித்து, கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் விசாரித்தோம்.


தேமுதிகதான் காரணம்

அதிமுக மற்றும் பாஜக நடுவேயான கூட்டணி ஏற்கனவே அதிகாரப்பூர்வம் இல்லாத பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவடைந்துவிட்டது. ஆனால், பிற கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதில்தான் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக விஜயகாந்த்தின் தேமுதிகவிற்கு 1 தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என அதிமுக தெரிவித்துவிட்டது. ஆனால் விஜயகாந்த் கட்சி சார்பில் 4 தொகுதிகள் கேட்கப்படுவதுதான் தொகுதி பங்கீடு இழுபறிக்கு காரணம்.


பாமகவிற்கு 4 தொகுதிகள்

பாமகவிற்கு 4 தொகுதிகள் வழங்க அதிமுக, பாஜக ரெடியாக உள்ளன. ஆனால் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டதை கருத்தில் கொண்டு ஒரு தொகுதிதான் வழங்க முடிவு செய்துள்ளன. இதை தேமுதிக ஏற்கவில்லை. இதனால்தான், தொகுதி பங்கீட்டில் முடிவு எட்டப்படவில்லை. மேலும், ஆலோசனை நடைபெற்ற இல்லத்தில் இருந்தே, வீடியோ கான்பரன்ஸ் மூலம், அமெரிக்காவிலுள்ள விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுடனும் ஆலோசிக்கப்பட்டு அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில், பியூஷ் கோயல் ஈடுபட்டாராம். ஆனால், முடிவு கிடைக்கவில்லையாம். தேமுதிக 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளதாம்.



விஜயகாந்த் சில தினங்களில் சென்னை திரும்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்த பிறகு மீண்டும் பியூஷ் கோயல் சென்னை வந்து, கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி தொகுதிகளை இறுதி செய்வார் என தெரிகிறது. வீடியோ கான்ரபன்ஸ் நடந்ததாமே என தமிழிசையிடம் நிருபர்கள் கேட்டபோது, கான்பரன்ஸ் (ஆலோசனை) நடந்தது, வீடியோ கான்பரன்ஸ் நடக்கவில்லை என்று பஞ்ச் அடித்துவிட்டு கிளம்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக