திங்கள், 25 பிப்ரவரி, 2019

Banglaore 300 கார்கள் தீயில் நாசமானதற்கு காரணம் .. சிகரெட் என மூடி மறைக்க முயற்சி

சிகரெட் என மூடி மறைக்க முயற்சி... பெங்களூரில் 300 கார்கள் தீயில் எரிந்து நாசமானதற்கு காரணம் இதுதான்...tamil.drivespark.com :பெங்களூரில் 300 கார்கள் தீயில் எரிந்து நாசமானதற்கு சிகரெட்தான் காரணம் என மூடி மறைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் ஏற்பட்ட தீ விபத்தில், 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சம்பவம் நிகழ்ந்த இடம் இந்திய விமான படைக்கு சொந்தமானது என்பதால், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பெங்களூர் எலகங்கா பகுதியில் உள்ள இந்திய விமான படைக்கு சொந்தமான தளத்தில், சர்வதேச ஏர் ஷோ மற்றும் விமான கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது.

ஏரோ இந்தியா என்ற பெயரில், கடந்த 1996ம் ஆண்டு முதல், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்நிகழ்ச்சி நடந்து கொண்டுள்ளது. இந்த சூழலில் ஏரோ இந்தியா-2019 நிகழ்ச்சி, பெங்களூர் எலகங்கா விமான படை தளத்தில், கடந்த 20ம் தேதி (புதன் கிழமை) தொடங்கியது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
5 நாள் நிகழ்ச்சியான இதில், நூற்றுக்கணக்கான விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள ரபேல் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் கூட நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது உலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான ராணுவ விமான கண்காட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட அனைவரும், ஏரோ இந்தியா-2019 நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்து கொண்டுள்ளனர். உலகின் கவனம் முழுக்க இந்நிகழ்ச்சி மீதே குவிந்திருந்தது.
இப்படிப்பட்ட சூழலில்தான், 300 கார்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கேட் எண்-5 அருகே பார்க்கிங் செய்யப்பட்டிருந்த வாகனங்கள் நேற்று மதியம் (பிப்ரவரி 23) திடீரென தீப்பற்றி எரிந்தன. கொளுந்து விட்டு எரிந்த தீ, விமானங்கள் வெடித்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கியது.
அப்பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியதால், விமானங்கள்தான் வெடித்து சிதறி விட்டனவோ? என்ற பீதி, மக்களுடன் சேர்த்து அதிகாரிகளையும் தொற்றி கொண்டது. ஆனால் பின்னர்தான் கார்கள் தீப்பற்றி எரிவது தெரியவந்தது. சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், 300 கார்கள் எரிந்து நாசமாகி விட்டதாக தீயணைப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் 150 கார்கள் மட்டுமே எரிந்ததாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவிரைவு படை, என்டிஆர்எப் எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை படை (NDRF-National Disaster Response Force) உள்ளிட்ட படைகளை சேர்ந்த வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மொத்தம் 12 தீயணைப்பு வாகனங்கள் களத்தில் இறக்கப்பட்டன. அத்துடன் இந்திய விமான படை சார்பில், உடனடியாக ஒரு ஹெலிகாப்டரும் களமிறங்கியது. கட்டுக்கடங்காமல் பரவிய தீயை எதிர்த்து போராடி கொண்டிருந்த வீரர்களுக்கு, இந்த ஹெலிகாப்டர் பேருதவி செய்தது.
தமிழர்களின் வாகனங்களை தீயிட்டு கொளுத்திய கன்னட மக்கள் நன்கு அனுபவிக்கட்டும் என்பது போன்ற கருத்துக்கள் தற்போது சமூக வலை தளங்களில் முன் வைக்கப்படுகின்றன. கார்களை இழந்தவர்களின் கதறலை கண்டிருந்தால், இத்தகைய விஷமத்தனமான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருக்காது.
கேட் எண்-5 பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள்தான் எரிந்து நாசமானது. மற்ற பகுதிகளில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த வாகனங்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் நேரவில்லை. இருந்தபோதும் அனைவரின் முகத்திலும் பதற்றத்தை காண முடிந்தது.
MOST READ: ஆட்டோவை பூங்காவாக மாற்றிய உரிமையாளர்… காரணம் என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்… அ
ப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படை (BSF-Border Security Force) வீரர் ஒருவரிடம், நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் கதறி கொண்டிருந்தார். ”எனது கார் பாதுகாப்பாக உள்ளது என்பதை நீங்கள் உறுதி செய்து விடுவீர்களா? எனது முக்கிய ஆவணங்கள் அதில்தான் உள்ளன. இன்சூரன்ஸ் க்ளைம் செய்வதென்றால் கூட அவை தேவை” என அவர் கூறிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
இந்த சூழலில் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள ஒரு பகுதியில் எவ்வாறு தீ பற்றியது என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது. காய்ந்த புற்களின் மீது அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட் துண்டு காரணமாக தீப்பற்றி, கார்களுக்கும் பரவி இருக்கலாம் என முதலில் கூறப்பட்டு வந்தது.
உண்மையில் தீ விபத்து நிகழ்ந்த அதே பகுதியில், கடந்த 21ம் தேதியன்றும் (வியாழக்கிழமை) தீ பற்றியிருந்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் அப்போது சிறிய அளவில் மட்டுமே தீ பற்றியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படாமல், அலட்சியம் காட்டப்பட்டுள்ளது. அதிகாரிகளின் சிறிய அலட்சியம் காரணமாக, வெறும் ஒரு நாள் இடைவெளியில், 300 கார்கள் தீக்கிரையாகியுள்ளன.
முதல் முறை தீ விபத்து நிகழ்ந்தபோதே அதிகாரிகள் சுதாரித்து, போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம். இதுதவிர இந்த பயங்கர தீ விபத்து தொடர்பாக மேலும் சில அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகியுள்ளன. ஷார்ட் சர்க்யூட் (Short Circuit) காரணமாக, முதலில் ஒரு காரில் மட்டும் தீப்பற்றியிருக்க கூடும் என கூறப்படுகிறது.

இந்த தீ அங்கிருந்து, இரண்டாவது காருக்கும் பரவியுள்ளது. இந்த வகையில் இரண்டாவதாக தீப்பற்றிய கார், சிஎன்ஜி ரகத்தை சேர்ந்தது (CNG-Compressed Natural Gas) என தெரிகிறது. எனவே இந்த கார் பயங்கரமாக வெடித்து, மற்ற கார்களுக்கும் தீ மளமளவென பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சூழலில், இது இந்திய பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால், தீவிரவாதிகளின் நாச வேலையாக இருக்குமோ? என்ற சந்தேகமும் ஒரு பக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
பெங்களூர் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கிய ஏரோ இந்தியா-2019 விமான கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் பெங்களூர் தீ விபத்தில் கார்கள் பற்றி எரியும் அதிர்ச்சிகரமான வீடியோ, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக