திங்கள், 25 பிப்ரவரி, 2019

தேமுதிகவுக்கு திமுக 3 + காங்கிரஸ் 2 = மொத்தம் 5 தொகுதிகள்?

டிஜிட்டல் திண்ணை: 5 சீட்... விஜயகாந்துக்கு ஸ்டாலின் அழைப்பு!மின்னம்பலம் : திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் கூட்டணி பேச்சுவார்த்தை வேகமெடுத்து தற்போது, சற்று தொய்வு நிலையில் இருக்கிறது. அதற்கு காரணம் தேமுதிக. விஜயகாந்த்தை வீடு தேடிப் போய் எல்லோருமே பார்த்து வந்தார்கள். தேமுதிக யார் பக்கம் போகப் போகிறது என்ற இழுபறி நீடிப்பதே தொய்வுக்கான காரணம்.
திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கான சீட் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக எல்லாமே அப்படியே இருக்கிறது. அதற்கு காரணம், தேமுதிகவுக்கான சீட்டை உறுதிப்படுத்திவிட்டு மற்ற கட்சிகளுக்கான சீட்டை முடிவு செய்யலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தைதான் தொடர்கிறது.

தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் எல்லோரும் சென்னைக்கு படையெடுத்து வந்திருக்கிறார்கள். தலைமைக் கழகத்தில் சுதீஷை சந்தித்து மாவட்டச் செயலாளர்கள் பேசியிருக்கிறார்கள். ‘பிஜேபி மீதும் , அதிமுக மீதும் மக்கள்கிட்ட கடுமையான எதிர்ப்பு இருக்கு. அந்தக் கட்சிகளோடு கூட்டணி வைக்கிறது என்பது சரியாக இருக்காது. திமுக கூட்டணிக்கு போறதுதான் நமக்கு சரியாக இருக்கும். நம்ம கட்சியில் இருந்து இதுவரை யாரும் பாராளுமன்றத்துக்குப் போனது இல்லை. இப்போ அதற்கான நேரம் கனிந்து வந்திருக்கு. அது பிஜேபி-அதிமுக கூட்டணியில் இருந்தால் நடக்காது. போன சட்டமன்றத் தேர்தலில் எல்லோரும் திமுக கூட்டணிதான் சரியாக இருக்கும் என்று சொன்னோம். மாற்றி முடிவெடுத்தீர்கள். கேப்டனே தோற்றுப் போய்விட்டார். இப்போதாவது நாங்கள் சொல்வதை தயவு செய்து கேளுங்கள்’ என்று கெஞ்சியபடி சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சுதீஷ், ‘திமுகவில் இருந்து ஸ்டாலின் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். நல்லதுதான் நடக்கும்...’ என்று சொன்னாராம்.
மேலும், ‘தேமுதிக கூட்டணிக்கு வரவில்லையென்றாலும் பரவாயில்லைனு அமைச்சர் ஜெயக்குமார் சொன்னது குறித்தும் சுதீஷிடம் ஒரு மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதற்கு சுதீஷ், ‘ஜெயக்குமார் வரலைன்னா பரவாயில்லைங்குறாரு, எடப்பாடி பழனிசாமியோ பேசிக்கிட்டிருக்கோம்னு சொல்றாரு. நல்லா டிராமா பண்றாங்க. இப்படித்தான் பிஜேபியை தம்பிதுரை கடுமையா பேசிக்கிட்டிருந்தாரு. இன்னிக்கு அவரே வேறமாதிரி பேசுறாரு. தேமுதிககிட்டயும் நாடகம் போடறாங்க. அது பலிக்காது’ என பதில் சொல்லியிருக்கிறார் சுதீஷ்.
தேமுதிக வட்டாரத்தில் இன்னொரு விஷயமும் சொல்கிறார்கள். ‘ஆரம்பத்தில் 3 சீட்டில் இருந்த திமுக இப்போது 5 சீட்டுக்கு வந்திருக்காங்க. இன்னும் கொஞ்சம் இழுத்துப் பார்ப்போம் என்ற மனநிலையில்தான் தலைமை இருக்கு. ஏன்னா, எங்களுக்கு 5 சீட் கொடுக்கறதுக்காக காங்கிரஸுக்கு ஏற்கனவே கொடுத்த 10 தொகுதியில 2 சீட்டைக் குறைச்சு 8 ஆக கொடுக்கலாம்னு திமுக பேசிக்கிட்டிருக்காங்க. அந்தத் தகவல் எங்களுக்கு வந்திருக்கு. அதனால, இன்று இரவு அறிவிப்பு வரலாம். இல்லைன்னா, நாளையும் நாளை மறுநாளும் அஷ்டமி நவமிங்குறதால என்பதால் அது முடிந்த பிறகு பேசிக்கலாம் என்ற யோசனையில் இருக்காரு கேப்டன்’ என்பதுதான் அவர்கள் சொல்வது” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், ‘அதிமுக வட்டாரத்தில் என்ன நிலை?’ என்ற கேள்வியை போட்டது. பதில் அடுத்த மெசேஜ்ஜில் வந்தது.
“இன்று அமைச்சர் ஜெயகுமார் பேசியதில் இருந்தே சொல்கிறேன்.. ‘தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில்தான் தேர்தல் கூட்டணி அதில் எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியை பார்த்து ஸ்டாலின் விரக்தியின் உச்சகட்டத்துக்கே போய்விட்டார். டி.டி.வி. தினகரன் ஒரு தனி மரம். இனி அவருடைய அரசியல் இங்கே எடுபடாது. அவர் ஒரு வெற்று காகிதம். அதைப்போல கமல்ஹாசனுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இந்த மூன்று பேருக்கும் அ.தி.மு.க. மெகா கூட்டணியை பார்த்து காய்ச்சல் வந்துவிட்டது.கிராமசபை, ஊராட்சி சபை ஏன் ஐ.நா. சபை நடத்தினாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தே.மு.தி.க.வில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவது அந்த கட்சியினுடைய தனிப்பட்ட செயல். அதனால் கூட்டணி பேச்சு வார்த்தை முற்றுப்பெற்றது என்று சொல்லி விட முடியாது. ஸ்டாலின் விஜயகாந்தை சந்திக்கும்போது அரசியலும் பேசினார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார். இதிலிருந்து உண்மை தெரிகிறது. ஸ்டாலினுக்கு அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணிக்கு போய்விடக்கூடாது என்ற எண்ணம். தேர்தல் கூட்டணிக்காக தி.மு.க. எல்லோரது கால்களிலும் விழுகிறது. இதுதான் அவர்களின் நிலைமை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை இன்னும் கூட்டணிக்கான கதவு திறந்திருக்கிறது, பேச்சு வார்த்தை நடக்கும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்’ என்பதுதான் அவரது கருத்து. அதாவது தேமுதிக வந்தாலும் மகிழ்ச்சி. வரவில்லை என்றாலும் அதைப்பற்றி கவலை இல்லை என சொல்லிவிட்டார் ஜெயகுமார்.
தேமுதிக வாக்கு வங்கி என்பது 10 சதவீதத்தில் இருந்து இப்போது குறைந்துவிட்டது என நினைக்கிறது அதிமுக தரப்பு. அதனால் ஜெயலலிதா இருந்த சமயத்தில் விஜயகாந்துக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இப்போது கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறார்கள். ‘4 சீட் வரை நாம பேசி பார்த்தாச்சு. வந்தால் வரட்டும். இல்லைன்னா எங்கே வேணும்னாலும் போகட்டும்...’ என அதிமுக அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே சொல்லி வருகிறார்களாம். எங்கே போவார் விஜயகாந்த் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்” என்று முடிந்தது அந்த பதில் மெசேஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக