திங்கள், 18 பிப்ரவரி, 2019

ஸ்டெர்லைட் தீர்ப்பு: தற்காலிகமாக நிம்மதி மூச்சு விட கொடுத்த விலை 14 உயிர்கள்; கனிமொழி

THE HINDU TAMIL : தூத்துக்குடி மக்கள் தற்காலிகமாக நிம்மதி மூச்சு விட கொடுத்த விலை 14 உயிர்கள் என, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், ஆலையைத் திறக்க கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கில் இன்று (திங்கள்கிழமை) தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி மக்களுக்கு கிடைத்த தற்காலிக  வெற்றி இது. இனி அடுத்த கட்ட சட்டப் போராட்டம் உயர் நீதிமன்றத்தில்...அங்கும் வெற்றி கிடைக்கட்டும். தற்காலிகமாக நிம்மதி மூச்சு விட கொடுத்த விலை 14 உயிர்கள்!" என கனிமொழி பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக