வியாழன், 21 பிப்ரவரி, 2019

அதானி மருத்துவமனையில் 1,000 குழந்தைகள் மரணம்!

அதானி மருத்துவமனையில் 1,000 குழந்தைகள் மரணம்!மின்னம்பலம் : குஜராத்தில் பிரபல தொழிலதிபர் அதானி நடத்தி வரும் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதாக குஜராத் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி பவுண்டேசனுக்கு சொந்தமான ஜிகே பொது மருத்துவமனை குஜராத் மாநிலத்தின் குச் மாவட்டத்தில் உள்ள பூஜ் நகரில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு தொடர்பாகக் குஜராத் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சந்தோக்பென் அரெதியா கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், கடந்த 5 ஆண்டுகளில் இம்மருத்துவமனையில் 1,018 குழந்தைகள் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், “2014-15ஆம் ஆண்டில் 188 குழந்தைகளும், 2015-16ஆம் ஆண்டில் 187 குழந்தைகளும், 2016-17ஆம் ஆண்டில் 208 குழந்தைகளும், 2017-18ஆம் ஆண்டில் 276 குழந்தைகளும், 2018-19ஆம் ஆண்டில் 159 குழந்தைகளும் அதானி பவுண்டேசனுக்குச் சொந்தமான ஜிகே பொது மருத்துவமனையில் பல்வேறு நோய்கள் மற்றும் மருத்துவக் கோளாறுகள் காரணமாக இறந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
மேலும், “குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை அறிய கடந்த ஆண்டு மே மாதத்தில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறைப்பிரவசம், தொற்றுநோய்கள் மற்றும் சுவாசக்கோளாறுகள் போன்ற பல்வேறு காரணங்கள் குழந்தைகளின் மரணத்துக்குப் பின்னால் இருப்பதை இந்த கமிட்டி கண்டறிந்துள்ளது. உரிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படித்தான் இம்மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது” என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளில் ஒரே மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருப்பது, குஜராத்தில் இம்மருத்துவமனையின் சிகிச்சை முறைகள் மீதான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக