சனி, 12 ஜனவரி, 2019

முதல்வர் மீது வழக்குப் பதிவு: திமுக வலியுறுத்தல்.. “முதல்வர்தான் முதல் குற்றவாளி”.. ஆ.ராசா

மின்னம்பலம் :கொடநாடு விவகாரத்தில் பல்வேறு கேள்விகளை
எழுப்பியுள்ள ஆ.ராசா, “முதல்வர்தான் முதல் குற்றவாளி” என்றும் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொள்ளை, அதுசம்பந்தமாக அடுத்தடுத்து நடந்த கொலைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டி ஆவணப்படம் ஒன்றை தெகல்ஹா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி இன்று (ஜனவரி 12) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், கொடநாடு அடங்கும் நீலகிரி தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான ஆ.ராசா.
“எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில்தான் தாங்கள் ஆவணங்களை கொள்ளையடிக்கச் சென்றோம் என்று சயன் கூறுகிறார். இவையெல்லாம் ஏன் நடக்க வேண்டும். ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் அங்குள்ள கொடநாட்டிலுள்ள எல்லா அறைகளுக்கும் சென்றுவரக் கூடியவர், அவர் இரவு நேரத்தில் 4 வாட்சையும் ஒரு பேப்பர் வெயிட்டையும் எடுப்பதற்காக போக வேண்டிய அவசியம் என்ன? என்ற சந்தேகத்தினை ஆ.ராசா முன்வைத்துள்ளார்.

“ஜெயலலிதா கொடநாட்டை ஒரு கேம்ப் அலுவலகமாக, தலைமைச் செயலகத்தில் இருந்து ஆற்றக் கூடிய பணிகளை அதிகாரிகளை வரவழைத்து அங்கு பணியாற்றியுள்ளார். இதனை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்துள்ளார். முன்னாள் துணை முதல்வரின் இல்லத்துக்கே போலீஸ் பாதுகாப்பு இருக்கும் நிலையில், மேற்குறிப்பிட்ட சம்பவம் நடக்கும் அன்று இரவு கொடநாடு எஸ்டேட்டில் ஒரே ஒரு காவலர் கூட இல்லையா? அதற்கு காரணம் என்ன?.
நான் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோதுதான் கொடநாட்டிற்கு 24 மணி நேரமும் தடைபடாத வகையில் செல்லும் மின்சார லைனுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அப்படியிருந்தும் சம்பவம் நடந்த அன்று மின்சாரம் தடைபட்டதன் காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் உள்ளனர்? கொடநாடு எஸ்டேட்டில் உள்ள 27 சிசிடிவி கேமராக்களும் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்யாததன் காரணம் என்ன என்பது உள்பட பல்வேறு கேள்விகளையும் ராசா முன்வைத்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமிதான் இதனைச் செய்யச் சொன்னார் என்று சயனும் மனோஜூம் கூறியுள்ள நிலையில், இதில் முதல் குற்றவாளி முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்று நேரடியாகக் குற்றம் சாட்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ள ராசா, “மாநகர ஆணையர் நேர்மையானவர் என்றால், முதல்வரே மனமுவந்து விசாரிக்க வேண்டுமென்று சொன்னால் முதல்முதலில் சயனிடமிருந்துதான் விசாரணையை தொடங்க வேண்டும். அவரை அப்ரூவராக மாற்ற வேண்டும். நீதிபதி முன்னால் அழைத்துச் சென்று, அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமிதான் முதல் குற்றவாளி என்றும் விமர்சித்துள்ளார்.
“கமிஷனர் முதல்வருக்கு கீழ் வேலை செய்கிறார். தனக்கு கீழ் வேலை செய்யும் கமிஷனரிடம் முதல்வர் மனு கொடுத்தால், அந்த விசாரணையை உண்மையாக இருக்குமா” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனை வெளிப்படுத்தியது திமுகவோ, சிபிஐயோ, சிபிஎம்மோ அல்ல. எனவே இது அரசியல் வழக்கு கிடையாது. நிர்வாக நீதியான வழக்குதான். முதல்வர் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது அதனை எதிர்க்கட்சி கேள்வி எழுப்புவது நியாயமே என்றும் தெரிவித்துள்ளார். முதல்வர் தனது காவல் துறை அமைச்சர் பதவியை வேறோருவருக்கு வழங்கிவிட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் ராசா வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு எஸ்டேட் கொலை - கொள்ளை வழக்குகளில் முதல் குற்றவாளி என வெளியான செய்திகளை கலைஞர் டிவி, சன் டிவி தவிர மற்ற ஊடகங்கள் வெளியிடாத மர்மம் என்ன? இதன் பின்னணியில் இருப்பது யார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக