திங்கள், 28 ஜனவரி, 2019

காங்கிரசுக்கு இரட்டை இலக்கத்தில் கிடைக்குமா? .. வைகோவுக்கு திருச்சி .. கனிமொழிக்கு தூத்துக்குடி?

டிஜிட்டல் திண்ணை:  வைகோவுக்காக ஸ்டாலினிடம் போராடும் கனிமொழிமின்னம்பலம் :
“வர இருக்கிற மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக என முக்கிய கட்சிகள் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டன. ஜெயலலிதா இருக்கும் வரை இதில் அதிமுகதான் முந்திக் கொள்ளும். ஆனால் இப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடுகள், யாருக்கு என்ன தொகுதி என்ற பூர்வாங்கப் பணிகள் தொடங்கிவிட்டன. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருப்பது திமுக அணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதுதான்.
ஏற்கனவே ஸ்டாலின் போட்டுவைத்திருக்கும் கணக்குப்படி திமுக மட்டுமே 28 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது அவரது முடிவு. ஆனால் காங்கிரசோ இம்முறை 12 மக்களவைத் தொகுதிகளைக் கேட்கிறது. திமுகவோ காங்கிரசுக்கு இரட்டை இலக்கம் என்றே முடிவு செய்யவில்லை. ஒற்றை இலக்கமான எட்டு தொகுதிகளைதான் அதிகபட்சமாக முடிவு செய்து வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை இடம் என்பதை விரைவில் பேசி முடிவு செய்வோம் என்று கூறியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
இவ்வாறு கட்சிகளுக்குள் எத்தனை இடங்கள் என்ற பேச்சே இன்னும் முறையாக ஆரம்பிக்கப்படாத நிலையில், சில குறிப்பிட்ட தொகுதிகளைக் குறிவைத்து திமுக கூட்டணித் தலைவர்களுக்குள் சில மூவ்கள் நடந்துவருகின்றன. ராகுல் காந்தி உத்தரவிட்டால் தேர்தலில் நின்று எம்.பி.ஆவேன் என்று சில தினங்களுக்கு முன் சொன்ன திருநாவுக்கரசர், சில மாதங்களுக்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலினிடம் திருச்சி தொகுதியில் தான் நிற்க விரும்புவதாக கூறியிருக்கிறார். ஸ்டாலினும் சரி என்று அப்போதைக்கு சொல்லியுள்ளார். திருநாவுக்கரசர் மட்டுமல்ல, காங்கிரசில் பீட்டர் அல்போன்ஸ் தனக்கு நெல்லை தொகுதி வேண்டுமென்றும், மாணிக் தாகூர் விருதுநகர் தொகுதி வேண்டுமென்றும் தமிழகத்தில் தங்கள் கூட்டணியின் தலைவரான ஸ்டாலினிடம் விண்ணப்பித்து வைத்திருக்கிறார்கள்.

திருநாவுக்கரசர் ஏற்கனவே 1999 தேர்தலில் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இருந்து வென்று மத்திய அமைச்சரானார். பின் காங்கிரஸில் சேர்ந்த பிறகு 2014 ல் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நின்று தோல்வியுற்றார். இம்முறை தனக்கு ராமநாதபுரம் சரிப்பட்டு வராது என்று நினைத்துதான் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள திருச்சி தொகுதியைக் குறிவைத்து ஸ்டாலினிடம் கூறியுள்ளார். இதற்கு ஸ்டாலினும் ஒகே சொல்லியதாகச் சொல்கிறார்கள்.
அதேநேரம் நாம் ஏற்கனவே கூறியபடி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் திருச்சியைக் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். ஏற்கனவே மதிமுக சார்பில் எல்ஜி வெற்றிபெற்ற தொகுதி என்பதாலும், தனது சொந்தத் தொகுதியான விருதுநகர் தொகுதியை மாணிக் தாகூர் வலியுறுத்துவதாலும் வைகோ திருச்சி மீது கவனம் குவித்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை திருச்சியில்தான் நடத்தி வருகிறார் வைகோ.
திமுக சார்பில் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் நிலையில் வைகோ திருச்சியை நோக்கி போகும் தகவல் கனிமொழிக்கு தெரிந்திருக்கிறது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சில சட்டமன்ற தொகுதிகளில் மதிமுக வலுவாக இருக்கும் பகுதிகளும் இருப்பதால் அது தொடர்பாக கனிமொழியும் வைகோவும் பேசிக் கொண்டபோது இந்த திருச்சி தகவலும் பரிமாறப்பட்டிருக்கிறது. நான் அண்ணனிடம் பேசுகிறேன் என்று சொன்ன கனிமொழி வைகோ திருச்சியில் நிற்க தயாராக இருப்பது பற்றி ஸ்டாலினிடம் பேசினாராம். அப்போதுதான், ஏற்கனவே திருநாவுக்கரசர் திருச்சியைக் கேட்ட தகவலையும் கனிமொழியிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஆனாலும் வைகோவுக்கு திருச்சியை பெற்றுத் தருவதில் ஸ்பெஷல் ஆர்வம் காட்டுகிறாராம் கனிமொழி.
இப்போது கனிமொழிக்காக வைகோவுக்கு திருச்சியை தருவதா, அல்லது ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி திருநாவுக்கரசருக்கு கொடுப்பதா என்று குழப்பத்தில் இருக்கிறாராம் ஸ்டாலின். இப்படிப்பட்ட குழப்பம் திருச்சியை வைத்து மட்டுமல்ல, இன்னும் சில விஐபி தொகுதிகளாலும் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் துரைமுருகன் தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு இந்த குழப்பங்களை பேசித் தீர்த்துவைக்கும் என்று நம்புகிறார்கள் திமுக நிர்வாகிகள் ” என்று முடிந்தது மெசேஜ்.
அதைப் படித்து முடித்த ஃபேஸ்புக் தன் மெசேஜை டைப் செய்தது. “திமுகவில் வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் நிறைய இருக்கின்றன என கருத்துக் கணிப்புகள் சொல்வதால் போட்டி அதிகமாகியிருக்கிறது. அதிமுகவில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவில் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இதில் கூட ஒரு விசேஷம் இருக்கிறது. குழுவில் இருக்கும் தங்கமணி, வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்கள். கேபி முனுசாமி, ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். வைத்திலிங்கம் இரு தரப்பில் எதையும் வெளிப்படையாக ஆதரிக்காதவர். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எடப்பாடிக்குத் தெரியாமலோ, ஓ.பன்னீருக்குத் தெரியாமலோ எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இருதரப்பில் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் குழுவும் இன்னும் யாரோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை” என்று தன் மெசேஜை செண்ட் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக