திங்கள், 7 ஜனவரி, 2019

தகவலறியும் உரிமைச் சட்டம் .. தகவல் ஆணையங்கள் முடக்கப்படுகின்றனவா?

Savukku : தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசாங்க நிர்வாகத்தில் ஒளிவுமறைவின்மை தொடர்பான சூழல் நாடெங்கிலும் அபாயமான நிலைமையில் இருக்கிறது ;
தனது சட்டபூர்வமான பணியைப் பூர்த்தி செய்து உச்ச நீதிமன்ற ஆணைப்படி மத்தியத் தகவல் ஆணையத்தில் நான்கு காலியிடங்களைச் சமீபத்தில் நிரப்பிய மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால் புது ஆணையர்கள் குழப்பத்துடனிருக்க அவர்களது அந்தஸ்து சந்தேகத்துக்குள்ளாகி ஆணையம் தனது சட்டரீதியான பணிகளச் செய்து முடிக்குமென்ற எதிர்பார்ப்பு இன்னும் பூர்த்தியாகாமல் உள்ளது. நான்கு ஆணையர்களையும் நான் வரவேற்கிறேன்; அவர்களது தனித்தனியான பணியால் ஆணையத்தின் அந்தஸ்து உயர்ந்து மக்களின் தகவலறியும் உரிமை மேம்படும் என எதிர்பார்க்கிறேன். அவர்களது பணி தகவல் தருவதுதானே தவிர கதவை மூடுவது அல்ல.

என்னுடன் பணிபுரிந்த சுதீர் பார்கவ் தற்போது தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற மூத்த அதிகாரிகளுக்கு தர்மசங்கடமாக இல்லாமல் மூத்த ஆணையரைத் தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கும் மரபை மீட்டதற்காகவும் அவரது பதவி உயர்வை வரவேற்கிறேன். துரதிருஷ்டவசமாக, தற்போதைய மத்திய அரசு இம்மரபை உடைத்து யஷோவர்தன் ஆசாதைத் தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கத் தவறிவிட்டது (இப்படிச் சொல்வதன் மூலம் நான் முன்னாள் தலைமை ஆணையர் ராதாகிருஷ்ண மாத்தூரை எதிர்க்கவில்லை).
ஆயினும், நான்கு ஆணையர்களையும் அரசு அதிகாரிகள் பட்டியலிலிருந்தே தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12(5)இல் குறிப்பிட்டுள்ளபடி சட்டம், சமூக சேவை, ஊடகம், பத்திரிகைத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளிலிருந்து தேர்வுக் கமிட்டியால் ஒருவரைக்கூடத் தேர்ந்தெடுக்க முடியவில்லையா? இத்துறைகளிலிருந்து ஒவ்வொருவராவது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் தலைமைத் தகவல் ஆணையராக அவர்களில் ஒருவரைச் சுழற்சி முறையில் வைத்திருந்தால் ஆணையைத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மட்டும்தான் இருப்பார்கள் என்ற விமர்சனத்திலிருந்தும் அரசு தப்பியிருக்கலாம். தகவலறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய / மாநில அளவு ஆணையர்களை நியமிப்பதற்கான பல துறைகளில் ஒன்றுதான் நிர்வாகத் துறை என்பதை அரசு தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
மத்திய அரசு நிர்வாகத்தில் ஒளிவுமறைவின்மையை உறுதிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தகவலறியும் உரிமைச் சட்டம் என்ற ஒளிவுமறைவற்ற சட்டத்தால் மத்திய தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. ஆனால் பரிதாபம் என்னவென்றால் தலைமைத் தகவல் ஆணையர் / மத்தியத் தகவல் ஆணையர்கள் பதவிகள் காலியாகும்போது பொதுநலனில் அக்கறையுள்ள குடிமக்ககள் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்து அதை நிரப்பக் கோரிக்கையை முன்வைக்கின்றனர். உச்ச நீதிமன்றம் கொட்டு வைத்த பின்னர்தான் அரசு செயல்படுகிறது. இம்முறை ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ், ஏர் கமோடர் (ஓய்வு பெற்ற) லோகேஷ் பத்ராவும் காலியாக இருக்கும் எட்டு நியமனங்கள் பற்றி ஒளிவுமறைவின்றிச் செயல்படுமாறு அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்த வேண்டுமெனப் பொதுநல மனுவில் கேட்ட பின்னர்தான் வேலை நடந்தது.
நீதிபதி ஏ.கே. சிக்ரி, நீதிபதி எஸ். அப்துல் நசீர், நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் தலைமைத் தகவல் ஆணையர், தகவல் ஆணையர்களை நியமிப்பதில் ஒளிவுமறைவின்மையைக் கடைப்பிடித்து தேர்வுக் கமிட்டி / விண்ணப்பதாரர்கள் விவரங்களை இணையதளத்தில் வெளியிட மத்திய / மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. த.த.ஆ. பதவிக்கு 65 விண்ணப்பங்களூம், த.ஆ. பதவிக்கு 280 விண்ணப்பங்களும் பெறப்பட்டதாக கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். நியமனம் முடிந்த பின் மீதமிருக்கும் த.ஆ. பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கும் அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அறிவிக்கைகளில் ஆணையரின் பதவிக் காலம் குறிப்பிடப்படாதது குறித்து வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆட்சேபணை தெரிவித்தார்.
இது ஒரு முக்கியமான சட்டரீதியான கேள்வி ஆகும். அறிவிக்கையில் பதவிக் காலம், அந்தஸ்து பற்றி குறிப்பிடப்படாததால், தகுதி படைத்தவர்கள் பலர் விண்ணப்பிக்க வேண்டாமென முடிவு செய்திருப்பர். இதனால் சரியான பலர் ஆணையத்துக்குள் வரும் வாய்ப்பு சுருக்கப்பட்டுவிட்டது. தகவலறியும் உரிமைச் சட்டத் திருத்தம் வரும் அபாயம் இப்போது அதிகம் என்பதால் மத்திய அரசுக்குப் பணிந்து நடக்கத் தயாராக இருப்பவர்கள் மட்டும்தான் விண்ணப்பித்திருப்பர். இச்சட்டத்தின் இலக்கை அடையும் வகையில் பணியாற்றுவது சாத்தியமற்றது என தகுதி படைத்த பலர் முடிவெடுத்திருக்கலாம். இச்சூழல் உருவாக்கிய எதிர்மறை விளைவுகள் போதாது என்பதுபோல், மேற்கு வங்க அரசு வழக்கறிஞரும் தகவல் கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் மிகவும் குறைந்து விட்டதாகத் தெரிவித்தார்.
பெறப்பட்ட குறைந்த அளவு விண்ணப்பங்களிலிருந்து தேர்வு செய்வது தவறு என மனுதாரர்கள் வாதிட்டனர். தகவலறியும் உரிமைச் சட்டத்தின்படி இந்த அறிவிக்கை இல்லாமல் ஆணையர் பதவிக் காலம் / அந்தஸ்து பற்றிக் குறிப்பிடாமல் இருப்பதால் மத்திய / மாநில அளவில் இதனால் இச்சட்ட அமலாக்கம் மிகவும் பாதிக்கப்படும்.
மாநிலத் தகவல் ஆணையங்களில் தேங்கியுள்ள வழக்குகள் பற்றிக் கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றமானது காலியிடங்களை நிரப்புவது பற்றிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கேரளம், குஜராத், தெலங்கானா, ஒடிசா, கர்நாடகம் ஆகிய 7 மாநிலங்களைக் கேட்டது. ஆந்திரத் தகவல் ஆணையம் பணிபுரியாமல் இருப்பதை மனுதாரர்கள் குறிப்பிட்டனர். தகவல் ஆணையம் முன் தேங்கியுள்ள வழக்குகள், அதற்கான காரணங்கள் மற்றும் ஏன் இன்னும் சில தகவல் ஆணையர்கள் தேவையில்லை என்பது பற்றி பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
4 ஆணையர்கள் மத்தியத் தகவல் ஆணையத்தில் நியமனம் செய்யப்பட்டபோதும், மக்களவைத் தேர்தலுக்கான நடத்தைமுறை அமலுக்கு வருவதற்கு முன் இன்னும் நான்கு ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான அறிவிக்கையிலாவது ஆணையர்கள் பதவிக் காலம் 5 வருடம் என்றும் அவர்களது சுதந்திரமானது தேர்தல் ஆணையருக்கு நிகரானது என்றும் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் இது சாத்தியமா? தகவலறியும் உரிமை, நிர்வாக ஒளிவுமறைவின்மை என்று சொன்னாலே நாடெங்கிலும் பலருக்கும் கதிகலங்குகிறதே.
பயத்தின் காரணமாக மக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ மனுக்கள் தாக்கல் செய்வதில்லை என்ற உச்ச நீதிமன்ற பெஞ்ச்சின் கூற்று உண்மையின் பிரதிபலிப்பு; மனு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கமும் என்றே தோன்றுகிறது.
நிலைமை உண்மையில் கவலைக்கிடம். மே.வங்கத் தகவல் ஆணையத்தில் உள்ள 2 ஆணையர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கலான மனுக்களை இன்னும் விசாரித்து வருவதாக மனுதாரர்கள் கூறினர். தலைமைத் தகவல் ஆணையர் என்பது சட்டத்தில் முக்கியமான பதவி என்றும் நிர்வாகமும் ஆணையப் பராமரிப்பும் இவரால் செய்யப்பட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் தலைமைத் தகவல் ஆணையர்கள் இல்லாமலேயே பணி நடந்துவருகிறது. மத்திய, மாநில அரசுகள் தமது சட்டரீதியான பணி – அதாவது த.த.ஆ. மற்றும் த.ஆ. நியமனங்களைக் காலத்தே செய்வது – செய்யாமல் தகவலறியும் உரிமைச்சட்டத்தை நசுக்கப்பார்ப்பதாக மனுதாரர்கள் கூறினர்.
எம் ஸ்ரீதர் ஆச்சார்யுலு
(கட்டுரையாளர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு முன்னாள் தலைமைத் தகவல் ஆணையராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.)
நன்றி: https://thewire.in/government/why-didnt-the-government-find-even-one-non-bureaucrat-commissioner

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக