திங்கள், 28 ஜனவரி, 2019

தாவரங்கள் மூலம் தயாராகும் இயற்கையான நாப்கின் மாணவர்கள் சாதனை


தினமலர் : காரைக்குடி:மரக்கூழ் மற்றும் இயற்கை மூலிகை அடங்கிய நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டு தேசிய அளவிலான அறிவியல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி 8-ம் வகுப்பு மாணவிகள்.
இந்தியாவில் மாதந்தோறும் 35 கோடி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகிறது. 12 சதவீத பெண்கள் இவற்றை பயன்படுத்துகின்றனர். எளிதில் மட்காத ‛சூப்பர் அப்சார்பென்ட் பாலிமர், சிலிக்கான் பேப்பர், பிளாஸ்டிக் ஷீட், வெண்மைக்கான பிளீச்டு செல்லுலோஸ் உட் பல்ப்' ஆகியவற்றால் இவை தயாரிக்கப்படுகிறது. ரசாயனம் கலந்த இந்த நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவது மட்டுமன்றி பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுகிறது.

இதை களையும் வகையில், காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவிகள் ஐஸ்வர்யா, ெஷரின்தாஸ், அபிநயா, தன்யா, கற்பக பிரியா ஆகியோர் அறிவியல் ஆசிரியர்கள் ரமணிதேவி, மோகன், பவித்ரா ஆலோசனையின் பேரில் மூலிகை அடங்கிய இயற்கை முறையிலான நாப்கின்களை தயாரித்துள்ளனர்.
மாணவி ஐஸ்வர்யா கூறும்போது: பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பயன்படுத்தும் நாப்கின்களை கால்வாய்களிலும், பொது இடங்களிலும் துாக்கி வீசுகின்றனர் இதனால் சுற்றுச்சூழல் கேடு அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக மாலை கண்டான், தளக்காவூர், மானகிரி ஆகிய கிராமங்களில் ஆயிரம் பெண்களிடம் கள ஆய்வு மேற்கொண்டோம்.
பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் குப்பை கிடங்குக்கு வருவதில்லை. இவற்றை மண்ணில் புதைத்து வைக்கின்றனர். இதனால் மண் வளம் கெடுகிறது.
எனவே, எளிதில் மட்கும் தன்மை கொண்ட நாப்கின் தயாரிப்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். அறிவியல் ஆசிரியை ரமணி தேவி தலைமையில் தென்னை நார் கழிவு, வேம்பு, சோற்று கற்றாழை, பூவரசு, உதியமர பட்டை பொடிகளை தயார் செய்து தலா 0.25 கிராம் அளவில் சிறிய பேக்கில் வைத்து அதின் மேல் மரக்கூழால் ஆன பல்ப் (பஞ்சு) வைத்து எளிதில் மட்க கூடிய பேப்பர் ஷீட் மூலம் கம்ப்ரஸ் செய்து இந்த நாப்கினை தயாரித்துள்ளோம்.
சென்னையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இந்த படைப்பை சமர்ப்பித்தோம். அங்கு சிறந்த ஆய்வாக எங்கள் கண்டுபிடிப்பு தேர்வு செய்யப்பட்டு தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக வரும் 27-ம் தேதி குஜராத்தில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளோம், என்றார்.

THE HINDU TAMIL : பிளாஸ்டிக் அறவே இல்லாமல் இயற்கையான முறையில் மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மூலம் நாப்கினை உருவாக்கி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.எச்டி மாணவி ப்ரீத்தி ராமதாஸ் சாதனை படைத்துள்ளார்
இந்த நாப்கின்கள் ஒரு மாதத்துக்குள்ளாக மட்கும் தன்மை கொண்டவை. இதுகுறித்துப் பேசிய ப்ரீத்தி, ''இந்த நாப்கின்கள் செல்லுலோஸை அடிப்படையாகக் கொண்டவை. இது மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் சாறுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. பெண்களுக்கு பாக்டீரியா நோய்த்தொற்றை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகவும் இது செயலாற்றுகிறது.

மிகவும் மெலிதாக இருக்கும் இந்த நாப்கின், 3 மி.மீ. தடிமன் கொண்டது. தன்னுடைய எடையைக் காட்டிலும் 1,700% அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.
தாவரங்களின் மூலம் கிடைக்கும் பாலிமர்கள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் இந்த நாப்கினில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வழக்கமாகக் கடைகளில் கிடைக்கும் நாப்கின்களிலும் டயாப்பர்களிலும் பிளாஸ்டிக் இருக்கும். இதனால் அவை மட்க அதிக காலம் பிடிக்கும். காகித எச்சத்தில் இருந்து உருவாக்கப்படும் செல்லுலோஸ் கூழ் அதில் இருக்கும். அத்துடன் அவற்றை வெள்ளையாக்க குளோரின் பயன்படுத்தப்படும். அவை நச்சுகளை வெளியிடுபவை.
மேலும் வழக்கமான நாப்கின்கள், பிளாஸ்டிக் மூலம் கிடைக்கும் பாலிபுரொப்பிலைனால் உருவான ஹைட்ரோபோபிக் தாளால் சுற்றப்பட்டிருக்கும். அதன்மூலம் உடல் அரிப்புகள் ஏற்படும்.
இயற்கை ஆர்வம்
எப்போதுமே இயற்கையின் மீது எனக்கு அலாதியான ஆர்வம் உண்டு. பி.எச்டி குறித்து யோசிக்கும்போது நாம் உருவாக்கும் செயல்திட்டம், பெண்களுக்குப் பயன்பட வேண்டும். அது இயற்கையைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் விளைவுதான் இந்த இயற்கை நாப்கின்.
இது சிப்பெட்டிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களிலும் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது'' என்கிறார் ப்ரீத்தி ராமதாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக