செவ்வாய், 15 ஜனவரி, 2019

ஏழு வருட சிறை: ஸ்டாலினை எச்சரிக்கும் கே.பி.முனுசாமி

ஏழு வருட சிறை:  ஸ்டாலினை எச்சரிக்கும் கே.பி.முனுசாமிமின்னம்பலம் : கொடநாடு கொள்ளை, மர்ம மரணங்கள் பற்றி பத்திரிகையாளர் மாத்யூஸ் வெளியிட்ட ஆவணப்படத்தை அடிப்படையாக வைத்து நேற்று தமிழக ஆளுநரை சந்தித்தார் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாக புகார்கள் கூறப்பட்டிருப்பதால் ஆளுநர் இதில் தலையிட வேண்டும் என்றும் , முதல்வரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து உடனடியாக அதிமுக தரப்பிலும் ஆளுநரை சந்திக்க அனுமதி கோரப்பட்டது. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் அதிமுக பிரநிதிகளுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார். அதிமுக சார்பாக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ஆளுநரை இன்று மாலை சந்தித்தனர். ஆளுநர் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசினார் கே.பி.முனுசாமி.
“ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்த புகார் முழுவதும் உண்மைக்குப் புறம்பானது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்த ஸ்டாலின், இந்த ஆட்சியை, முதல்வரின் புகழைக் குலைக்கும் வகையிலே இந்த மனுவைக்கொடுத்திருக்கிறார்.

இதுமுழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்துக்காக கொடுக்கப்பட்ட புகார் என்பதை நாங்கள் ஆளுநரிடம் எடுத்துச் சொன்னோம். அதை முழுவதும் படித்துப் பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சாதகமான பதிலை ஆளுநர் எங்களிடம் தெரிவித்திருக்கிறார்” என்ற கே.பி.முனுசாமி பழைய சம்பவம் ஒன்றையும் நினைவுகூர்ந்தார்.
“1996 ஆம் ஆண்டுஇப்படித்தான் எங்கள் அதிமுக பொதுச் செயலாளர் அம்மா (ஜெயலலலிதா) சிவராஜ் தனுவோடு இருக்கும் புகைப்படம் ஒன்று நாளிதழில் வெளியானது. அதை வைத்து ராஜீவ் கொலையில் ஜெயலலிதாவுக்கும் தொடர்பிருக்கிறது என்று சட்டமன்றத்திலேயே கூறினார் திமுக தலைவரான முதல்வர் கருணாநிதி. மிகப்பெரிய அபாண்டமான குற்றச்சாட்டை எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் வைத்தார். அப்போது நான் மாவட்டச் செயலாளராக இருந்தேன். சட்டமன்றத்தில் கருணாநிதி தெரிவித்த இரண்டு மணி நேரத்திலே அந்த போட்டோவில் இருப்பவர்கள் சிவராஜ் தனு இல்லை, நஞ்சே கவுடா தாட்சாயினி என்ற வழக்கறிஞர்கள் என உண்மையை நான் ஜெயலலிதாவிடம் எடுத்துச் சொன்னேன். இதை சட்டமன்றத்திலே எடுத்துச் சொன்னவுடன் அமைதியாகிவிட்டார் கருணாநிதி.
அன்று கருணாநிதி எங்கள் அம்மா மீது கொலைக் குற்றம் சாட்ட முயன்றார். இன்று அதே வழியில் அவரது மகன் யாரோ கூலிக்காக ஆதாயத்துக்காக சொன்ன கருத்துகளை எடுத்துக் கொண்டு ஆளுநரை சந்தித்து முதல்வருக்கு எதிராக புகார் கூறியிருக்கிறார். அன்று நான்கு மணி நேரத்தில் உண்மை வெளிப்பட்டது. இன்று ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டில் உண்மையே இல்லை. இதில் ஸ்டாலின் தோற்றுப்போவார், அவமானப்படுவார்.
ஒருவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை, அபாண்டமான கொலைக் குற்றச்சாட்டுகளைக் கூறினால் அது பொய்யாக இருக்கும் பட்சத்தில் புகார் கூறியவருக்கு ஏழு வருட சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்பதையும் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துகிறேன்” என்றார் கே.பி.முனுசாமி.
சயன், மனோஜ் இருவரையும் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சிறைக்கு அனுப்ப மறுத்ததைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, “நீதிபதியின் முடிவு பற்றி கருத்து சொல்ல முடியாது” என்று சொல்லிவிட்டார் கே.பி.முனுசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக