செவ்வாய், 29 ஜனவரி, 2019

தங்க தமிழ் செல்வன் ... தினகரனின் முக்கிய விக்கெட்: வேகப்பந்து வீசிய திமுக!

டிஜிட்டல் திண்ணை:  தினகரனின் முக்கிய விக்கெட்: வேகப்பந்து வீசிய  திமுக!மின்னம்பலம் : “டிடிவி தினகரன் அணியில் இருந்து முக்கியமான இன்னொருவரை இழுக்க தயாராகிவிட்டது திமுக. அந்த முக்கியமானவர் தங்க தமிழ்ச்செல்வன்.
இப்போது என்ன நடந்தது என்பதை சொல்வதற்கு முன்பு, தங்க தமிழ்ச்செல்வன் விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்து என்ன நடக்கிறது என்பதை சொல்கிறேன்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்த சமயத்தில் தங்க தமிழ்ச்செல்வன், ‘மேல் முறையீடு செய்யவே வேண்டாம். நான் தேர்தலை சந்திக்கிறேன்...’ என மீடியாவுக்கு பேட்டி கொடுத்தார். தினகரன் அழைத்தும் அவர் சமாதானம் ஆகவே இல்லை. ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலரை சந்தித்து சட்ட ஆலோசனையும் நடத்தினார் தங்க தமிழ்ச்செல்வன். ‘தங்க தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் யோசிப்பாருன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை. நம்ம அணி உடைஞ்சுடுச்சுன்னு எல்லோரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க...’ என்று வருத்தத்துடன் அந்த நேரத்தில் பேசியிருக்கிறார்
தினகரன். அதற்கு வெற்றிவேல், ‘அப்படியெல்லாம் இல்லைங்க சார். நான் தங்கத்துகிட்டப் பேசினேன். அவரு உங்களைத் தாண்டி எங்கேயும் போக மாட்டாரு. நேற்று சாதாரணமாக தொகுதிக்குப் போய் மக்களைப் பார்த்துட்டு வந்திருக்காரு. நீதிமன்றத்துல எதுவும் நடக்கலை என்ற கோபத்துலதான் அவரு அப்படி பேசியிருக்காரு. இப்போ நீங்க சொன்னால் கூட அவரை வரச் சொல்றேன்...’ என்று சொல்லியிருக்கிறார். ‘அவரு வர மாட்டாரு... விடுங்க... பார்த்துக்கலாம்’ என தினகரன் சொல்ல... ‘நான் பேசுறேன் சார்...’ என்று சொல்லி, வெற்றிவேல்தான் தமிழ்செல்வனை அந்த நேரத்தில் மீண்டும் சமாதானப்படுத்தி வைத்தார்.
செந்தில்பாலாஜி வெளியே போன நேரத்தில் மீண்டும் பிரச்னை கிளம்பியது. பெங்களூருவில் சசிகலாவை சந்திக்க எல்லோரையும் அழைத்துப் போனார் தினகரன். அப்போது தங்க.தமிழ்ச்செல்வன், 'நான் எதிர்காலத்தை பற்றி யோசிக்கவே இல்ல. இங்கே நிகழ்காலமே சிக்கலா இருக்குங்க. நமக்கு இருக்கும் ஸ்ட்ரெங்த் நாளுக்கு நாள் குறைஞ்சிட்டு இருக்கு. இன்னும் 5 வருஷம் கூட நான் சமாளிப்பேன். ஆனால் என்னை நம்பி இருக்கிறவங்க என்ன ஆவாங்க? எந்த வருமானமும் இல்லாமல் நான் எப்படி செலவு மட்டுமே பண்ணிட்டு இருக்க முடியும்? வருமானத்துக்கு வழியை பார்த்துதானே ஆகணும்..' என்று தங்க தமிழ்ச்செல்வன் சொல்ல... 'கொஞ்சம் பொறுத்துக்கோங்க... எல்லாமே மாறும்..' என்று சொல்லியிருக்கிறார் தினகரன்.
இப்படியாக பிரச்னை போன சமயத்தில் நாம் டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை அப்படியே இங்கே தருகிறேன். இது டிசம்பர் 18-ம் தேதி நாம் எழுதியது.
“தங்க.தமிழ்ச்செல்வன் விஷயத்தில் இன்னும் தினகரனுக்கு நம்பிக்கை இல்லையாம். ' நான் என்ன சொன்னாலும் அதுக்கு ஒரு பதிலை தங்கம் ரெடியா வெச்சிருக்காரு. என்ன நடக்கும்னு தெரியலை. ஆனால், செந்தில்பாலாஜி போனது, தங்கம் பிரச்னை பண்றதுன்னு எல்லாத்துக்கும் பின்னாடி ஏதோ இருக்கு’ என்று தினகரன் சொல்லியிருக்கிறார்.
தங்க தமிழ்ச்செல்வன் அதிருப்தியில் இருக்கும் தகவல் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது.
அதிமுக தரப்பில் அவருக்கு தூது விட்டதை போலவே திமுகவில் இருந்தும் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு தூதுபடலம் தொடங்கிவிட்டது. செந்தில்பாலாஜி மூலமாகவே அந்த ஆபரேஷனை ஆரம்பித்திருக்கிறார்கள்.

வாட்ஸ் அப் காலில் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனுடன் பேசி வருகிறாராம் செந்தில்பாலாஜி. தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதே உங்களுக்கும் கிடைக்கும் வாங்க என்று அழைத்திருக்கிறார். நீங்க விரும்பினா தலைவரை உங்களுடன் பேச வைக்கிறேன் என்றும் சொன்னாராம். 'கொஞ்சம் பொறுங்க...' என்று மட்டும் சொல்லி இருக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன். எந்தப் பக்கம் போகலாம் என தீவிர யோசனைக்கு வந்துவிட்டார் தங்க.தமிழ்ச்செல்வன். அது திமுகவா..அதிமுகவா என்பதில்தான் குழப்பத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்" - இதுதான் நாம் அன்று சொன்னது.
இப்போது நடப்பதைச் சொல்கிறேன். செந்தில்பாலாஜி போனதில் இருந்தே தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனை இழுத்தே ஆக வேண்டும் என திமுகவில் தொடர் முயற்சிகள் நடந்து வருகிறது. அதற்கு காரணம், கரூர் எப்படி திமுகவுக்கு பலவீனமாக இருக்கிறதோ அதேபோல தேனியும் பலவீனமாகவே இருக்கிறது. தங்க தமிழ்ச்செல்வன் வந்துவிட்டால், தேனி மட்டுமல்லாமல் மதுரை வரை ஸ்டிராங் செய்துவிடலாம் என கணக்குப் போடுகிறது திமுக. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக திமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தங்க தமிழ்ச்செல்வனை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
‘எந்த நம்பிக்கையில் இன்னும் நீங்க தினகரனை நம்பிட்டு இருக்கீங்க? இடைத்தேர்தலே வந்தாலும் நீங்க அதே தொகுதியில் நின்னு ஜெயிக்க முடியும்னு உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? அவரு பணமும் செலவு பண்ண மாட்டாரு. நீங்களே எப்படி செலவுகளை சமாளிப்பீங்க? செந்தில்பாலாஜிகிட்ட நீங்க பேசுங்க. அவருக்கான மரியாதை என்ன செஞ்சு கொடுத்திருக்கோம்னு கேளுங்க. நீங்க இங்கே வந்தால் உங்களுக்கான மரியாதை நிச்சயமாக கிடைக்கும். அதுக்கு நாங்க உறுதி கொடுக்கிறோம். நீங்கதான் மாவட்டச் செயலாளர். அடுத்து ஆட்சி வந்ததும் நீங்க அமைச்சர். அதுல எந்த சந்தேகமும் வேண்டாம். தைரியமாக ஒரு முடிவுக்கு வாங்க...’ என்று சொல்லியிருக்கிறார். ‘யோசிச்சு சொல்றேன்’ என்று மட்டும் சொல்லிவிட்டாராம் தங்கம்.
இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களாக கரூரில் இருக்கும் செந்தில்பாலாஜியும் இன்று தேனி பக்கம் போயிருக்கிறார். அவர் மூலமாகவும் தூது படலம் தொடர்கிறது. எந்த நேரத்திலும் தங்க. தமிழ்ச்செல்வனின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காற்று திமுக பக்கம் வீசலாம்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக