செவ்வாய், 15 ஜனவரி, 2019

பட்டிமன்றங்கள் அறிவு மன்றங்களா? ஷாலின் மரியா லாரன்ஸ் பார்வையில்!

Shalin Maria Lawrence : ஒரு தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு பட்டி
மன்றத்தில் கலந்து கொண்டேன்.நல்ல தலைப்பு. "தமிழன் பண்பாட்டை இழந்து தவிக்கிறானா இல்லை காத்து நிற்கின்றானா".
காத்து நிற்கின்றான் என்கிற தலைப்பில் நான்.எனக்கு எதிரில் "இழந்து தவிக்கிறான்" என்கிற தலைப்பில் பேசிய பெண் பட்டிமன்ற தமிழில் பேசுகிறார் "இப்பொழுதெல்லாம் பெண்கள் அரிசி மாவில் கோலம் போடுவதில்லை,பண்பாடு கெட்டுவிட்டது".கரகோஷங்கள் எழுந்தன.
என் முறை வந்தது நான் சொன்னேன் "இப்பொழுதெல்லாம் பாதி ரேஷன் கடைகளில் அரிசி கிடைப்பதில்லை,மீதி ரேஷன் கடைகளை மூடி கொண்டிருக்கிறார்கள் .தமிழன் சோத்துக்கு செத்து கொண்டிருக்கிறான்.. இந்த லட்சணத்தில் அரிசிமாவு கோலம் என்பது தான் நமக்கு குறை" .
"முதலில் பட்டிமன்றத்தில் பேச வருபவர்கள் கொஞ்சம் நாட்டுநடப்பை தெரிந்துகொண்டு பேச வேண்டும்...அவையில் கை தட்டுக்காக எதையும் பேசி விட கூடாது".
இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் நாளை பொங்கல்.நிச்சயம் காலை டானென்று பத்து மணிக்கு முக்கிய தொலைக்காட்சிகளில் பொங்கல் பட்டிமன்றம் இருக்கும்.

அதில் எப்பொழுதும் போல கரகாட்டகாரன் படத்தில் வரும் கோஷ்டி போல் இரு கோஷ்டிகள் எப்பொழும் இருக்கும்.ஒரே முகங்கள்...ஆனால் முகத்தில் வயதின் படிமங்களோடு.
ஒரு பக்கம் சாலமன் பாப்பையா இன்னொரு பக்கம் கு.ஞானசம்பந்தம்.
இவையிரண்டும் நவீன வடிவில் இருக்கும் பழமைவாத அணிகள்.
அந்த பக்கம் லியோனி அது பச்சையாக திமுக பட்டிமன்றம்...அதை விட்டுவிடுவோம்.
இன்னொரு பக்கம் நெல்லை கண்ணனோ இல்லை சுகி சிவமோ உட்கார்ந்து கொண்டு சற்றே கதா காலட்சேப பாணியில் பட்டி மன்றம் என்கிற பெயரில் ஏதோ வெள்ளிக்கிழமை பூஜை சாமான் வெலக்குவதை போல் வெலக்கி கொண்டிருப்பார்கள்.
முதலில் குறிப்பிட்ட நவீன அணிக்கு வருவோம்.
அதிக TRP இவர்களுக்குதான்.
தேய்ந்து போன பழைய உள் பணியன்போல் ஒரே மாதிரி ஒரு 5 தலைப்புகள்....அதையே திரும்ப திரும்ப செய்வது.
அந்த தலைப்புகளுக்கு பட்டி மன்றம் தேவையில்லை என்பதே என் வாதம்.
பண்டிகைகள் மகிழ்ச்சியை கொடுக்கின்றனவா இல்லை துன்பதையா?
"பணம் இருந்தால் மகிழ்ச்சி ,பணம் இல்லை என்றால் துன்பம்"
பெண்கள் பெரிதும் விரும்புவது பிறந்த வீடா புகுந்த வீடா
"சார் பெண்கள் எப்பொழுதும் விரும்புவது "சொந்த" வீட்டை சார்"
பண்டிகைகள் சுமையா சுகமா
"சார் பாஜக ஆட்சி வந்ததில் இருந்து பண்டிகைகள் சுமை மட்டுமே சார்"
கூட்டு குடும்பம் மகிழ்ச்சியை கொடுக்கிறதா இல்லை தனி குடித்தனமா.
"அது மாமியார் மருமகள் பொருத்தத்தை பொறுத்தது"
இப்படி எல்லாமே சப்ஜெக்ட்டிவ் ஆன கேள்விகள் ...எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.வீட்டுக்கு வீடு மாறுபடும்.
உலகத்திற்கு முக்கியமான டாபிக் எல்லாம் பேச மாட்டார்கள்.
குறிப்பாக இட ஒதுக்கீடு ,அதிமுக vs திமுக ,சாதி, பெண்ணடிமைத்தனம் என்று சமுகம் சார்ந்து பல சுவாரஸ்ய தலைப்புகள் இருந்தும்.
திரும்ப திரும்ப பழைய மாவையே அரைப்பது .
அதிலும் குறிப்பாக அதில் பேசுவோர் பெரும்பாலும் ஆசிரியர்களாக இருக்கவேண்டும் "இப்படிதான் ஒரு பய வந்து என் கிட்ட கேட்டான்"
போன்ற ஒய் ஜி மகேந்திரன் ரக காமெடி செய்ய அப்பொழுதுதான் சாத்திய படும்.
சாவு வீட்டில் கூட பெண்களை ஆராயும் அங்கிள்களின் முகத்தை ஒத்த நடுவயது வயோதிக ஆண்களாக இருக்க வேண்டும் .
அப்பொழுதான் "எங்கவீட்டம்மா" என்று துவங்கும் ஒய் ஜி பார்த்தசாரதி காலத்து sexist ஜோக்குகள் அடிக்க முடியும்.அதற்கும் நம்ம வீட்டு அம்மாக்கள் பல்லை காட்டி கொண்டு சிரித்து கொண்டிருப்பார்கள்.
என் தந்தை எல்லாம் வருடத்தில் இரு முறை நிச்யமாக ஆனந்த கண்ணீர் வடிப்பார் ...ஒன்று பொங்கல் பட்டிமன்றதிற்கு இன்னொன்று தீபாவளி பட்டிமன்றத்திற்கு.
அதுவும் பட்டிமன்ற ராஜா அவர்கள் கழுத்தை இழுத்துக்கொண்டு "இப்பிடித்தான் ஒருநாள் பாருங்க" என்று ஆரம்பிக்கும்போது சுனாமியே வந்தாலும் நம் அப்பாக்களை தொந்தரவு செய்ய முடியாது.
ஐம்பது பைசா கமர்க்கட்டு வாங்க முடியாத அளவுக்கு தலைப்புகள்.
திரும்ப திரும்ப பெண்களை இழிவுபடுத்தும் ஜோக்குகள்.
நாற்காலியை இளைஞர்களுக்கு விட்டு கொடுக்க மனமில்லாத பழைய ஜோக்கு தங்கதுரைகள்.
இடைநிலை சாதிய ஆதிக்கம் நிறைந்த பட்டிமன்றங்கள்.
இதுதான் தமிழனின் பண்பாடாக கடந்த 40 வருடங்களாக மாறி இருக்கிறது.
இது போன்ற போலித்தனமான பண்பாடுகளை தமிழன் சிதைத்துதான் ஆக வேண்டும்.
வாழ்க வளமுடன்.
பொங்கல் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக