வெள்ளி, 4 ஜனவரி, 2019

சொராபுதீன் வழக்கு: சட்டத்தையும் நெறிமுறைகளையும் மீறிய தீர்ப்பு

savukkuonline.com/:>குற்றம் சாட்டப்பட்டவர்கள் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களாக இருக்கும் வழக்குகளில் நீதி வழங்குவதற்கான நம்முடைய குற்றவியல் நீதி முறையின் தன்மை மீது இந்தத் தீர்ப்பு இருளைப் பாய்ச்சுகிறது.
குஜராத் காவல் துறையால் சொராபுதீன் ஷேக் சுட்டுக்கொல்லப்பட்ட 14 ஆண்டுகள் கழித்து, மும்பை விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. அவரது சகோதரர் ருபாபுதின் ஷேக், தனது இதயம் நொறுங்கிவிட்டது என்று கூறினார். “நீதிமன்றம் எந்த சாட்சியத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சொராபுதீன் தன்னைத்தானே கொலை செய்துகொண்டார் போலும்’ என்கிறார் அவர்.

சொராபுதீன் கடத்தப்பட்டதற்கும் அவர் கொலை செய்யப்பட்டதற்கும் சாட்சியாக இருந்திருக்கக்கூடிய அவரது கூட்டளி துளசிராம் பிரஜாபதி, ஓராண்டு கழித்துக் காவல் துறை என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார். அவரது தாய் நர்மதா பாய், மகனின் கொலை ஏற்கனவே தன் வாழ்கையை அழித்துவிட்டதாகவும், இந்தத் தீர்ப்பு எதையும் மாற்றிவிடாது என்றும் கூறுகிறார். “இப்போது தீர்ப்பு வந்துவிட்டதால், இனியும் எனக்குப் பிரச்சினை வராது என நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
அண்மைக் காலத்தில் தீவிரமாக கவனிக்கப்பட்ட வழக்குகளில் ஒன்றும், தார்மிக நோக்கில் முக்கியமானதும், பரபரப்பானதுமான இந்த கிரிமினல் வழக்கின் கதி, முன் கூறப்பட்ட சோகக் கதையாக இருக்கிறது. சிபிஐயால் முக்கியச் சதிகாரராகக் குற்றம்சாட்டப்பட்ட அமித் ஷா இந்தியாவின் இரண்டாவது சக்தி வாய்ந்த மனிதராக ஆனபோதே, நீதிக்கான சாத்தியம் குறைந்துவிட்டது. அதன் பிறகு, ஒன்றன் மீதான ஒன்றாக நிகழ்வுகள் நிகழ்ந்து, இந்த முடிவை நோக்கி நகர்ந்துள்ளன. கொலை நடைபெற்றபோது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, 2010இல் சிறையில அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் கிடைத்தபோது மாநிலத்தில் நுழைய அனுமதிக்கப்பவில்லை. ஆனால் 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நரேந்திர மோடி, கட்சித் தலைவராக அமித் ஷாவைத் தேர்வு செய்ததும், அவர் பிரதமருக்கு நம்பகமான மனிதராக உருவானார்.
ஷேக் வழக்கின் முடிவு, சக்தி வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் சீருடைப் பணியாளர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருக்கும் குற்றங்களில், இந்தியக் குற்றவியல் அமைப்பின் -காவல் துறை, அரசு தரப்பு, நீதித் துறை – திறன் மீது இருண்ட ஒளியைப் பாய்ச்சுகிறது. இருப்பினும், இந்த வழக்கு வில்லன்களை மட்டும் அல்ல, பணியில் நாயகர்களாக இருப்பவர்களையும் கொண்டுள்ளது.
விசாரணை நீதிமன்றத் தீர்ப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, இந்த வழக்கின் முக்கிய அம்சங்களைப் பார்க்க வேண்டும். அவை வருமாறு:
2005 டிசம்பரில் கொலை செய்யப்பட்டபோது, சொராபுதீன், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் என குஜராத் காவல் துறை கூறியது. இந்தத் தீவிரவாதக் குழு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்.ஐயுடன் இணைந்து அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்பட்டது. காவலர்கள் பிடிக்க முயன்றபோது சொராபுதீன் அவர்களை நோக்கிச் சுட்டதால் வேறு வழியின்றி அவரைச் சுட்டுக் கொல்ல வேண்டியிருந்ததாகக் கூறப்பட்டது.
இந்த ஆண்டுகளின்போது, குஜராத் இத்தகைய என்கவுண்டர்களால் மிரண்டு போயிருந்தது. முதல்வரைக் கொலை செய்யச் சதி செய்தனர் அல்லது வேறு தீவிரவாதச் செயலுக்குத் திட்டமிட்டனர் என்று கூறிக் காவலர்கள் 20க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்தனர். இவற்றில் வெகு சிலவற்றில்தான் காவல் துறை தரப்பு வாதம் சரியான முறையில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இரண்டு தலையீடுகள் இல்லை எனில், சொராபுதீன் கொலையும் இப்படி மறக்கப்பட்ட புள்ளிவிவரமாகி இருக்கும். முதலில், ருபாபுதீன், தனது சகோதரர் கொலை தொடர்பாகக் காவல் துறை முன்வைத்த வாதத்தை நம்பவில்லை என்றும், கணவர் கொலைக்குப் பின் மாயமாகிவிட்ட சொராபுதீன் மனைவி கவுசர் பீயின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாகவும் இந்தியத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, குஜாராத் காவல் துறை, சொராபுதீன் எப்படிக் கொலை செய்யப்பட்டார் என்றும், அவரது மனைவிக்கு என்ன ஆனது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இரண்டாவதாக, திவ்யா பாஸ்கர் நாளிதழ் நிருபர் பிரசாந்த் தயாள், குஜராத் காவல் துறையினர் சொராபுதீனைத் திட்டமிட்டுக் கொலை செய்தனர், அவரது மனைவியை வன்புணர்ச்சி செய்து எரித்துக்கொன்றனர் என அம்பலப்படுத்தினார். ஜூனியர் காவல் துறை அதிகாரி ஒருவருக்கு மது வாங்கிக் கொடுத்து இந்த உண்மையை தயாள் வெளிக்கொணர்ந்தார்.
காவல் துறையின் கட்டுக்கதை
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட விசாரணை ஐ.ஜி. கீதா ஜொகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. சொராபுதீன் கொலை தொடர்பான காவல் துறை தரப்பு வாதம் பொய் என்பதற்கான ஆதாரங்களை அவர் திரட்டினார். எந்தத் தூண்டுதலும் இல்லாமல் அவர் கொலை செய்யப்பட்டார். அவர் ஓட்டிச் சென்றதாகக் கூறப்பட்ட பைக் உண்மையில் காவலர் ஒருவருக்குச் சொந்தமானது. குஜராத் அரசு வழக்கறிஞர், வேறு வழியில்லாமல் உச்ச நீதிமன்றத்தில் சொராபுதீன் கொலை போலி என்கவுண்டர் என்று ஒப்புக்கொண்டார்.
விசாரணை பின்னர், துணை ஐஜி ரஜ்னிஷ் ராயிடம் ஒப்படைக்கப்பட்டது. போலி என்கவுண்டர் பங்கு தொடர்பாக, மூத்த காவல் துறை அதிகாரிகள் டிஜி. வன்ஜரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் எம்.என். ஆகியோரை 2007ஆம் ஆண்டு ஏப்ரலில் கைது செய்து தேசத்தைத் திகைப்பில் ஆழ்த்தினார். இந்தக் கொலையை மூடி மறைக்க முயன்றதாக அமித் ஷா மீது குற்றம் சாட்டினார். காவல் துறை அதிகாரி ஒருவர் தனது உள்துறை அமைச்சர் மீது குற்றம் சுமத்தவும், சக அதிகாரிகளைக் கைது செய்யவும் அசாத்தியத் துணிச்சல் வேண்டும். ரஜ்னிஷ் ராய் இந்த நேர்மைக்காக விலை கொடுக்க நேர்ந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவரது மனைவி இருந்த இடத்தில் அவர் பணிக்கு அமர்த்தப்படாமல் குஜராத் அரசு பார்த்துக்கொண்டது. விருப்ப ஓய்வுக்காக அண்மையில் அனுப்பப்பட்ட அவரது மனுவை ஏற்காமல், அவரை சஸ்பெண்ட் செய்தது.
2005, நவம்பர் 22இல், காவல் துறைக் குழு ஒன்று, ஐதராபாத்தில் இருந்து சங்லி சென்று கொண்டிருந்தபோது பேருந்திலிருந்து, சொராபுதீன், கவுசர் பீ, பிரஜாபதி ஆகியோரை அழைத்துச்சென்றது. இந்த குழுவில் குஜராத் மற்றும் ஆந்திர மாநிலக் காவலர்கள் இருந்தனர். ராஜ்குமார் பாண்டியன் தலைமையில் குழு அமைந்திருந்தது. சொராபுதீன் மற்றும் பிரஜாபதியை மட்டுமே அவர்கள் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்தனர் ஆனால், கவுசர் பீ மறுத்ததால் அவரையும் அழைத்துச்சென்றனர். இதன் காரணமாக அவர் பலியானார். அவர்கள் அகமதாபாத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுத் தனித்தனியாக வைக்கப்பட்டனர். நவம்பர் 26இல் சொராபுதீன் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி, 29ஆம் தேதி வாக்கில். போதை மருத்து கொடுத்து வன்புணர்ச்சி செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார்.
கணவரின் கொலைக்கான சாட்சி என்பதால், கவுசர் பீ கொல்லப்பட்டதாக பிரஜாபதி யூகித்தார். மிஞ்சி இருக்கும் ஒரே சாட்சி அவர் என்பதால், காவல் துறை தன்னையும் கொலை செய்யும் என அவர் அஞ்சினார். எனவே, தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் அவர் கெஞ்சினார். ஒரு முறை அவரும் மற்றொரு தாதா அசாம் கானும் அகமதாபாத்தில் மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்கள் தங்களை மீண்டும் ராஜஸ்தானின் உதய்பூருக்கே கொண்டு செல்ல உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டனர் (அங்குதான் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்). காவல் துறையினர் தங்களையும் என்கவுண்டரில் கொன்றுவிட்டு, தப்பிச் செல்ல முயலும்போது சுட்டதாகக் கூறிவிடும் என அவர்கள் அஞ்சினர்.
ஆனால், இதையும் மீறி பிரஜாபதி, சுட்டுக் கொல்லப்பட்டார். 2006 டிசம்பர் 6ஆம் தேதி, அகமாதாபாத்திற்கு ரெயிலில் அழைத்துச்செல்லப்பட்டபோது தப்பி ஓட முயன்றதாகக் காவல் துறை தெரிவித்தது.
சொராபுதீன் மற்றும் அவர் மனைவி கொலைக்கான ஒரே சாட்சி என்பதால், பிரஜாபதி கொல்லப்பட்டதாக ராய் தெரிவித்தார்.
மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் நடத்திய ஷா
2010இல் உச்ச நீதிமன்றம் இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றியது. குஜராத் காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆதரவுடன் அமித் ஷா, மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை நடத்திவருவதாக சிபிஐ பரபரப்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்தக் கும்பலுக்காகத்தான் ராஜஸ்தானில் சொராபுதீன் வேலை செய்துவந்தார். அவர் மிகவும் சக்தி மிக்கவராக உருவானதால், எஜமானர்கள் அவரைத் தீர்த்துக்கட்டத் தீர்மானித்தனர். இந்தக் கொலை அமித் ஷா, ராஜஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கத்தாரியா ஆகியோரால் திட்டமிடப்பட்டு, குஜராத் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் குற்றப்பத்திரிகை தெரிவித்தது. சொராபுதீன் மற்றும் பிரஜாபதி கொலையில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளுக்கும் அமித் ஷாவுக்கும் இடையே நிகழ்ந்த தொலைபேசிப் பரிமாற்றங்கள் வழக்கத்திற்கு விரோதமான முறையில் அதிகரித்ததாக சிபிஐ சேகரித்த அழைப்பு விவரங்கள் தெரிவித்தன. பிராஜபதி என்கவுண்டரின்போது ஷா, குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு 331 அழைப்புகளை மேற்கொண்டார். இந்த அழைப்பு விவரங்கள் பின்னர் பதிவிலிருந்து அழிக்கப்பட்டன.
வன்ஜரா மற்றும் காவல் துறை எஸ்.பி விபுல் அகர்வால் உத்தரவின் பேரில், பிரஜாபதி அகமதாபாதிலிருந்து கொண்டுவரப்பட்டுக் கொல்லப்பட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. விசாரணை அதிகாரி வி.எல். சோலங்கி, சொராபுதீன் மற்றும் கவுசர் பீ கொலை தொடர்பாக பிரஜாபதியிடம் விசாரிக்க அனுமதி கோரிய உடன் இந்தக் கொலை நடைபெற்றது தற்செயலானது அல்ல.
2006 டிசம்பரில் அப்போதைய காவல் துறை இயக்குனர் ஜெனரல் பி.சி.பாண்டே மற்றும் ஜோகாரியுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு ஷா தன்னை அழைத்ததாக குஜராத் காவல் துறை அதிகாரி ஜி.சி. ரெய்கர் சிபிஐயிடம் தெரிவித்தார். இந்த விஷயத்தை சீக்கிரம் முடிக்குமாறும், பிரஜாபதியை சோலங்கி விசாரிப்பதைத் தடுக்குமாறும் ஷா தங்களிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
மாநில உள்துறை அமைச்சர் அவ்வாறு கூறியதால், ஷாவுக்கு எதிரான சாட்சியத்தை அகற்றும் வகையில் வழக்கு ஆவணங்களை மாற்றுமாறு ஜோகாரி தன்னிடம் தெரிவித்ததாக சோலங்கி சிபிஐயிடம் கூறினார். அந்தக் காலத்தில் ஜோகாரியின் உதவியாளராக இருந்த ராஜேந்திர வல்ஜிபாய் ஆச்சார்யா, இந்த உரையாடலை உறுதி செய்துள்ளார்.
சிபிஐ தாக்கல்செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அமித் ஷாவும் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், 2014, மே மாதம் பாஜக ஆட்சிக்கு வந்ததும் நிலைமை தலைகீழாக மாறியது. .
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள், பாரபட்சம் இல்லாமல் சட்டம் கையாளப்படுவதை உறுதி செய்ய முற்படுபவர்கள் என்பதுபோல ஆரம்பத்தில் தோன்றியது. ஜூன் 6ஆம் தேதி, விசாரணை நீதிபதி ஜே.டி.உத்பட், நேரில் ஆஜாராகவில்லை என்பதற்காக ஷாவுக்குக் கண்டனம் தெரிவித்து, அவர் ஆஜாரவதற்கான தேதியையும் குறிப்பிட்டார். ஷா நீதிமன்றத்தில் ஆஜாராக இருந்த தினத்திற்கு முன் தினம், உத்பட் திடீரென மாற்றப்பட்டு, ஹரிகிருஷ்ண லோயா அவரது இடத்தில் நியமிக்கப்பட்டார். ஷா நேரில் ஆஜராக வேண்டும் எனும் முந்தைய உத்தரவை லோயா வலியுறுத்தினார். ஆனால், அவர் திடீரென்று இறந்துவிட்டார். அவருடைய மரணம் சந்தேகத்திற்கு உரியது என அவரது குடும்பத்தினர் கருதுகிறார்கள்.
2014, டிசம்பர் 30 அன்று, லோயா மரணமடைந்து ஒரு மாதத்திற்குள், அவருக்கு அடுத்தபடியாக நியமிக்கப்பட்ட எம்.பி. கோசவி, குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டு விசாரித்து ஷாவை விடுவித்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சாட்சிகள் விசாரிக்கப்படாமல் கிரிமினல் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது மிகவும் விநோதமானது. ஷாவுக்கு எதிராக குறிப்பிடத்தக்க ஆதார எதுவும் என்றும், அரசியல் காரணங்களுக்காகத் தன் மீது குற்றம்சாட்டப்பட்டதாக பாஜக தலைவர் கூறியதில் பொருள் இருப்பதாகவும் கோசவி கூறினார்.
ஷாவுடன் குற்றம் சாட்டப்பட்ட, பாஜக அரசியல்வாதி கத்தாரியா, வர்த்தகப் புள்ளி விமல் பட்னி, காவல் துறை அதிகாரிகள் பாண்டே, ஜோகாரி, பாண்டியன், அபய் சுடாசாமா, என்.கே. அமீன், யஷ்பால் சுடாசாமா மற்றும் அஜெய் பட்டேல் ஆகியோரையும் கோசவி விடுவித்தார். விசாரணைக்கு அரசு அனுமதிக்கவில்லை எனக் கூறிய பாண்டியனை அவர் விடுவித்தார். ஆனால் காவல் துறை அதிகாரி மீது கொலைக் சுற்றம் சாட்டப்படும்போது இது அவசியம் இல்லை என்பதை அவர் கருத்தில் கொள்ளவில்லை. பணியில் இருந்த அனைத்து காவல் துறை அதிகாரிகளும் அதன் பிறகு பணியில் அமர்த்தப்பட்டு அவர்களுக்குப் பதவி உயர்வும் அளிக்கப்பட்டது.
குடும்பங்களுக்கு நீதி மறுப்பு
எந்த கிரிமினல் வழக்கிலும் தன்னால் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விடுவிக்கப்படுவதை எதிர்த்து சிபிஐ முறையீடு செய்யாமல் இருப்பது மிகவும் அரிதானது. ஏனெனில் விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை தவறானது எனத் தானே ஒப்புக்கொள்வதுபோல இது அமைந்துவிடும். எனினும் இந்த வழக்கில், ஷா மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்யவில்லை.
ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ருபாபுதீன் ஷேக் மனு தாக்கல் செய்தார். ஆனால், ஒரு சில விசாரணைகளுக்குப் பிறகு அவர் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார்.
இந்தக் கட்டுரையை எழுதியவர்களில் ஒருவரான ஹர்ஷ் மந்தர், இந்த வழக்கு முறையீடு செய்யப்படாமல் விடப்பட முடியாத முக்கிய வழக்கு எனக் கருதி, விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தனிப்பட்ட நபர்களின் கொலை தொடர்பான தனிப்பட்ட விஷயம் அல்ல இது என அவர் நினைத்தார். இந்தியாவின் முதன்மை புலனாய்வு அமைப்பு, குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர், காவல் துறை அதிகாரிகள் உதவியுடன், மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை நடத்திவந்ததாகவும், ஒத்துவராத மூன்று பேர் தீர்த்துக்கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. அந்த மனிதர் இப்போது அதைவிடவும் பெரிய பதவியில் இருக்கிறார். இந்தியாவின் இரண்டாவது சக்தி வாய்ந்த மனிதராக இருக்கிறார். குற்றச்சாட்டு சரியானது என்பதோ, நீதிமன்றத்தில் அவை நிரூபிக்கப்படும் என்பதோ ஹர்ஷ் மந்தரின் வாதம் அல்ல. மிக உயர்வான பதவி வகிக்கும் நபர்களால் இத்தகைய குற்றம் செய்யப்படவில்லை என்னும் உறுதிமொழியைப் பெறக்கூடிய உரிமை பொதுமக்களுக்கு இருப்பதால், புலனாய்வு அதிகாரிகள் சேகரித்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம்.
ஆனால், இந்த முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதே போல பாம்பே வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்த மனுவைத் தாக்கல் செய்தவர்களுக்கு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான முகாந்திரம் இல்லை என்னும் காரணம் சொல்லப்பட்டது. அதாவது, மனுதாரர்கள் கொல்லப்பட்டவர்களுடன் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாதவர்கள் எனக் காரணம் சொல்லப்பட்டது. இது, கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் குடும்பத்தினரின் துயரம் தொடர்புடைய வழக்கு மட்டும் அல்ல எனக் கருதுகிறோம். இது பொதுநலன் மிக்கது என்பதால், ஹர்ஷ் மந்தருக்குக் குடிமகனாகத் தனது உரிமையை நிலைநாட்ட எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
ஷா, கத்தாரியா, இதர காவல் துறை அதிகாரிகள் ஆகிய அனைவரும் விடுவிக்கப்பட்டது, குற்றம்சாட்டப்பட்ட மற்ற 22 பேர் மீதான வழக்கை பலவீனமாக்கியுள்ளது. அவர்களில் ஒருவர் தவிர மற்றவர்கள் ஜூனியர் காவலர்கள். கடந்த ஆண்டு இறுதியில் விசாரணை துவங்கியது. (இந்தக் கட்டுரை எழுதியவர்களில் ஒருவரான சரீம் நவீத், இந்த வழக்கின் வழக்கறிஞர். ஷா விடுவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஷர்ஷ் மந்தர் தாக்கல் செய்த முறையீட்டில் அவர் ஆஜராகி வாதாடினார். முக்கிய சாட்சியான அசாம் கான் அச்சுறுத்தப்பட்டபோது அவர் சார்பில் வாதாடினார்.)
துவக்கத்தில், நீதிமன்றம் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், விசாரணை குறித்து ஊடகங்கள் செய்தி சேகரிக்கத் தடை விதித்தது. இந்த உத்தரவு மும்பை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. எனினும், தடை அமலில் இருந்த போது, 210 சாட்சியங்களில் 92 சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாயின. ஒரு சில வலுவான சாட்சியங்களே உறுதியாக மிச்சம் இருந்தன.
சொராபுதீன், கவுசர் பீ மற்றும் பிரஜாபதி கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யும் உத்தரவில், நீதிபதி.எஸ்.ஜே.சர்மா இவர்களின் குடும்பங்களுக்கு நீதி மறுக்கப்படுவது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார். தன் முன் வழங்கப்பட்ட சாட்சியங்கள் அடிப்படையில் அனைவரையும் விடுவிப்பதாக அவர் கூறினார். “சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி குடும்பத்தினருக்க்காக வருந்துகிறேன், குறிப்பாக பிரஜாபதி தாயார் நர்மதா பாயிஒக்காக வருந்துகிறேன். ஆனால் என் முன் வைக்கப்பட்ட சாட்சியங்கள் எதுவும் குற்றம் சாட்டப்பட்ட யாருடைய தொடர்பையும் நிருபிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்று நீதிபதி கூறினார்.
“சிபிஐ தன் முன்னால், அரசியல் தலைவர்கள் மீது எப்படி குற்றம்சாட்டுவது என்பதற்கான முன்கூட்டிய தீர்மானித்த கோட்பாடு மற்றும் திரைக்கதையை வைத்துக்கொண்டிருந்தது. அதன் பிறகு சட்டப்படி விசாரணை நடத்துவதைவிட, அந்த இலக்கை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தது” என்று சர்மா முடிவாகக் கூறினார். “குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான திரைக்கதையைச் சார்ந்தே மொத்த விசாரணையும் அமைந்திருந்தது. அரசியல் தலைவர்கள் மீது குற்றம் சாட்டும் உற்சாகத்தில், சிபிஐ சாட்சிகளை உருவாக்கி, குற்றப்பத்திரிக்கையில் சாட்சிகள் அறிக்கையில் வைத்தது” என்றும் அவர் கூறினார்.
சிபிஐ தவறாக அவர்கள் அறிக்கையைப் பதிவு செய்ததால், 92 சாட்சிகள் பிறழ்ன்றதாக நீதிபதி தெரிவித்தார். பிரஜாபதி என்கவுண்டர் உண்மையானதுதான் என நீதிபதி தெரிவித்தார். சொராபுதீன் கொலை உண்மையான என்கவுண்டரா, போலியானதா என நிருபிக்கப்படவில்லை என்றும், 2005 நவம்பரில் கவுசர் பீ, சொராபுதீனுடன் கொண்டுசெல்லப்பட்டதும் கொலை செய்யப்பட்டதும் நிருபிக்கவில்லை என்று நீதிபதிம் கூறினார்.
பிழையான தீர்ப்பு
தீர்ப்பில் பிழைகள் இருக்கின்றன. காரணம் எதுவும் கூறாமலே, நீதிமன்றம் 200க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரிக்கவில்லை. துவக்கத்தில் இந்த வழக்கை விசாரித்தவரும், ஷா மற்றும் பல காவல் துறை அதிகாரிகள் குற்றம் செய்தவர்கள் எனக் கூறியவருமான, ரஜ்னிஷ் ராயும் இதில் ஒருவர். பிரஜாபதியின் தாய் நர்மதா பாய் சாட்சியம் அளிக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என சிபிஐயால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது காரணம். தான் காவல் துறையால் கொல்லப்படலாம் என பிரஜாபதி அவரிடம் பலமுறை கூறியிருந்த நிலையில் இந்த சாட்சியம் முக்கியமானதாக அமைந்திருக்கும். நெருக்கடியை மீறி நிலையாக இருந்த இரண்டு முக்கியக் காவல் துறை அதிகாரிகளின் சாட்சியத்தையும் நீதிமன்றம் அலட்சியம் செய்துவிட்டது. இவர்களில் ஒருவர் அமிதாப் தாகூர். இவர் ஒடிசாவில் ஐஜியாக இருப்பவர் என அடையாளம் காட்டும் தி டெலிகிராப் நாளிதழ், “குற்றம்சாட்டப்பட்ட 22 பேருக்கும் சொராபுதீனைக் கொலை செய்ய எந்த நோக்கமும் இல்லை என அவர் நீதிமன்றத்தில் கூறினார். மாறாக அவர்கள் தங்களுக்கு மேலதிகாரிகள் கொடுத்த கட்டளையையே பணியாக நிறைவேற்றினர்” எனக் கூறினார்.
ஷா, வன்ஜரா, பாண்டியன், தினேஷ் எம்.என் மற்றும் அபௌ சுடசாமா ஆகிய ஐந்து பேர், சொராபுதீன் கொலையால் அரசியல் நோக்கிலும், பொருளாதார நோக்கிலும் பலன் பெறக்கூடியவர்கள் எனவும் அவர் கூறினார்.
பிரஜாபதி கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியான சந்தீப் தாம்கடே இன்னும் ஒரு படி மேலே சென்றிருந்தார். ஷா, வன்ஜரா, பாண்டியன் மற்றும் தினேஷ் என்.என் ஆகியோரை இந்தக் கொலையின் முக்கியச் சதிகாரர்கள் என அவர் கூறினார். தற்போது கொஹிமாவில் பணியாற்றும் தாம்கடே, ஷா மற்றும் பிரஜாபதியை உள்ளடக்கிய மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடியானது, குற்றவாளிகள் – அரசியல்வாதிகள் – காவல் துறை ஆகியோர் அடங்கிய கூட்டணியாக இருந்தது என்றும் தெரிவித்தார். ஷா, கட்டாரியா, மற்றும் தாதா அசாம் கான் இதில் இருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார். ஷா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்புகள், பிரஜாபதி என்கவுண்டரில் அவர்கள் பங்கை நிருபிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
சாட்சியமான அசாம் கான் வாக்குமூலம் அளித்தாலும் மாஜிஸ்திரேட் முன் தனது அறிக்கையை வாசிக்கவில்லை. சாட்சியம் அளிப்பதற்கு முன்பும் பின்பும் தான் துன்புறுத்தப்பட்டதாக அவர் கூறினார். உதய்பூர் காவல் துறை அவர் மீது ஏழு வழக்குகளைப் பதிவு செய்தன. அவர் போலீஸ் காவலில் மும்பைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட காவலர் ஒருவர், பொய் வழக்கில் சிக்க வைத்துவிடுவோம் என்று அங்கு தன்னை மிரட்டப்பட்டதாக அசாம் கான் கூறினார். மேலும் ஆஜ்மீர் சிறையில் இருந்து உதய்பூர் சிறைக்கு மாற்றப்படலாம் என்றும் வழியில் பிரஜாபதிக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் ஏற்படும் என்றும் தான் மிரட்டப்பட்டதாகக் கூறினார். அசாம் கானின் மனைவி சாட்சிக்கான பாதுகாப்பைக் கோரினார். ஆனால், நீதிபதி அதை நிராகரித்துவிட்டார். மற்றொரு சாட்சியான மகேந்தர் ஹாலா தானாக முன்வந்து வாக்குமூலம் அளித்தார். ஆனால் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வழங்கிய வாக்குமூலம் தெரிவிக்கப்படவில்லை.
ஷாவுக்கு எதிரான வழக்கில் எந்த நீதிமன்றமும், இரு தரப்பின் அனைத்து சாட்சியங்கள், வாதங்களை கேட்டு, இரு தரப்பும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்த பிறகு, குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்த தீவிரமான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். குஜராத் காவல் துறை அதிகாரிகள் வன்ஜரா மற்றும் பாண்டியனும் இவ்வாறு விடுவிக்கப்படவில்லை. நீதிமன்றங்கள் என்ன செய்துள்ளன என்றால், சாட்சியங்கள் அணிவகுக்கச் செய்யப்பட்டு, திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு முன்பாகத் தங்கள் முன் உள்ள வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளன. இது மிகவும் விநோதமானது. குற்றவியல் வழக்கு நடைமுறைகளுக்கு எதிரானது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது நீதிமன்றம் ஆவணங்களை மட்டும்தான் பார்க்கிறது. எந்த சாட்சியமும் வாக்குமூலம் அளிக்கவில்லை அல்லது குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. எனவே, இந்த நிலையில், இரு தரப்பும் சாட்சியங்களை முன்வைக்க வாய்ப்பு அளிக்காமல், வழக்கைத் தள்ளுபடி செய்வது பற்றி முடிவு எடுக்க மட்டும் அல்ல, சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சாட்சியங்களைச் சீர்தூக்கிப் பார்ப்பதேகூடச் சரியில்லாததாகும்.
ஷா, கத்தாரியா மற்றும் காவல் துறை மூத்த அதிகாரிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள், அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் விசாரிக்கப்படாமல் வழக்கத்திற்கு விரோதமான முறையில் தள்ளுபடி செய்யப்பட்டது, குற்றம்சாட்டப்பட்ட எஞ்சிய 22 பேரை விடுவிப்பதற்கு முன் முக்கிய சாட்சியங்களை அழைத்து விசாரிக்காதது ஆகியவை நீதிமன்றத்தின் நம்பக்த்தன்மையையும் நேர்மையையும் சந்தேகிக்க வைக்கின்றன.
எனினும், இந்த நீதிகான போராட்டம் முடிந்துவிடவில்லை. 1987 ஹாஸ்மிபுரா படுகொலையில் காவலர்கள் தண்டிக்கப்படவே 31 ஆண்டுகள் ஆயின. 1984 தில்லியில் சீக்கியர்கள் படுகொலையில் காங்கிரஸ் தலைவர் சாஜன் குமார் குற்றவாளி என தண்டிக்கப்பட 34 ஆண்டுகள் ஆயின. சொராபுதீன், கவுசர் பீ மற்றும் பிரஜாபதியின் உறவினர்களிடம் அவர்கள் எப்படிக் கொலை செய்யப்பட்டனர் என்று விவரிப்பதற்கான நாள் வரும். நாட்டு மக்களிடம் அவர்களை ஆள்பவர்களின் குணத்தையும் தன்மையையும் உணத்துவதற்கான காலம் பிறக்கும்.
இதை எழுதும்போதே, ஆளும் கட்சிப் பிரமுகர் கொலைக்காகப் பழிதீர்க்குமாறு காவல் துறை அதிகாரிக்கு கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிடுவது ஆடியோவில் பதிவான செய்தியை கேள்விப்படுகிறோம். குற்றவாளியைச் சுட்டுத் தள்ளுமாறு கர்நாடக முதல்வர் அதிகாரியிடம் கூறுகிறார். எந்த பிரச்சினையும் இதனால் வராது என அவர் உறுதி அளிக்கிறார். அரசியல் அதிகாரத்தில் உயர் பீடத்தில் உள்ளவர்கள் சட்ட விரோதமான கொலைகளுக்கு உத்தரவிடுவது மோடி மற்றும் ஷாவின் குஜாரத்துடன் நின்றுவிடவில்லை எனும் வேதனையான உண்மையை இது உணர்த்துகிறது.
குறிப்பு: இந்திய எக்ஸ்பிரஸ் வெளியிட்ட நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான விரிவான செய்தியின் அடிப்படையில் இதில் உள்ள தகவல்கள் திருத்தி அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
ஹர்ஷ் மந்தர்- சரீம் நவீத்
நன்றி: தி ஸ்க்ரால்
https://scroll.in/article/907331/opinion-sohrabuddin-sheikh-case-judgement-betrays-every-principle-of-justice-and-legal-procedure

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக