புதன், 2 ஜனவரி, 2019

திருவாரூர் இடைதேர்தல் .. திமுக வேட்பாளர் யார்? எதிர்கட்சிகள் கடும் ஆர்வம்?

மின்னம்பலம் : “தேர்தல் களைகட்டிவிட்டது திருவாரூரில். இந்தத்
தொகுதியைப் பொருத்தவரை பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். வீரக்கோடி வெள்ளாளப் பிள்ளை, கார்காத்தார் பிள்ளை,சோளியபிள்ளை, யாதவ பிள்ளை எனப் பிள்ளைமார் சமுதாயத்தின் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் வாக்குகள்தான் திருவாரூர் தொகுதியின் வெற்றியை நிர்ணயம் செய்வதாக இருக்கிறது. கலைஞர் உயிருடன் இருந்தவரை இந்தத் தொகுதிக்குள் சாதி அரசியல் வரவில்லை. மக்களும் சாதி பார்க்கவில்லை. கலைஞர் என்ற ஒற்றைச் சொல்லுக்கு மட்டுமே திருவாரூர் கட்டுப்பட்டது. மக்கள் வாக்கும் விழுந்தது. ஆனால், கலைஞருக்குப் பிறகு இங்கே நிலைமை மாறிவிட்டது. தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் எப்படி சாதியை வைத்து வேட்பாளரின் வெற்றி - தோல்வி நிர்ணயம் செய்யப்படுகிறதோ அதே நிலைதான் இன்று திருவாரூர் தொகுதிக்கும். இது திமுக தலைமைக்கும் தெரியாமல் இல்லை.
திமுகவின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். ஆனால், ஸ்டாலினுக்கோ கலைவாணன் மீது நல்ல அபிப்ராயம் கலைஞர் காலத்திலிருந்தே இல்லை. டி.ஆர்.பாலுவுக்கும் அவரது மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் கலைவாணன் நிற்பதில் உடன்பாடு இல்லை. ‘கலைஞர் இடத்துல கலைவாணனை எப்படி வெச்சுப் பார்க்கிறது? அதெல்லாம் சரியாக வராது. கட்சிக்காரங்களும் அதை விரும்பல. கலைஞர் குடும்பத்துல இருந்து ஒருத்தரை நிற்க வைங்க...’ என்று டி.ஆர்.பி.ராஜா வெளிப்படையாகவே அறிவாலயத்தில் சொல்லியிருக்கிறார்.

திருவாரூர் திமுக ஒன்றியச் செயலாளர் தேவா, பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கலைஞரின் மகள் செல்விக்கு தேவாவின் மனைவி மிகவும் நெருக்கம். கடந்த முறை இங்கே கலைஞர் போட்டியிட்ட போது செல்வி வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டார். அப்போது செல்வியோடு உடன் இருந்தவர் தேவாவின் மனைவிதான். அந்த தேவாவும் சீட் வாங்கிவிட வேண்டும் என செல்வி வழியாக முயற்சி செய்து வருகிறார். இந்தத் தகவல் தெரிந்து தேவாவைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் கலைவாணன். ‘நீங்க சீட்டுக்கு முயற்சி பண்றதா கேள்விப்பட்டேன். அதெல்லாம் வேண்டாம் தேவா. அதிமுகவில் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் கொடுக்கிறதா முடிவு பண்ணியிருக்காங்க. உன்னால சமாளிக்க முடியாது. கடனை வாங்கி நீ செலவு பண்ணினாலும், தோத்துட்டா அதுல இருந்து மீண்டு வர நீ ரொம்பவும் கஷ்டப்படுவ... அதனால அமைதியா ஒதுங்கிடு..’ என அவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் கலைவாணன். இப்படியாகத் தனக்கு சீட்டுக்குப் போட்டியாக வருவார்கள் என நினைப்பவர்களை எல்லாம் பேசியே சமாதானப்படுத்தி வருகிறார் கலைவாணன்.
அடுத்து அதிமுகவில், அமைச்சர் காமராஜின் நெருக்கமான நண்பரான கலியபெருமாளின் பெயர் அதிகம் அடிபடுகிறது. இவர் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரை நிறுத்தலாம் என்பது காமராஜின் திட்டம். அதேபோல கலைஞரை எதிர்த்து நின்று டெபாசிட் வாங்கிய பன்னீர்செல்வம் பெயரும் பரிசீலனையில் இருக்கிறது. எடப்பாடியைப் பொருத்தவரை, ‘திருவாரூர் தொகுதியில் எம்.ஜி.ஆர். இருந்தபோதும் சரி, அம்மா இருந்தபோதும் சரி... நாம ஜெயிக்கவே முடியலை. இந்தத் தேர்தலில் நாம ஜெயிச்சே ஆகணும். அதிமுக வரலாற்றில் எம்.ஜி.ஆர். சாதிக்க முடியாததை, அம்மா சாதிக்க முடியாததை எடப்பாடி சாதிச்சார் என்று பேச வைக்கணும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்யுங்க..’ எனச் சொல்லியிருக்கிறாராம் முதல்வர்.
தினகரன் அணியில், எஸ்.காமராஜ் பெயரைத்தான் நிர்வாகிகள் சொல்கிறார்கள். தினகரனின் நெருக்கமான நண்பர் என்பதைத் தாண்டி பெரிய அளவு செல்வாக்கு என்பது மக்களிடம் இல்லை. ஆனால், தினகரன் அவரை நிறுத்துவாரா அல்லது வேறு யாரையாவது யோசிப்பாரா என்ற சந்தேகமும் இருக்கிறது. எப்படியோ திருவாரூரில் மும்முனைப் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.
தொடர்ந்து மெசேஜ் ஒன்றைத் தட்டிவிட்டது வாட்ஸ் அப். “திருவாரூர் நிலவரம் இப்படி என்றால், சென்னையில் கதை வேறு மாதிரியாக இருக்கிறது. திருவாரூர் தேர்தல் நடப்பதில் திமுகவுக்கு ஆர்வம் இல்லை என்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் திருவாரூர் தேர்தலை நடத்தக் கூடாது என இரண்டு வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. இரண்டின் பின்னணியிலும் திமுக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு வழக்கு சி.பி.ஐ. கட்சி போட்டிருக்கும் வழக்கு. இந்த வழக்கில் வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகிறார். இன்னொரு வழக்கு விவசாயச் சங்கத்தின் சார்பில் போடப்பட்டது. இதற்கு சல்மான் குர்ஷித் ஆஜராகிறார். இந்த இரண்டு வழக்கறிஞர்களுக்குமே குறைந்த பீஸே 50 லட்சம். அந்த பீஸை கொடுத்து வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்ததே திமுகதான் என்று சொல்கிறார்கள். ‘இப்போ திருவாரூருக்கு தேர்தல் நடத்தினால் நிச்சயம் செலவு பெருசா இருக்கும். அதிமுகவுக்கு இணையாக நாமும் செலவு பண்ணியாகணும். அப்படியும் ஒருவேளை தோற்றுவிட்டால் அது நமக்குப் பெரிய இழப்பாகிடும். அதனால நாடாளுமன்றத்துடன் இந்தத் தேர்தலைச் சந்திப்பதுதான் சரியாக இருக்கும்...’ என திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரே சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் நேரு, ‘திருவாரூரில் நீங்களே போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும். நீங்க போட்டியிட்டால் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கட்சிக்காரங்க வந்து வேலை பார்ப்பாங்க. நாம ஜெயிக்கிறதும் ஈசியா இருக்கும்..’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ஸ்டாலின் அதை மறுத்துவிட்டாராம். ‘அதெல்லாம் வேண்டாம். உச்ச நீதிமன்றத்தில் தேர்தலுக்குத் தடை வரும். பிறகு பார்க்கலாம்...’ எனச் சொல்லிவிட்டாராம்.” என்று முடிந்தது மெசேஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக