வியாழன், 31 ஜனவரி, 2019

யானை .. வனத்துறையை ஏமாற்றிவிட்டு மீண்டும் ஊருக்குள் வந்த சின்னத்தம்பி ..


tamil.thehindu.com : டாப் ஸ்லிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை கோட்டூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்துள்ளது.
கோவை மாவட்டம் பெரிய தாடகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சின்னதம்பி என்ற ஆண் யானை கடந்த சில மாதங்களாக  மலை அடிவாரத்தில் உள்ள விளை நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து கடந்த 25-ம் தேதி அதிகாலை கோவை கோட்ட வனத்துறையினர் சின்னதம்பி யானையைப் பிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். தடாகம் வனப்பகுதியில் 4 கும்கி யானைகள் துணையுடன் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை லாரி மூலம் உலாந்தி வனச் சரகத்தில் நள்ளிரவு 2 மணிக்கு விடப்பட்டது.

சின்னதம்பி கழுத்தில் மாட்டப்பட்ட ரேடியோ காலர் கருவி மூலம் உலக வன உயிரின மையத்தினர் யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 26 மற்றும் 27-ம் தேதிகளில் உலாந்தி, மானம்பள்ளி வனசரகப் பகுதிகளில் காணப்பட்ட சின்னதம்பி யானை பின்னர் ஆழியாறு பீடர் கால்வாய் வழியாக வனப் பகுதியில் இருந்து கீழே இறங்கி மயிலாடுதுறை, பொங்காளியூர் கிராமங்களில் உள்ள தென்னந்தோப்புகள் வழியாக பயணித்து கோட்டூர் பேரூராட்சியில் உள்ள குமரன் கட்டம் பகுதியில் காலை 7 மணிக்கு ஊருக்குள் நுழைந்தது.
இதையடுத்து பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம், வனவர் பிரபாகரன் கார்டு சுரேஷ் ஆகியோர் தலைமையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய 30 பேர் கொண்ட குழுவினர் சின்னதம்பியை வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறைக்கு போக்கு காட்டிய சின்னதம்பி அங்கலகுறிச்சி கிராமத்தில் ஜெஜெ நகர் அருகில் மீண்டும் விளை நிலங்களில் நுழைந்து வனத்துறையினரை அலைக்கழித்தது.

வனத்துறை அதிகாரிகள்
 இதையடுத்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த சின்னதம்பி யானை பிஏபி வாய்க்கால் பாலம் அருகே வனத்துறையை திருப்பி துரத்தத் தொடங்கியது. வனத்துறையினர் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தும், சைரன்களை அலற விட்டும் யானையை விரட்டினர்.
11 மணியளவில் கோபால்சாமி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் நுழைந்து மலை அடிவாரம் பகுதியில் முகாமிட்டு நின்றுள்ளது. யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடாமல் தடுக்க மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து தலைமையில் வனத்துறையினர் கோபால்சாமி மலை வனச்சுற்று பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட அலுவலர் மாரிமுத்து கூறும் போது, "டாப் ஸ்லிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை கோட்டூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்துள்ளது. இந்த யானையின் நடமாட்டத்தை ரேடியோ காலர் கருவி உதவியுடன் கண்காணித்து வருகிறோம். ஒரு வாரம் அதன் நடமாட்டம் கண்காணிக்கப்படும். விளை நிலங்களில் சேதப்படுத்துதல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பின் 2 கும்கி யானைகள் துணையுடன் வனப்பகுதிக்குள் விரட்டப்படும். சின்னதம்பியை மீண்டும் இடமாற்றம் செய்வதோ அல்லது பிடிப்பது குறித்து மேல் அதிகாரிகளின் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக