வியாழன், 10 ஜனவரி, 2019

இதென்ன அநியாயமா இருக்கு? . கலைஞரின் ஒருநொடி டில்லியில் எழுப்பிய பெருங்கோபம்.


Ashok.R : இந்த தடவையும் ஸ்டாலின் அவ்ளோதானா? இந்த வாட்டியும் திமுக வேடிக்கை பாக்க வேண்டியதான் போல... என்றெல்லாம் நக்கல் அடிக்கும் மூளைச் சலவை செய்யப்பட்ட தமிழர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். ஏதோ திமுக ஆட்சிக்கு வருவது திமுகவுக்கு மட்டுமே நன்மை பயக்கும் ஒன்று என்கிற கருத்து ஒழுங்காக சுத்தம் செய்யப்படாத பொதுக் கழிப்பிடத்தைப் போல அவர்கள் மூளையில் செருகி வைக்கப்பட்டிருக்கிறது. ஏதோ ஜெயலலிதா இருந்தபோது இதைச் சொன்னால் கூட பரவாயில்லை. ஆனால் எடப்பாடி காலத்திலும் எப்படி இவர்களால் சொல்ல முடிகிறது? நீட் மூலம் நம் குழந்தைகளின் படிப்பு முற்றிலும் போய்விட்டது. இன்று இட ஒதுக்கீட்டையும் கண்முன் களவாடிக் கொண்டுவிட்டார்கள். அடுத்து கட்டாய இந்தித் திணிப்பைக் கொண்டு வருகிறார்கள்.
வரலாற்றில் எப்போதாவது இப்படி தங்களுக்கு முழுச்சாதகமாக அமையும் அரசை வைத்து தங்கள் இனத்துக்கு என்னவெல்லாம் நல்லது செய்துகொள்ள முடியுமோ, திராவிட இனத்துக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டுவிட்டார்கள். முன்காலத்தில் திராவிடர்களுக்கும் இப்படி முழுச்சாதகமாக ஒரு அரசு அமைந்தது.


அது வி.பி.சிங் அரசு. அதை வைத்து தனது மாநிலத்தில் இருக்கும் தன் இனத்துக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அடுத்தடுத்து பல நன்மைகளைச் செய்துகொடுத்தார் கலைஞர்.கருணாநிதி.
ஆனால் நமக்கோ நன்றி என்பது துளியும் இல்லை. எவனோ கொளுப்பெடுத்து எவனையோ கொல்லப்போக, நாமோ கலைஞரையும் ஆட்சிக்கு வரவிடவில்லை. வி.பி.சிங்கையும் ஆட்சிக்கு வரவிடவில்லை.
ஆனால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் தமிழர்களே... பார்ப்பனர்கள் உங்களைப் போல முட்டாள்கள் அல்ல. தங்களுக்கு நன்மை செய்யும் அரசை மீண்டும் மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த என்ன்ன்ன்ன்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எதை வேண்டுமானாலும் ஆதரிப்பார்கள். அமித்ஷா மகனின் வருமானம் 16000 மடங்கு உயர்ந்ததே எவனாவது வாயைத் திறந்தானா? ஆனால் உதயநிதி திருவாரூரில் நிற்கப்போகிறார் என்பதை கடுமையாகப் பரப்பி நம்மையெல்லாம் அதையே பேசவைத்து ஏதோ அது ஒன்றுதான் நாட்டில் பிரச்சினை போல மடைமாற்றுவார்கள். ஆனால் அமித்ஷாவின் கொள்ளுப்பேரன் தேர்தலில் நின்றாலும் தங்கள் வேலை நடக்கும்வரை பார்ப்பனர்கள் எந்தக் கூச்சமும் இன்றி ஓட்டு குத்துவார்கள்.
ஆனால் நாமோ, cbse சிறந்தது, சமச்சீர் மட்டம் என்று திரும்பத் திரும்பச் சொன்னால் நம்புவோம். நீட் கல்வித்தரத்தை உயர்த்தும் என்றால் நம்புவோம். எட்டு லட்சம் சம்பாதிக்கும் உயர்சாதி ஏழைகள் பாவம்தானே என்றால் நம்புவோம். அதிமுக நீட் தேர்வுக்கு சொம்படிச்சா என்னப்பா, நமக்கு உதயநிதி தானே முக்கியம். தினகரன் பாஜக கதவுகளை எல்லாம் தட்டித் தட்டி சோர்ந்துபோன ஆளாக இருந்தால் என்ன, டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றினால் என்ன? எந்த வித கூச்சமும் நாச்சமும் இன்றி நாம் அவரை ஆதரிப்போம். ஏன்? ஏனென்றால் நமக்கு திமுவை பிடிக்காது. பொடனியில் அடித்ததைப் போல உண்மையைச் சொல்லும் பல திமுககாரர்களைப் பிடிக்காது. ஆஹா... எவ்வளவு அழகான நடுநிலை அரசியல்!!
என்றாவது ஒரு பார்ப்பனன் நடுநிலை அரசியல் பேசி, உட்டோப்பிய கனவு கண்டு, தூய்மைவாதம் பேசி பார்த்திருக்கிறீர்களா? வாருங்கள் வாக்கு போடாமல் இயக்க அரசியல் மட்டுமே செய்வோம் எனப் பேசி பார்த்திருக்கிறீர்களா? மாட்டவே மாட்டார்கள். உங்களை பேசவைப்பார்களே தவிர அவர்கள் பேச மாட்டார்கள். ஆயிரம் விமர்சனங்கள் ஒரு கட்சியின் மீது இருந்தாலும் தங்கள் இனத்துக்கு எந்தக் கட்சியால் அதிகபட்ச நன்மை இருக்குமோ அந்தக் கட்சிக்கு ஓட்டை குத்துவார்கள். அதுமட்டுமல்ல, அந்தக் கட்சிதான், அந்த நபர்தான் நாட்டுக்கே நல்லது, எல்லோருக்கும் நல்லது, சர்வரோக நிவாரணியே அந்தக் கட்சிதான் என சிரமம் மேற்கொண்டு பரப்பி வெற்றி அடைவார்கள். மோடி என்கிற 3% பணக்காரர்களுக்காகவும், 4% பார்ப்பனர்களுக்காகவும் மட்டுமே உழைக்கும் ஒரு அடிமையை ஒட்டுமொத்த இந்தியா தலையிலும் கட்டி வைத்தார்களே அதைப்போல!!
ஈழமாயையை கட்டமைத்து ஜெயித்தார்கள். 2ஜி எனும் கட்டுக்கதையை கட்டி ஜெயித்தார்கள். நீட்டில் ஜெயித்தார்கள். ஜி.எஸ்.டியில் ஜெயித்தார்கள். இதோ இட ஒதுக்கீட்டிலும் ஜெயித்துவிட்டார்கள். நாளை இந்தி திணிப்பிலும் ஜெயிப்பார்கள். இதிதெலாம் பெரும்சோகம் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஜெயிப்பது அல்ல. தமிழக மக்கள் மனங்களிலும் இதையெல்லாம் சரி என உணர வைத்து ஜெயிப்பதே பெருஞ்சோகம். அதுதான் நமக்கும், நம் குழந்தைகளுக்கும் சரிசெய்ய முடியாத பேரிழப்பை கொடுத்துவிட்டுப் போகப்போகிறது.
எதையெல்லாம் பலநூறு ஆண்டுகள் போராடிப்பெற்றோமோ அதையெல்லாம் ஐந்தாண்டுகளில் சரசரவென இழந்திருக்கிறோம். அதுவும் நம் முழு ஒத்துழைப்புடன். இது எல்லாமே காலம் காலமாக, எதெல்லாம் பார்ப்பனர்களுக்கு நல்லதோ அதுதான் நாட்டுக்கும் நல்லது, எதெல்லாம் பார்ப்பனர்களுக்கு கெட்டதோ அதெல்லாம் நாட்டுக்கும் கெட்டது என்கிற பரப்புரையை மட்டுமே மையநோக்காகக் கொண்டு இயங்கிவரும் பார்ப்பன ஊடக அமைப்பு எனும் கண்ணுக்கு தெரியாத கோயபல்ஸ் அமைப்பினால் சாத்தியப்பட்டிருக்கிறது.
பெரியார் மிகத்தெளிவாக சொல்கிறார். "வாக்கு அதிகாரத்தை பயன்படுத்த பார்பனர்களிடம் இருக்கும் தெளிவு நம் மக்களிடம் இல்லை. அதனால் சுலபமான வழி ஒன்று உண்டு. பார்ப்பனர்கள் யாரை எதிர்க்கிறார்களோ அவர்களை ஆதரியுங்கள். பார்ப்பன ஊடகங்கள் யாரை வில்லன்களாக சித்தரிக்கிறதோ அவர்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரியுங்கள். இது ஒன்றுதான் வழி," என்கிறார்.
ஆனால் நமக்குள் இருக்கும் விபீடணர்களோ பார்பனர்களுடன் சேர்ந்துகொண்டல்லவா நம்மை காட்டிக்கொடுக்கிறார்கள்!!! நம் மக்களை முட்டாள்கள் ஆக்குகிறார்கள். மாடுமேய்க்க வைக்கிறேன் என்கிறான் ஒருவன். படிப்பெல்லாம் ஒன்றுமே இல்லை. தூக்கிப்போட்டு இயக்க அரசியலுக்கு வா என்கிறான் இன்னொருவன். திமுகவும், அதிமுகவும், பாஜகவும் ஒன்னுதான் சார் என்கிறான் இன்னொருவன். தாங்கள் ஆளும் மாநிலத்தில் கைரிக்‌ஷாவைக் கூட ஒழிக்க முடியாத ஒருவன் ரிக்‌ஷாவையே கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட தமிழ்நாட்டுக்கு பாடம் எடுக்கிறான்.
இனியும் அறிவின்மைமிக்க ஒரு பேரினமாக வாட்சப்களையும், ஆமைக் கறிக்கதைகளையும், யாருக்கும் ஓட்டுப்போடாதீர்கள் விஷத்தையும், பார்ப்பன பொய்ப்பிரச்சாரங்களையும் பருகிக்கொண்டே இருந்தோமேயென்றால் சிறுகச் சிறுக சேர்த்துவைத்ததை எல்லாம் கூட துடைத்து வழித்துவிட்டுப் போய்விடுவார்கள். அரசியல்/சமூகப் புற்றுநோயின் இறுதி ஸ்டேஜில்தான் திருந்துவேன் என்கின்றவர்களை யாரால் என்ன செய்ய முடியும்!!!
ஆனால் நேத்து கேட்டதே ஒரு குரல், "இதென்ன அநியாயமா இருக்கு," என்கிற குரல். அது ஒற்றைக் குரல் அல்ல. அது பெரியாரின் கைத்தடியில் இருந்து எழுந்த சத்தம். அண்ணாவின் பேனாவிலிருந்து எழுந்த சத்தம். மெரினாவில் இருக்கும் கலைஞரின் ஒருநொடி டில்லியில் எழுப்பிய பெருங்கோபம். அது ஒன்றுதான் ஒளிக்கீற்று. அது ஒன்றுதான் விமோசனம். அது ஒன்றுதான் விமோசனம்!
-டான் அசோக்,
10/09/2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக