ஞாயிறு, 6 ஜனவரி, 2019

திமுகவில் அதிர்வை ஏற்படுத்திய பதவி பறிப்பு – அதிரும் தொண்டர்கள்

dgdnakkheeran.in - ராஜ்ப்ரியன் : வேலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் இராணிப்பேட்டை காந்தி எம்.எல்.ஏ..  ராணிப்பேட்டை ந.செ வாக இருந்தவர் பிஞ்சி.பிரகாஷ். கடந்த டிசம்பர் 30ந்தேதி, இராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம், சோளிங்கர் பகுதி கழக நிர்வாகிள் மா.செ காந்தி அழைப்பின் பேரில் அவரது அலுவலகத்துக்கு வந்தனர். அரக்கோணம் நாடாளமன்ற தொகுதி பொறுப்பாளர் சபாபதிமோகன் இந்த கூட்டத்துக்கு வந்திருந்தார். வரும் 8ந்தேதி முதல் ஒவ்வொரு கிராமத்திலும் திமுக சார்பில் நடத்தப்படும் கிராமசபா கூட்டத்தை எப்படி நடத்துவது என்பது குறித்த கூட்டமது. அந்த கூட்டத்தில் திடீரென என்னை பேச அனுமதியுங்கள் என இராணிப்பேட்டை ந.செ. பிஞ்சி.பிரகாஷ் மைக் வாங்கி பேசியுள்ளார். அப்போது, இந்த மாவட்டத்தில் கட்சி அழிவதே மா.செ காந்தியால் தான். கட்சிக்காரனுக்கு எதுவும் செய்வதில்லை, மதிப்பதில்லை என சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
கோபமான காந்தி, ஏய் உட்காருடா எனச்சொல்லியுள்ளார். இது இன்னும் பிரகாஷ்க்கு டென்ஷனை தர காரசார விவாதமாகியுள்ளது. ஒருக்கட்டத்தில் திமுக கரை வேட்டியை பிரகாஷ் அவிழ்த்து காந்தி மீது வீசியுள்ளார். இது கூட்டத்தில் கலந்துக்கொண்ட கட்சியினரை அதிருப்தியடைய வைத்துள்ளது. ராணிப்பேட்டை ந.செ பிரகாஷ்சை அங்கிருந்து வெளியே அனுப்பியுள்ளனர்.


நான் கட்சி தலைமையை சந்தித்து புகார் தரப்போகிறேன் என்று கூறிவந்துள்ளார் பிரகாஷ். இங்கு நடந்ததுப்பற்றி சபாபதிமோகன், காந்தி இருவரும் திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 4ந்தேதி பிரகாஷ்சை ந.செ பதவியில் இருந்து நீக்கியும், புதிய நகர பொறுப்பாளராக காரை.பூங்காவனம் என்பவரை நியமித்துள்ளார் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன்.


இந்த நீக்கம், புதிய பொறுப்பாளர் அறிவிப்பு தான் வேலூர் மாவட்ட திமுக தொண்டர்களை அதிரவைத்துள்ளது. அதுப்பற்றி நம்மிடம் பேசியவர்கள், திமுகவில் சட்ட திட்டம் கடுமையாக பின்பற்றப்படும். திமுக தலைவராக கலைஞர் இருந்தபோது, ஒரு கிராமத்தில் கூட்டம் பேசுகிறார் என்றால் அந்த கிராமத்தின் கி.செவை மேடையில் முதல் வரிசையில் அமரவைப்பார். ஒரு நிர்வாகி மீது குற்றச்சாட்டு வருகிறது என்றால், அதை மா.செ என்றல்ல மேல்மட்ட நிர்வாகிகளே கூறுகிறார்கள் என்றாலும் விசாரணை நடத்தி அதன்பின்பே நடவடிக்கை எடுக்கவைப்பார்.

தற்போது தலைவர் பதவிக்கு வந்துள்ள ஸ்டாலின், அந்த நடைமுறையை கைவிட்டுவிட்டாரோ என பயம் வந்துள்ளது. இத்தனைக்கும் பிரகாஷ், உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு ந.செ வாக வெற்றி பெற்றவர். மா.செவை குற்றம்சாட்டினார் என ந.செ மீது நடவடிக்கை எடுத்தார்கள் என்றால் நாளையே கழக பொருளாளர் என்கிற முறையில் துரைமுருகன், மா.செ காந்தி மீது நடவடிக்கை எடுங்கள் என்றால் தலைவர் எடுத்துவிடுவாரா என கேள்வி எழுப்புகிறார்கள். கடுமையான நடவடிக்கை தேவைதான் அதை வரவேற்கிறோம், அதற்காக குற்றம்சாட்டப்படுபவரிடம் ஒரு சிறு விளக்கத்தையாவது கட்சி கேட்டதாக தெரியவில்லை என்கிறார்கள்.

இதுப்பற்றி மா.செ காந்தி தரப்பில் விசாரித்தபோது, மா.செ என்பவர் மாவட்டத்தில் கட்சியின் தூண். அவர் மீது கட்சி ரீதியாக குற்றம்சாட்டுவது சரிதான். அதை எந்த இடத்தில் சொல்ல வேண்டும் என்றுள்ளது. கட்சியின் ந.செ என்பவர் மா.செ வை மதிக்காததோடு, இடுப்பில் கட்டியுள்ள கட்சியின் கரை வேட்டியை அவிழ்த்து வீசுவது என்பது கட்சியை அவமானப்படுத்துவதற்கு சமம். அதை ந.செ பதவியில் இருப்பவர் செய்திருக்ககூடாது, சரியற்ற செயலும்கூட. இந்த காரணத்தால் தான் அவர் மீது தலைவர் கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளார் என்கிறார்கள்.

எதுவாக இருந்தாலும் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்பதே கட்சியினரின் பொதுவான கருத்தாக உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக