சனி, 19 ஜனவரி, 2019

கொடநாடு .. மனோஜ் சயன் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து .. எடப்பாடி தரப்பு புல் கியரில்?



“மின்னம்பலம் :கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசிய சயன் மற்றும் மனோஜ் இருவரையும் ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்துவிட வேண்டும் எனத் துடியாய்த் துடிக்கிறது தமிழக காவல் துறை. ஆனால், அவர்களோ நேற்று ஜனவரி 18 எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் கேரளாவுக்கே போய்விட்டார்கள். சயன் விஷயத்தில் காவல் துறை ரொம்பவே கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. அதற்கு காரணம் சயனின் வாக்குமூலம் என்பது இப்போது மிகவும் கவனிக்கத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.
எழும்பூர் நீதிமன்றத்துக்கு வந்த சயன், மனோஜ் ஆகிய இருவரிடமும் கேரளாவை சேர்ந்த சிலர் மூலமாகவே நேற்று பேரம் பேசப்பட்டிருக்கிறது. ‘எனக்கு எதுவும் தெரியாது.. நீங்க சயன்கிட்ட பேசிக்கோங்க..’ என தன்னிடம் பேரம் பேசியவர்களை தவிர்த்துவிட்டார் மனோஜ். சயனோ, ‘என் பொண்டாட்டி புள்ளைய பறிகொடுத்துட்டு நான் நடு ரோட்டுல நாய் மாதிரி சுத்திட்டு இருக்கேன். என்கிட்டயே பேரம் பேசுறீங்களா? உங்ககிட்ட எப்படி நான் சமாதானமாகப் போக முடியும்? இதைப் பத்தி இனி பேசாதீங்க..’ என கோபமாகவே சொல்லியிருக்கிறார்.

தற்போது தூத்துக்குடியில் இருக்கும் காவல் துறை அதிகாரியான முரளி ரம்பாதான் அப்போது நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்து கொடநாடு வழக்கை தனி கவனம் எடுத்து விசாரித்தவர். அவரை வைத்தும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ‘ஆரம்பத்துல கனகராஜ் மரணத்திலோ, உன்னோட விபத்திலோ சந்தேகம் இல்லைன்னுதானே நீ சொல்லிட்டு இருந்தே... இப்போ எதுக்கு சந்தேகத்தை கிளப்பிட்டு இருக்கே. முன்பு என்ன சொன்னியோ அதையே சொல்லு’ என முரளி ரம்பா கேட்டிருக்கிறார். ஆனால், சயன் அதையும் ஏற்க மறுத்துவிட்டார். இதுவும் நடக்காமல் போக, கேரளாவைச் சேர்ந்தவரும் இப்போது சென்னையில் வசிப்பவருமான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் மூலமாகவும் சயனுடைய கோபத்தைத் தணிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் சயன் எதற்கும் பிடிபடுவதாக இல்லையாம்.
எல்லா இடங்களிலும் சயன் கொடுத்திருக்கும் வாக்குமூலம் என்பது தெளிவாக ஒரே மாதிரியாக இருப்பதுதான் காவல் துறையால் அடுத்தகட்டத்துக்கு நகரமுடியாமல் அப்படியே இருக்க வைத்திருக்கிறது. போலீஸ், நீதிமன்றம் என எல்லோரிடமும் சயன் சொல்லியிருப்பது இதுதான்...
‘ஆரம்பத்துல ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டன்ல டிரைவராக இருந்தாரு கனகராஜ். அவரை வேலைக்கு சேர்த்துவிட்டது எடப்பாடியை சேர்ந்த சரவணன். கனகராஜ் சொன்னா என்ன வேணும்னாலும் போயஸ்கார்டனில் நடக்கும். அந்த அளவுக்கு செல்வாக்குடன் இருந்தாரு. சரவணன் சேர்த்துவிட்ட ஆளுக்கு இவ்வளவு செல்வாக்கா என்றுதான் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா அம்மாகிட்ட போட்டுக் கொடுத்து அவரை காலி பண்ணினாரு. டிரைவர் வேலையில் இருந்து தூக்கினாலும் கார்டனுக்கு போக வரத்தான் இருந்தாரு. ஜெயலலிதா அம்மா இறந்து, எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றதும் அவரைப் பார்க்கப் போறதா சொன்னாரு. ‘அவருக்குதான் உன்னை பிடிக்காதே’ என்று நான் கேட்டேன். அதுக்கு கனகராஜ், ‘ இப்போ அதெல்லாம் பார்த்தால் ஆகுமா? அவருதான் முதல்வர். எங்க ஊருக்காரரு...’ என்று சொல்லிவிட்டுப் போனார். போனவர், முதல்வருடன் செல்ஃபி எல்லாம் எடுத்து வந்து என்னிடம் காட்டினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமியை கனகராஜ் சந்தித்தபோதுதான், கொடநாட்டில் ஆவணங்களை எடுக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். இந்த வேலைக்கு தமிழ்நாட்டு ஆளுங்க வேண்டாம். கேரளா ஆளுங்களை வெச்சு செய்யச் சொல்லி எடப்பாடி பழனிசாமிதான் சொல்லியிருக்காரு. அதுக்கு முன்பே கனகராஜும் நானும் நண்பர்கள் என்பதால், என்னிடம்தான் விஷயத்தை சொல்லி ஆளு கேட்டாரு. கேரளாவுல எனக்கு தெரிஞ்ச, வேற வேல பார்த்துட்டு இருக்கிற 10 பேரை நானே செலக்ட் பண்ணினேன். ‘கொடநாட்டுல போய் எடுக்க வேண்டியதை எடுத்துட்டா 5 கோடி கிடைக்கும். நாம ஷேர் பண்னிக்கலாம்’ என கனகராஜ் சொன்னார். அதை நம்பித்தான் நான் ஆட்களை ரெடி பண்ணினேன். ஒரே இடமா இல்லாமல் கேரளா முழுக்க இருந்து வேற வேற வேலை பார்க்கிறவங்களைத்தான் இதுக்காக செலக்ட் பண்ணினேன்.
டாகுமெண்ட் எடுக்கப் போறோம் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். மற்ற எல்லோருக்கும் பல கோடி பணத்தை எடுக்கப் போறோம்னுதான் சொல்லி கூட்டிட்டுப் போனோம். வந்த யாருக்கும் இது ஜெயலலிதா வீடுன்னு தெரியாது. பலருக்கு ஜெயலலிதாவையே தெரியாது. அதனால ஆளுங்களை கூட்டிட்டு வருவது எனக்கு வசதியாகப் போயிடுச்சு.
எடப்பாடி பழனிசாமிதான் இதை செய்யச் சொன்னாரு என்பது தெரிஞ்சவங்க இரண்டு பேருதான். ஒன்று கனகராஜ். இன்னொருவர் நான். கனகராஜ் இப்போ உயிரோடு இல்லை. நானும் இருக்கக் கூடாதுன்னுதான் நினைக்கிறாங்க. கேரளாவுக்கு நான் போனாலும் என்னை யாராவது பின் தொடர்ந்துட்டே இருக்காங்க. நான் கொடநாட்டுக்குள்ள கொள்ளையடிக்க போனேன் என்பது என் வீட்டிலோ என் மனைவிக்கோ தெரியாது. அது தெரியாமலேயே அவ செத்துப் போயிட்டா. படுத்தா தூக்கம் வரவே மாட்டேங்குது. ‘எதுக்காக என்னையும் குழந்தையும் கொலை செஞ்சாங்க. நீங்க என்ன தப்பு செஞ்சீங்க? நாங்க என்ன தப்பு செஞ்சோம்?’னு கண்ணை மூடினா என் மனைவி வந்து கேட்கிறா. அவளுக்கு நான் என்ன பதில் சொல்றது? இதை ஏன் முதல்லயே சொல்லவில்லை என எல்லோரும் கேட்கிறாங்க.
சொல்றதுக்கு முன்னாடியே கொலை செய்ய ப்ளான் போட்டவங்க, சொன்னால் என்னை விட்டு வைப்பாங்களா? நேரம் பார்த்து சரியான ஆள் மூலமாக வெளியே கொண்டு வரணும்னுதான் பார்த்துட்டு இருந்தேன். அப்போதான் மேத்யூ பற்றி சொன்னாங்க. நான் தான் அவரைத் தேடிப் போனேன். விஷயத்தை எல்லாம் சொல்லி அவரை கொடநாட்டுக்கும் அழைச்சிட்டு வந்தேன். என்னவெல்லாம் செஞ்சோம் என்பதை அவருகிட்ட ஒவ்வொரு இடமாக கூட்டிட்டுப் போய் காட்டினேன். அதைத்தான் அவரு மீடியாவுக்கு சொல்லி இருக்காரு. எந்த அரசியல் கட்சிக்காரங்களும் என்னை பேச சொல்லவில்லை. நான் பேசுறது எல்லாம் என் மனைவிக்காக.. என் குழந்தைக்காக...’ என்பதுதான் சயன் சொல்லி இருப்பது. போலீஸ், வழக்கறிஞர்கள் சிலர், அதையும் தாண்டி சிலர் என பலரும் சயனை சமரசம் செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால் அவர் உறுதியாக இருக்கிறார்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “கொடநாடு விவகாரத்தை நீர்த்துப் போக செய்ய எந்த விவகாரத்தை கையில் எடுப்பது என முதல்வருக்கு பல தரப்பில் இருந்தும் டிப்ஸ் கொடுத்து வருகிறார்களாம். எந்த விவகாரம் புதிதாக முளைக்கப் போகிறதோ?” என்ற ஸ்டேட்டஸுக்கும் போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக