செவ்வாய், 15 ஜனவரி, 2019

கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு

கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவர் விடுவிப்புமாலைமலர் : கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றினர். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் யாருமே நெருங்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் காணப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவரது தூண்டுதலின் பேரிலேயே கொலை-கொள்ளையில் ஈடுபட்டதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.


முக்கிய ஆவணங்களை கனகராஜ் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அவர் மர்மமான முறையில் கார் விபத்தில் பலியானார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் கைதான கேரளாவை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் ‌சயனின் மனைவி, மகள் ஆகியோரும் விபத்தில் பலியானார்கள். ‌ஷயான் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்படி 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடநாடு சம்பவம் தொடர்பாக ‌சயன், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைதானார்கள்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த 11-ந்தேதி தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல், கொடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர்.

அப்போது கொடநாடு கொலை தொடர்பாக பரபரப்பான வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். தன் மீதான இந்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியான ராஜன் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், ‌சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர். அங்கு தனியார் விடுதியில் தங்கி இருந்த ‌சயன், மனோஜ் இருவரையும் நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இரவோடு இரவாக இருவரையும் சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை 4.15 மணியளவில் சென்னை வந்த விமானத்தில் ‌சயன், மனோஜ் ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

விமான நிலையத்தில் இருந்து 5 மணியளவில் வெளியில் வந்த போலீசார் அங்கு தயாராக இருந்த போலீஸ் வேனில் 2 பேரையும் ஏற்றி எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் சயன், மனோஜ் இருவரையும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூம் நீதிமன்ற நீதிபதி  சரிதா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். தொடர்ந்து சயன், மனோஜ் மீதான விசாரணை நீதிபதி முன்பு 4 மணிநேரம் நடைபெற்றது.  விசாரணையின் முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். 

விடுவிக்கப்பட்ட சயன், மனோஜ் வரும் 18ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும் விசாரணையின் போது வழக்கறிஞருடன் வரும் 18ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் பிணையுடன் வருமாறு நீதிபதி சரிதா உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக