ஞாயிறு, 13 ஜனவரி, 2019

ஐந்து அமைச்சர்களின் சொத்து ஆவணங்கள்! கொடநாடு மர்மத்தில் உடையும் உண்மைகள்!

மின்னம்பலம் : கொடநாடு கொள்ளையும்
ஐந்து அமைச்சர்களின் சொத்து ஆவணங்கள்! கொடநாடு மர்மத்தில் உடையும் உண்மைகள்!
கொலையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கி இருக்கிறது. எதிர்க்கட்சிகள், எதிரி கட்சிகள் என எல்லோரும் எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி ஒரு சிக்கலை எடப்பாடி எதிர்பார்க்கவில்லை.
கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அமைச்சர்
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை என்ற ஒரு புகாரை டிஜிபியிடம் கடந்த ஆண்டிலேயே கொடுத்திருக்கிறார் தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல்.
அத்துடன் சில ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார் வெற்றிவேல். ‘கொடநாடு கொலையும் கொள்ளையும் நடந்த முதல்நாள் இரவு கோவையில் இருந்து சிலர் கோத்தகிரிக்கு வந்ததையும், அங்கே ரூம் போட்டு தங்கியதையும், இரவு ஹோட்டலில் இருந்து கிளம்பிப் போனதையும், அவர்களை கொடநாட்டில் பார்த்த ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால், டிஜிபி அதை விசாரிக்கவோ பெரிதாக எடுத்துக் கொள்ளவோ இல்லை. அதற்கு காரணம், வெற்றிவேல் சொன்ன புகாரில், கொலையாளிகளுக்கு ரூம் போட்டுக் கொடுத்தது, கோவையில் இருந்து அவர்களை அனுப்பி வைத்தது என எல்லாமே அமைச்சர் ஒருவர்தான். அந்த அமைச்சருக்கும் விசாரணை அதிகாரிக்கும் அதிக நெருக்கம் இருக்கிறது. அதனால் என்னதான் விசாரித்தாலும் உண்மைகள் வராது என்று சொல்லியிருக்கிறார். அதனால்தான் அவரது புகாரை கிடப்பில் போட்டுட்டாங்க...’ என்று சொல்கிறார்கள் வெற்றிவேல் ஆதரவாளர்கள். அதனால் ஏற்கெனவே கொடுத்த பழைய புகாரை மறுபடியும் விசாரிக்க வேண்டும் என்பதே வெற்றிவேல் தரப்பின் கோரிக்கை.
கொடநாட்டில் இருந்து திருடப்பட்டது என்ன?


தினகரன் தரப்பில் சொல்லப்படும் இன்னொரு தகவல் இதுதான். ‘அம்மா முதல்வராக இருந்தபோது அப்போது அமைச்சர்களாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, வீரமணி ஆகியோர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தார்கள் என்ற புகார் வந்ததை தொடர்ந்து அவர்களை அழைத்து விசாரணை நடத்தினார்கள். அவர்களின் சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்களையும் அப்போது பறிமுதல் செய்தார்கள். அது எல்லாமே கொடநாட்டில்தான் இருந்தது. அந்த சொத்துப் பத்திரங்களை குறிவைத்துதான் கொடநாடு கொள்ளை சம்பவம் நடந்தது. மற்றபடி அங்கிருந்த பணம், நகை என எதையும் அந்த கும்பல் கொள்ளையடிக்கவில்லை. கொடநாட்டில் இந்த டாகுமெண்ட் எல்லாம் இருக்கும் தகவல் எடப்பாடிக்கும், பன்னீருக்கும்தான் தெரியும். அதனால் அவர்கள்தான் இந்த காரியத்தை செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை’ என்று புகாருக்கான காரணத்தை சொல்கிறார்கள்.
சமுத்திரன் சரவணன் எப்படி இறந்தார்?
விபத்தில் இறந்துபோன ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜை போயஸ் கார்டனில் வேலைக்கு சேர்த்துவிட்டவர் சமுத்திரம் சரவணன். இவர் சேலம் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர். கடந்த 2011 ம் ஆண்டு இந்த சரவணன் தனது மகனை ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளி ஹாஸ்டலில் டிராப் செய்துவிட்டு மனைவியுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சங்ககிரிக்கு அருகே லாரி ஒன்றை முந்த முயன்ற போது, ஏற்பட்ட விபத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சமுத்திரம் சரவணன் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக இப்போது சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது தினகரன் டீம். சரவணணின் மரணத்துக்குப் பிறகுதான் எடப்பாடி அடுத்தடுத்து பொறுப்புகளுக்கு வந்தார். அதனால் சரவணன் மரணம் பற்றியும் காவல் துறை விசாரிக்க வேண்டும் என கேட்க ஆரம்பித்துள்ளனர்.

பன்னீர் வீட்டுக்குப் போன்!
டிரைவர் கனகராஜ் விபத்தில் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்திருக்கிறார். சென்னையில் இருந்தபடி பன்னீர்செல்வம் வீட்டுக்கு போனில் பேசி இருக்கிறார். போனை எடுத்தவர் பன்னீரின் இளையமகன் ஜெய்பிரதீப். அதன் பிறகு பன்னீர் வீட்டுக்கும் வந்திருக்கிறார் கனகராஜ். அப்போது ஜெய்பிரதீப்புடன் ஏதோ பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அதன் பிறகுதான் விபத்தில் இறந்துவிட்டார் கனகராஜ். கனகராஜின் செல்போன் ஹிஸ்டரியை கையில் எடுத்ததில் அவர் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தியிருக்கிறார். இரண்டில் இருந்துமே அதிமுகவில் பலருடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். குறிப்பாக எம்.எல்.ஏ. ஆறுகுட்டியுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். ஆறுகுட்டியிடம் சில மாதங்கள் டிரைவராகவும் இருந்திருக்கிறார் இந்த கனகராஜ். ஆனால், இதையெல்லாம் ஏனோ வழக்கை விசாரித்த போலீஸார் வெளிப்படையாக சொல்லாமல் மறைத்துவிட்டார்களாம்.
கொடநாட்டுக்கு தினகரன் ஆள் அனுப்பினாரா?

அமைச்சர் ஜெயகுமாரும், எடப்பாடியும் கொடநாடு விவகாரம் சம்பந்தமாக விளக்கம் கொடுத்தார்கள். ஆனால், தொலைக்காட்சிகளில் இது சம்பந்தமாக நடக்கும் விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களுக்கு கட்சித் தலைமையில் இருந்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. ‘நம்ம தரப்பை நாம சொல்ல வேண்டாமா?’ என ஒரு செய்தி தொடர்பாளர் கேட்டிருக்கிறார். ‘நாம அங்கே போய் அசிங்கப்பட்டு வருவதை விட, போகாமல் இருப்பதே நல்லது’ என சொல்லியிருக்கிறார்கள் தலைமையில் இருந்து. கொடநாடு கொலை தொடர்பான விவாதங்களை அதிமுகவினர் தவிர்த்து வருகிறார்கள். இதையே வாய்ப்பாக பயன்படுத்தி தினகரன் டீம் போட்டுத் தாக்க ஆரம்பித்துள்ளது.
அதே நேரத்தில், ‘கொடநாட்டில் டாக்குமெண்ட் இருக்கு என்றால் அந்த தகவல் எங்களுக்கு தெரிஞ்சதுக்கு முன்பே தினகரனுக்குத்தானே தெரிஞ்சிருக்கும். அப்போ அவருதானே ஆளை அனுப்பி இருப்பாரு. அதை ஏன் யாரும் யோசிக்கவே இல்லை?’ என்று கேட்கிறார் கொங்கு மண்டலத்து அமைச்சர் ஒருவர்.
எப்படியோ தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைக்க வேண்டிய பொறுப்பு எடப்பாடிக்கு இருக்கிறது. செய்வாரா எடப்பாடி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக